Sunday, August 2, 2015

கொண்டாடப்படவேண்டிய அப்துல் கலாம்






திரும்பி பார்க்கிற எல்லா திசைகளிலும், கடந்த சில நாட்களாய், கலாம் வியாபித்து இருக்கிறார். வியப்பும், திகைப்பும் என்னை ஒருங்கே ஆக்கிரமித்து உள்ளது. நினைத்து பார்க்க முடியாத உயரத்தை கலாம் தொட்டிருக்கிறார். அவர் மறைவும், அதன் பின் எழுந்த பேரலையும் அசாத்தியமானவை. தெரு, வீடு என எல்லா இடங்களிலும் மனிதர்கள், தங்களின் இல்ல உறுப்பினர் மறைவாய், துக்கம் தோய்ந்து இருந்தனர்.

குடியரசு தலைவர் ஆன பின்பும், அதன் பின்னான சமீப நாட்கள் வரை அவரின் பணி எந்த தொய்வும் அடையவில்லை. அவரின் ஆகப்பெரிய குறிக்கோள், இளைய தலைமுறையை, நம்பிக்கை கொள்ள செய்வதும், அவர்களை அடுத்து   வரும் சவால்களுக்கு தயார் படுத்துவதுமாய் இருந்தது. அவர்களிடமே, தன் எண்ணத்தை பகிர்ந்தார். அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னவர், இதை செய், இதை செய்யாதே என வழி காட்டினார். பெரியவர்களுடன் பேசி எந்தவொரு பயனும் இல்லை என நன்றாக உணர்ந்திருந்தார் . அந்த வகையில் உலகை நன்கு புரிந்து வைத்திருந்த ஞான ஆசான் அவர் . வைரமுத்து ஒரு முறை எழுதியது போல் "காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை" என்பதில், கலாமும் அடங்குவார் அல்லவா?

அவர் தேச விடுதலைக்காக போராடிய, காலமெல்லாம் சிறையில் கழித்த  நெல்சன் மண்டேலா போன்ற வீரர் அல்ல. சிதறி போய்விடும் நிலையில் இருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, தன்  உயிரை தாரை வார்த்த லிங்கன் இல்லை. ஆனால் பாரதத்தை பொறுத்த வரை, தன் அருமை தவ புதல்வன். நேசமிகு தலைவன்.

எனக்கு கலாம் அறிமுகம் ஆனது அவரின்  "Wings of Fire" அறிமுகம் ஆன 1999 ஆம் ஆண்டு. நானும் என் நண்பனும், மும்பையில் ஒரு  தமிழ்  கலாசார ஆசிரியரை  சந்தித்த பொழுது, அவர் தெற்கில்  இருந்து புறப்பட்ட சில தேர்ந்த மனிதர்களை பட்டியல் இட்டு, நீங்களும் அவர்கள் போல் முன்னேறுங்கள் என்றார். அன்று அவர் சுட்டி சென்றவர்கள், கஸ்துரி ரங்கன், அப்துல் கலாம், M S சுவாமிநாதன், ஆர் . சிதம்பரம் ஆகியோரை.,

அதன்   பின் நண்பன் கண்ணா, "Wings of Fire" புத்தகம் பற்றி அருமையாக எழுதி என்னையும் படிக்கும்படி சிபாரிசு செய்திருந்தார். அவரின் "அக்கினி சிறகுகள்" வெளியாகி அதன் பின்பே அதனை படிக்க முடிந்தது. விடுதியின் நாட்களில், ஒரு மாலையில் படிக்க தொடங்கிய புத்தகம், அன்று பின்னிரவு, அதிகாலை வரை நீண்டது. அது வரையில் நான் படித்திருந்த மிக முக்கியமான சுயசரிதை  புத்தகம் அது தான். இன்று வரை, அந்த எழுத்து, கை ரேகை போல், மங்காமல் இருக்கிறது. உணர்வு குவியலாய், அக்கினியையும், அமிர்தத்தையும் ஒரு சேர கடந்து வந்த உணர்வு அதை படித்த கணமும், அதை உள்வாங்கி கிரஹித்த கணமும்.

நீங்கள் மறைந்த அந்த இரவு, முழுதும் அந்த எழுத்தே என் எண்ணங்களை ஆக்கிரமித்து இருந்தன.

