கற்பாறைகள் காத்திருக்கின்றன... ஒரு நல்ல சிற்பியின் உளி பட யுக யுகமாய் காத்திருக்கின்றன.. மழை, வெயில், கடும் பனி, கால மாற்றங்கள், இவை எல்லாம் கடந்து தன அக வெப்பம் மாறாமல், காத்திருக்கின்றன. ஒரு நல்ல சிற்பி, தான் கண்ட கற்பாறையை, சிற்பமாகவோ, மக்கள் தொழுதிடும் சிலையாகவோ, வடிவமைக்கிறான். அந்த கற்பாறையின், அவ்வளவு நாள் காத்திருப்புக்கு, அன்று பேரர்த்தம் கிடைக்கிறது. பல நேரங்களில், கற்பாறைகள், கண்டுகொள்ளப்படாமல், காலம் தோறும் நிலைப்படிக்கட்டாய், வெறும் கற்களாய், முடிந்து போவதுண்டு. அதன் இருத்தல், உணரப்படாமல், கடந்துபோவதுண்டு. அது போன்றதே, ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்... மாணவ பருவத்தில், நல்ல சிற்பியின் கண்ணில் படும் பட்சத்தில், ஒளிர்ந்து உலகுக்கு ஒளி கொடுக்கும் ஞாயிறாய் மாறி போகிறார்கள்.
நான் கேட்டறிந்த ஒரு மாணவனின் வாழ்வு, பேரதிர்ச்சியை கொண்டு வந்தது. நிறைய பேர் அந்த முனைக்கும் பயணித்து வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலெழுந்தது. அந்த மாணவனின் தந்தை ஒரு ஆசிரியரும் கூட. தந்தை பணி புரியும் அதே பள்ளியில், மாணவனும் படிக்கிறான். பல தருணங்களில், மற்ற ஆசிரியர்களின் வாயிலாக, மகனை பற்றி புகார்கள் தந்தைக்கு வந்து குவிகின்றன. பள்ளி நாட்களில், நான் வீட்டுக்கு செல்கிறேன்; என சொல்லி வீட்டுக்கு வந்து விடுவான் இந்த மாணவன். மாணவனுக்கு அவன் தந்தையின், தோட்டமும், அதற்கே உரித்தான, மாடுகள், ட்ராக்டர் இவை உண்டு, வீட்டுக்கு வந்த மாணவன், தானே உழவு செய்வது, தோட்ட வேலைகளில் உற்சாகமாய் செயல்படுவது என இருப்பான். அவன் உள்ளம் படிப்பை விட, தோட்ட பணிகளில் அதிக ஆர்வம் காட்டியது. அவனுக்கு மிக மிக பிடித்தமான விஷயமாய் விவசாயம் இருந்தது. தோட்டத்தில் இருக்கும் எல்லா வேலைகளையும, தான் எடுத்து செய்வது அவனுக்கு மிக மிக பிடித்திருந்தது.
இந்த நிலையில், இவனது போக்கு தந்தைக்கு பிடிக்கவில்லை. முதலில், கண்டித்து, பின் அடித்து பார்த்து விட்டார். பின் யோசித்தவர், ஐம்பது கிலோமீட்டர் தள்ளி, ஒரு பெயர் பெற்ற பள்ளியில், விடுதியில் சேர்த்து விட்டார். சில பல தருணங்களில், பள்ளியில் அடி உதை விழுந்து இருக்கிறது. அப்படி இருக்க, ஓரிரு முறை பள்ளியில் இருந்து ஓடி வந்து உள்ளான். வீட்டில் உள்ளவர்களும், அவனை மிரட்டி, புத்திமதி சொல்லி, திரும்பவும் பள்ளியில் சேர்த்து உள்ளனர். அந்த முறை அவனும் தான், இனி நிலைமையை சமாளித்து விடுவேன், என சொல்லி சென்றுள்ளான். இது நடந்து ஒரு பதினைந்து நாட்களுக்கு பின், பள்ளியில் இருந்து ஓடி வந்த மாணவன், படிப்பில் இருந்து தப்பிக்க, வீட்டின் பின் இருந்த புளியமரத்தையும், முழக்கயிரையும் துணைக்கு அழைத்திருக்கிறான். அவனது பிரிவுக்கு பின், அவனது பெற்றோருக்கு, மனக்குருதி நிற்க பலநாட்கள் ஆனது. அவர்களால் தவறு எங்கே நிகழ்ந்தது என கண்டு சொல்ல முடியவில்லை.
