Sunday, July 17, 2011

ஆரோக்கியமாக தான் இருக்கின்றனவா - குழந்தைகள் சேனல்கள்?






இன்றைய நாட்களில் குழந்தைகளை அவர்களின் நேரத்தை பெருமளவில் கபளீகரம் செய்பவை தொலைக்காட்சி பெட்டிகளே. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்ற இந்த நாட்களில், குழந்தைகளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. அதிலும் அவர்களை அதிகம் ஈர்ப்பவை குழந்தைகள் சேனல்களே. அந்த குழந்தைகள் சேனல்கள் எவ்வளவு தூரம் தரமாய் இருக்கின்றன? தரமான பொழுதுபோக்குகளை, விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகின்றனவா? அறிவு பூர்வமாய், சிந்தனையை தூண்டும் வகையில், அறிவை, பொது அறிவை, உலகை எவ்வளவு தூரம் அறிமுகபடுத்துகின்றன. மனித பண்புகளை, ஆளுமை வளர்ச்சியை எவ்வளவு தூரம் முன் எடுக்கின்றன? இதற்கான பதில் மிக மிக ஏமாற்றமாகவே உள்ளது.


நான் பார்த்தவரையில், இந்த சேனல்கள் இருந்தால் அவர்களுக்கு, வேறு எதுவும் தேவை இல்லை. பக்கத்தில் இடி விழுந்தால் கூட தலையை உயர்த்தி என்ன நடக்கிறது என பார்க்கும் மன நிலையில் அவர்கள் இல்லை. கதா மாந்தர்கள் சொல்வதற்கு சில நேரங்களில் சிரிப்பதோடு சரி. அதில் வரும் வசனங்கள் தான் என்னை மிகவும் வருந்த வைத்தது. அவர்களின் வயதுக்கு பொருந்தாத சம்பந்தம் இல்லாத வசனங்கள், சேனல்களில் வரும் தொடரில் இருந்தன. இந்த சேனல்கள் குழந்தைகளை போதை பொருளை பயன்படுத்தும் மனிதர்களை போல் அடிமை படுத்துகின்றனவோ என எண்ணினேன். Bag Piper பின்னால் போகும் குழந்தைகள் எனக்கு ஞாபகம் வருகிறார்கள்.



எனது நண்பர் இதற்காக இந்த சேனல்கள் தவிர்த்த பேக்கேஜை தேடிக்கொண்டு இருக்கிறார். அவரின் கைகளுக்கு ஒரு போதும் ரிமோட் வந்தது இல்லை. சிறுவர்கள் தூங்க போன பின் மட்டுமே அதற்கு ஓய்வு. அப்படி சேனல் இல்லாத தருணங்களையும் குழந்தைகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிஜமாய் உள்ளது. இதை சம்பந்த பட்டவர்கள் கவனித்தார்களா? என்றாவது வரும் தொடர்களை அதன் தரத்தை ஆராய்ந்தது உண்டா? நிச்சயம் நாம் அடுத்த தலை முறைக்கு ஆரோக்கியமான பொழுது போக்கை அறிமுகப்படுத்த தவறி விட்டோம்...

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்