"Wings of Fire" புத்தகத்தை தமிழாக்கம் செய்திருந்த சிவலிங்கம் அவர்கள், கலாம் அவர்களே தமிழில் எழுதியது போல், ஒரு அற்புதமான நடை கொண்டு வந்தார். அதுவே புத்தகத்தின் ஆக பெரிய பலம். புத்தகம் தந்த வீச்சும், சொல்லாக்கமும், அறிவியலை அற்புதமாக கண் முன் நிகழ்த்தி காட்டியதும் ஒரு ராசவாத வித்தை.

எந்த வேறு புத்தகமும், தமிழகத்தின் கல்லூரிகளில் இவ்வளவு தூரம் பாடமாகவில்லை. அந்த வகையில் அது மாறாத ஒரு மைல் கல். "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  " என தன உழைப்பை, நம்பிக்கையை, வெற்றியை, படிப்பாற்றலை, படைப்பாற்றலை பந்தி வைத்த தருணம் அது. " உலக வழக்கப்படி, இந்த கலாமுக்கு எந்த ரத்த சொந்தமும் இல்லை. என் எழுத்துக்கள் யாரோ ஒரு சிலருக்கு உந்து சக்தியை தர முடிந்தால்,  அதுவே இந்த புத்தகத்தின் வெற்றி" என சொல்லி செல்கிறார் கலாம்.



கலாமை கொண்டாட நான் எண்ணிய சில நிலைகள்..
1. எந்த தேசமும், தன் சுய சார்பு கொள்கையுடன் வளர வேண்டும் என சொன்ன அவரின் கனவுகளும் அவரின் விளக்கமும்..  நாமே நமக்கான உபகரணத்தையும், அதன் தொழில் நுட்பத்தையும் படைத்தல். எத்தனை  முறை தான்  நாம்  நுகர்வோர் ஆக தொடர்வது. இன்று வரையிலும் ராணுவ தளவாட கொள்முதல் முதல், அணு உலைகளுக்கான உபகரணம் வரை, ஹெலிகாப்டர் முதல், போர் விமானம், போர் கப்பல் வரை,  மற்றவர்களை  நம்பி உள்ளோம். நமக்கு எந்த ஒரு பொருளும் விற்கின்ற  நாடு ஒரு போதும் அதன் மூல சூத்திரத்தை தர தயார் இல்லை. நாம் என்றும் நுகர்வோராக இருந்தால் போதும்  என எண்ணியபடி உள்ளனர் . இதை கலாம் என்றும் நினைவுபடுத்தி உள்ளார். இந்த நிலை மாற வேண்டும். சமீபத்திய ஆச்சர்ய ஆரவார வெற்றி - இஸ்ரோவின் பாய்ச்சல்.

2. தேச பாதுகாப்பு முக்கியம்: எதிரியின் வலிமை உணர்ந்து, நம்மை காலத்துக்கு தேவையானபடி மேம்படுத்துதல். 200 ஆண்டுகள் அடிமைப்பட்ட தேசம் அல்லவா இது ? அறுபத்து இரண்டில் நடந்த சீன யுத்தமும், நம் கையறு நிலையும் யாவரும் அறிந்ததே..

3. நதிகளை இணைத்தல்: தீபகற்ப இந்தியாவில், என்றும் நிரந்தர தேவை இது.

4. ஊழல் இல்லாத தேசம் வேண்டும் என்கிற அறைகூவல்.

5. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர் தந்த நடைமுறை முன்னேற்ற சத்தியங்கள் வரை - சமீபத்தில் அவர்   அகிலேஷ் யாதவை சந்தித்து அவரின் மாநிலத்திற்கான சத்தியங்களை வரையறுத்து தந்தது.

6. தன்னை ஒரு மாநிலத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்தாமல், தேசத்தின்  குடிமகனாக, ஏன் ? உலக முழுமைக்குமான மனிதராக எண்ணியது..

7. என்றென்றும் குடிகொண்டிருந்த எளிமைக்கும், நாணயத்துக்கும்..