இதை விட எனக்கு பேரதிர்ச்சி, இந்த தற்கொலை முயற்சி அவனுக்கு முதல் முயற்சி அல்ல. சில பல தடவைகள் முயன்று, இறுதியில் தான் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். மொத்தத்தில், நம்முன் இருக்கும் கேள்வி, கல்வி மட்டும், வாழ்க்கைக்கு அனைத்தையும் தந்து விடுகின்றதா? இங்கு இரண்டு கண்ணோடு இன்னொரு கண்ணாய் இருக்கும் என எதிர்பார்த்த கல்வி, வேடிக்கையாய், இருந்த கண்ணையும், குத்தி குருடாக்கி விட்டது. நண்பர் விவரித்த இன்னொரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.
இது இன்னொரு மாணவனின் பயணம். பத்தாம் வகுப்புடன், அவனது படிப்புக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது. அது 1992 ஆம் வருடம். கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு நன்கு நினைவிருக்கும். அது ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் நடந்த ஆண்டு. 1987 இல் நடந்த ரிலையன்ஸ் உலக கோப்பை டி டி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. இந்த உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதால், டி டி யில் ஒளிபரப்பு இல்லை என கைவிரிக்கப்பட்டது. இந்த நிலையில், கேபிள் டிவியின் அவதாரம் துவங்கியது. இந்த மாணவனும் அதை கையில் எடுத்தான். சரியான வருமானம். இன்றைய நிலையில், நன்றாக உழைத்து நல்ல நிலைக்கு வந்து விட்டான். இன்றைய நிலையில் அவனுக்கு மூன்று நான்கு கால் டாக்சிகள் ஓடுகின்றன. எனக்கு ஏனோ இந்த இருவரையும், ஒப்பீடு செய்திட தோன்றியது.
சில ஆண்டுகளுக்கு முன், தொலைகாட்சியில் கண்ட ஒரு பேட்டி ஞாபகம் வருகிறது. அவர் ஒரு ஆதரவு அற்ற மாணவர்கள் விடுதியை நடத்தும் நிர்வாகி. அவர் தன பேட்டியில், தன் மாணவர்களுக்கு சமூகத்தில், சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ரகசியத்தை சொன்னார. சமூக பரப்பினில், எல்லா காலத்திலும், ஒரு பிட்டர், எலக்ட்ரிசியன், தச்சர், இப்படியான மனிதர்கள் தேவை. ஆகவே நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு சேர்க்க முன் வருகிறோம். அவர்களை அதிக செலவு இல்லாமல், அவர்கள் வாழ்வுக்கு ஒளி தருகிறோம் என்றார். மேலே சொன்ன விவசாயமும் இதில் சேர்ந்தது தான்; ஏன், அது அதற்கும் மேலே. ஜீவ சேவை. சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டு இருப்பது உழவனுக்கு தான். ஆனால் பழுதுகள் நம் பார்வையில் தான் உள்ளன.
பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு அதிகபட்சம் செய்ய முன் வருவது, தனி வகுப்புகள், நல்ல கைடு.. இவ்வளவே. இவை நல்ல மாணவனை உருவாக்குவதில்லை. அதே போல், குழந்தைகளின் கல்விக்கு வாரத்தில் எத்தனை மணி நேரம் நாம் ஒதுக்குகிறோம், எனும் கேள்வி எழுத்தால் நீண்ட பெருமூச்சு வருகிறது.. குறைந்த பட்சம், நாம் பிள்ளைகளிடம் என்ன பேசுகிறோம்? இந்த மாசம் என்ன ரேங்க்? பக்கத்து வீட்டு பையன் அவ்வளவு மார்க் எடுத்து உள்ளானே? உனக்கு எங்கே போனது புத்தி? - என விடைகள் ஏதுமற்ற கேள்விகளே.. அதிக பட்சம் அவர்களின் படிப்பு சுமையை, நாம் அறிந்து கொள்ள முற்படுவதே இல்லை. அதே போல், ஒரு நல்ல நகைச்சுவை பகிர்ந்து கொள்ள இயலாதவராய் இருக்கிறோம்..
.ஒரு பாட்டியும் பேரனும் காட்டு வழியே பயணிக்கின்றனர். வழியில், ஒரு குளம் தென்படுகிறது. அந்த நிலையில், பேரன், ஒரு கல்லை எடுத்து குளத்தின் மத்தியில் எறிகிறான். கல் விழுந்த இடத்தில் இருந்து அலைகள் எழும்புகின்றன. அவை பெரிய வட்டமாய் உருக்கொண்டு கரை வரை நீள்கின்றன. அந்த அலை பட்டு இலைகள், கரையை ஒட்டி இருந்த தவளைகள் என குளத்தின் இருப்பில் நிறைய மாற்றம் உருவாகிறது. அங்கே உருவான அலை தொடர்ந்தது புது அலைகளை உருவாக்கி செல்கிறது. அதை சுட்டி காட்டிய பாட்டி பார், உனது செயல் எவ்வளவு மாற்றத்தை உருவாக்கி உள்ளது என்கிறாள். அதை போன்றதே மாணவர்களின் படிப்பும் வாழ்வும். அவர்களது நிகழ்வு, சிறு கல்லாய் இருக்கலாம். ஆனால் அதற்கு தொடர் நிகழ்வுகள் உண்டு. கலங்கிப்போன குளம் போல, குடும்பமும், குடும்பத்தின் அத்தனை அங்கத்தினரையும் ஒரு சிறுவனின் படிப்பு, அவனது நிலை, நிறைய பாதிப்பை உருவாக்குகிறது.
அது ஆஸ்திரேலியாவில் உள்ள துறவியர் மடம். அங்கு இருந்த மடத்தில், ஒரு தோட்டம் இருந்தது. பல தருணங்களில், வெளியில் இருந்து மாடுகள் வந்து தோட்டத்தை நாசம் செய்தன. அதை கவனித்த துறவி ஒருவர், அந்த மடத்துக்கு சுற்று சுவர் எழுப்ப முனைந்தார். அவரும் தன் சொந்த முயற்ச்சியில், தனி ஒருவராய் பாடுபட்டு சுவர் கட்டும் பணியை முடித்தார். அதன் பின், அந்த சுவற்றை கண்ட அவர், சற்றே துணுக்குற்றார். அந்த சுவரில் அவர் வைத்த ஒரு செங்கல், சுவருக்கு பொருந்தாமல், சற்றே திரும்பி இருந்தது. இந்த நிலையில் , அந்த மடத்தை பார்வையிட மூத்த துறவி ஒருவர், அந்த மடாலயத்தின் தலைமை நிலையத்தில் இருந்து வந்திருந்தார். வந்த அவர் துறவி கட்டி இருந்த சுவற்றை பார்வையிட்டு துறவியை பாராட்டினார். ஆனால் துறவியோ, அந்த ஒரு செங்கல்லை சுட்டி காட்டி, இந்த செங்கல் திரும்பி இருக்கிறது என்றார். ஆனால் மூத்த துறவியோ, சுவர் நேர்த்தியாகவும், உறுதியாகவும் கட்டப்பட்டுள்ளது என சொல்லி மகிழ்வோடு சென்றார்.
நாமும் பல நேரங்களில், அந்த துறவியை போல், ஒற்றை செங்கல்லை பிடித்தவண்ணம், காலம் காலமாய் புலம்பியபடி உள்ளோம். ஒவ்வொரு மனிதனையும் அந்த ஒற்றை செங்கல்லை கொண்டே எடை போடுகிறோம். அவனது மற்ற அற்புதமான விஷயங்கள் நம் கண்பார்வைக்கு என்றும் வருவதில்லை.
பாராளுமன்றத்தில், உறுப்பினராய் இருந்த ஆர். கே. நாராயணன் ஒரு முறை மாணவர்களின் படிப்பு சுமையை பற்றிய கேள்வியை அவையில் எழுப்பினார். அவரது கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
.
.
5 comments:
நல்ல பதிவு!
Excellent
Sridhar
உங்கள் எண்ணங்களை மதிக்கிறேன். உயரிய கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்!
அன்புடன் அருணா, ஸ்ரீதர் சார், செந்தில் குமார் உங்கள் வருகைக்கும், பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி! மீண்டும் சந்திப்போம்!
தெளிவான சிந்தனை துளிகள், சில வாழ்வியல் கதைகளின் ஸ்பரிசத்துடன் தங்கள் வரிகளில் பயணிக்கும் போது பக்கத்தின் முடிவு பயணத்தின் தூரத்தை கூட்டாதா என்ற அங்கலாய்ப்பு மனதில் தொற்றுவதை தவிர்க்க முடியவில்லை. சில வரிகளும் சில பக்கங்களும் சில புத்தகங்களும் கூட ஒருவரின் மன மாற்றத்திற்க்கும் தேற்றத்திற்கும் அடித்தளமாய் அமைந்துள்ளன. அவ்வகையில் உங்கள் வரிகள் என்மனதிலும் சில வருடல்களை ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்கு நன்றி சொல்லும்முன் இவ்வரிகளைபடைத்த உங்கள் விரல்களுக்கு எனது நன்றி.
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்