8. பல பேர் உங்களை, உங்களின் படிப்புக்கு, நீங்கள் முன்னிலை  படுத்தப்பட்டமைக்கு வருந்தியபோதும், தூற்றிய போதும், சாதாரணமாய் எடுத்துக்கொண்ட உங்கள் மனம்..

9. அணுசக்தி துறைக்கு ஒரு ஹோமி ஜகாங்கீர் பாபா. விண்வெளிக்கும், அந்த துறைக்கும் விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், என பாதுகாப்புத்துறையில்,உங்கள் பெயரும் முன்னிலை பெற்று உள்ளது. ஒரு துறையை நாட்டில் உலவ விட்டு அதன் வளர்ச்சியை கண்ணால் கண்ட நீங்களும் ஆச்சர்யமே. 

10. விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்ம பிரகாஸ், ராஜ ராமண்ணா என நீங்கள் சிறப்பித்து முன்னிலைப்படுத்திய மனிதர்கள் உங்களால் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்கள்.

11. துறை தோறும் உள்ள வளர்ச்சியை, இன்னொரு துறையில் உபயோகித்தல். தொடர் அறிவியல் பகிர்தல்.

12. எந்த புது பொருளை கண்டுபிடித்தாலும் அதன் உரிமையை பதிவு செய்தல்.

போய்வாருங்கள் கலாம்.. உங்களின் இறுதி தீர்ப்பு நாளில், நீங்கள் பார்த்தவர் யாவரும் உங்களை மனமுவந்து தழுவியிறுப்பர் ..

Thursday, April 2, 2015

அன்புள்ள அம்மா - எழுத்து சித்தர் பாலகுமாரன்


எழுத்து சித்தர் தன் தாயின் நினைவுகளை பதிவு செய்கிறார். இந்த எழுத்து  சில வருடங்களுக்கு முன், குமுதத்தில் வெளி வந்தது. போகிற போக்கில், அனைவர்க்கும் திரும்பி பார்க்க வைக்கும் சொற்சித்திரம் இது. கண்களில் நீர் திவலைகள் உருள்வதை தவிர்க்க முடியவில்லை. பாலகுமாரன் அவர்களின் அபூர்வ ஆளுமை என்றும் போல்..


" தாய் என்பவள் தெய்வ வடிவத்தின் மனித வடிவம் என்று உலகம் புகழ்கிறது. அந்த தெய்வ வடிவம், இடது கன்னத்தில் ஓங்கி குத்து வாங்கி கரு ரத்தம் கட்டி நிற்க, உதடு பல்லில் குத்தி கிழித்து இரத்தம் வழிய, முதுகு, புஜம், கை, இடுப்பு எல்லாவற்றிலும் விசிறிக் காம்பால் பட்டை பட்டையாக அடி வாங்கி மனம் சோர்ந்து உடல் துவண்டு உட்கார்ந்து இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ? தாய், அதாவது கலியுக கண்கண்ட தெய்வம் அப்படி இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்."



ஆணாதிக்கம், 'மேல் சாவனிஸம் '  என்ற வார்த்தைகள் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால்  அகம்பாவம் என்ற வார்த்தை எனக்குத் தெரியும். என் அப்பாவின் அகம்பாவம் என்னுள் வந்து விடவே கூடாது என்பதற்கு நான் போராடத் தயாரானேன். என்   அகம்பாவம் முளைகட்டி எழும்போதே அதன் முனையை முறிக்கிற வித்தையை சிரமப்பட்டு தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையைப் பற்றிய வெதும்பலில் இருந்தும், துக்கத்திலிருந்தும் என்னை ஒருவர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. என் தாய் தான்.

"வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சந்தன பொட்டு ,சாப்பாடு இதைத்தவிர உலகத்துல நிறைய இருக்குடா" என்று அப்பாவுக்கு அப்பால் இருக்கின்ற உலகத்தைக் காண்பித்தாள் . 

தன்னுடைய பள்ளிக்கூடத்து லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து படிக்க சொல்லி திருப்பி கொண்டு போய் வைப்பாள். இந்த தீனி எனக்கு போதவில்லை என்று வாரத்துக்கு ஒரு ரூபாய் கொடுப்பாள். 'லெண்டிங் லைப்ரரியை  ' அறிமுகப்படுத்தி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது அம்மா தான். 

"உன் சினேகிதா யாரும் ஒரு லெவலுக்கு மேல வளரப்போவதில்லை. அந்த மாதிரி சூழ்நிலையிலே அவங்க இல்லை. அதனால் சிநேகிதர் இல்லாமல் தனியாக இருக்க பழகிக்கொள்" என்றார். 


அம்மா சொல்லை மீறாமல் கடைபிடித்தேன். இன்றுவரை இந்த அறுபத்தைந்து வயது வரை உயிருக்கு உயிர் ஆன நண்பர்கள் ஒருவருமில்லை.

எனக்கு சிநேகிதமாக அம்மாதான் இருந்தாள். நான் எழுத ஆரம்பித்து "சாவி " யில் என் கொடி பறக்கத் துவங்கியதும் அம்மா குதூகலித்தாள்.

அப்போது எனக்கு இன்ஷ்யூரன்ஷ்   கம்பெனியில் நூத்தி என்பது ரூபாய் சம்பளம். முப்பது ரூபாயை கையில் கொடுத்து நூத்தி ஐம்பது ரூபாயை வீட்டு செலவுக்கு வைத்து கொள்வாள். என்னால் முப்பது ரூபாயும் செலவு செய்ய முடியாது. செலவு செய்ய தெரியாது.


என் அம்மா என் சிநேகிதி என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. என் தவறுகளை மிக நிதானமாக சுட்டிக் காட்டுவாள்.

அம்மா ஆசிரியை. தமிழ்ப் பண்டிதை. முப்பத்தாறு வருடம் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். மோனஹன்   பெண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தில், ஒரு சிறிய சேப்பல் இருக்கும். அந்த பிரார்த்தனை கூடம் அம்மாவுக்கு மிகப் பிடித்தது. வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள மிக சாதாரண அறை தான் அது.  பிரார்த்தனை செய்து செய்து அந்த அறை, அந்த இடம் அதிர்வோடு இருந்தது.

நாங்கள் முரட்டுத்தனமான இந்து அல்ல. மதம் மாறிய கிறிஸ்தவரும் அல்ல. கடவுள் என்ற விஷயம் தான் முக்கியம். யார் கடவுள் என்பது முக்கியமல்ல. எல்லாம் தாண்டி கடந்தது கடவுள். மதத்தை மதம் சொல்கிற புத்தகத்தையும் தாண்டியது. அது மிகப் பிரமாண்டமானது என்பதை என் அம்மா எனக்கு பேசியும் பாடியும் விளக்கி இருக்கிறார். அவர் போட்ட விதை இன்று என்னுள் பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

தேவாரமும்,  திருவாசகமும், நாலாயிர திவ்விய பிரபந்தமும், பைபிளும் கிறிஸ்துவ மத கீர்த்தனைகளும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும் மனதில் சுடர் ஏற்றி வைத்தன.

அம்மா எனக்கு பாலூட்டி. அம்மா எனக்கு தாதி. அம்மா எனக்கு ஆசிரியை. அம்மா எனக்குத் தோழி, அம்மா எனக்கு வழிகாட்டி , அம்மா எனக்கு இடித்து உரைப்பவள்.அம்மா என் இலக்கிய ஆசான். அம்மா என் வாழ்வின் ஒளி விளக்கு.



வெறும் தமிழ் மட்டும் சொல்லி கொடுத்திருந்தால் அவள் ஆசிரியை. அம்மா உள்ளே எனக்குள் சுடர் ஏற்றினாள். எனவே அவள் தெய்வ ரூபம். அம்மா என்பவள் மனித ரூபம் என்பது உலகோர் வழக்கம்.

என்  தாய் துன்ப பட்டதால், நான் துளிர்த்து எழுந்தேன். வாழ்க்கை சிலரை வெறும் உரமாகவும், சிலரை செடியாகவும் மாற்றுகிறது. என்ன செய்ய.

இந்த செடியும் நல்ல உரமாக வேண்டும். இதுவே பிரார்த்தனை. என் தாய்க்கு செய்யும் கைம்மாறு. அன்பு. காணிக்கை. 


[குறிப்பு : அவரின் எழுத்தில் சில பகுதியை மட்டும் இங்கு பகிந்துள்ளேன். நன்றி: குமுதம், ம.செ.]