Sunday, June 21, 2009

தேடுவதும் தவிர்ப்பதும் - II


தேடுவதும் தவிர்ப்பதும் - இது சென்ற பதிவின் தொடர்ச்சி.. வாழ்க்கையில அதிகம் தேடுவதும், தவிர்க்க நினைப்பதுவுமான பட்டியல்.
நாம் சாரும் சமூகம்:
1) அடிக்கொரு முறை நமது குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். [ கை பேசி, கடிதம், மின்னஞ்சல் எதுவாயினும் இருக்கலாம். அவர்கள் எப்பொழுதும் நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் எனும் அறிவிப்பாய் இல்லாதிருக்கட்டும்.. ]

2) ஒவ்வொரு நாளும் சக மனிதருக்கும் நல்லவற்றை அளித்திட முன் வாருங்கள். ஒரு இனிய சொல், ஒரு வழிகாட்டுதல், ஒற்றை புன்னகை, எதுவாயினும்..

3) எல்லோரையும் மன்னிக்க பழகுவோம்.

4) ஒவ்வொரு நாளும் எழுபது வயதிற்கும் அதிகமான முதியவரோடும், ஆறு வயதிற்கும் குறைவான குழந்தைகளோடு செலவழிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் கற்க ஆயிரம் விஷயம் அகப்படும்.

5) தினமும் குறைந்தது மூன்று மனிதர்களின் முகத்தில் புன்னகையை கொணருங்கள்.

6) நம்மை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணும் எண்ணம் தேவையற்றது.

7) எப்பொழுதும் நண்பர் தொடர்பில் இருங்கள். அவர்களே உங்களுக்கு உதவும் கரங்கள்..

நமது வாழ்வு:
1) என்றென்றும் நல்லவற்றையும் சரியானதும் செய்திட முன் வாருங்கள். உங்களின் செயல்கள் மனதோடு ஒன்றி இருக்கட்டும்.

2) அர்த்தமற்ற, மகிழ்ச்சியை குறைக்கும் எந்த விஷயத்திலிருந்தும் உடனடியாக விலகுங்கள்.

3) இறைவனும் காலமும் எல்லா துயரையும் தீர்க்க வல்லவை. இறைவனின் பெரும் கருணையால் எல்லா ரணங்களும் குணப்படுத்த வல்லவை.

4) இதுவும் கடந்து போகும் எனும் நம்பிக்கை நமக்கு வேண்டும். நல்ல தருணம் ஆயினும், மோசமான தருணம் ஆயினும், அது மாறக்கூடியதே..

5) நல்ல நாளும் நல்ல நிமிடமும் இனி மேல் தான் வரப்போகிறது எனும் நம்பிக்கை கொள்ளுங்கள் .

6) ஒவ்வொரு நாளும் நீங்கள் துயில் எழும் பொழுதும் அந்த நாளை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஒவ்வொரு நாள் உறங்க செல்லும் பொழுதும் அந்த நாள் நல்லபடியாய் அமைத்து கொடுத்த இறைக்கு நன்றி சொல்லுங்கள்.

7)நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், விழித்து எழுங்கள்.. சோர்வை அனுமதியாதீர். அந்த நாள் உங்கள் நாளே.. வெற்றியும் உங்கள் பக்கமே..

[ இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது, அபூர்வ பட்டியல் என்னை நிறைய நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆட்படுத்தியது. அதை பகிர்ந்து கொள்கிறேன்... ]
.
.
.

தேடுவதும் தவிர்ப்பதும் - I


நம் ஒவ்வொருவர் நல்வாழ்வுக்கும் சில அடிப்படை விஷயங்கள் தேவைப்படுகின்றன. சில விஷயங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை. அப்படி தொகுக்கப்பட்ட விஷயங்கள் இங்கே. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி அடைவதும், அவற்றை இனங்கண்டு கொள்வதும் நமது வழக்கம். அதே போல், ஒரு நிகழ்வு நம்மை பாதிக்கும் என எண்ணினால் அதிலிருந்து ஒதுங்கி இருப்பதுவும் நம் கடமையே.. இந்த பட்டியல் அதிசயமாய் நம்மை உற்று நோக்க வைக்கிறது.. நாமும் நம்மை மறந்து சப்திப்போம்... அட, இத்தனை நாள் தெரியாமல் இருந்ததே என்று..

நம் ஆரோக்கியம்:
நாம் நம்மை ஆரோக்கியமாய் வைத்திட இந்த விஷயங்கள் அடிப்படை. நாமும் கடைபிடித்து தான் பார்க்கலாமே.
1) தினமும் அதிகமாக நீர் அருந்துங்கள்.

2) காலை உணவு ஒரு பேரரசனை போல் இருக்கட்டும். மதிய உணவு ஒரு இளவரசனை போல் இருக்கட்டும். இரவு உணவு ஒரு பிச்சை காரனை போல் குறைந்த அளவோடு இருக்கட்டும்.

3) மரம் மற்றும் நிலத்துக்கு வெளியே விளையும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்க்கலாம். நிலத்திற்கு அடியில் இருந்து பெறப்படும் காய்கறிகளை குறைவாக சேர்க்கவும்.

4) என்றென்றும் பெருகும் ஆற்றல், நல்ல உற்சாகம், நல்ல புரிதல் உங்களோடு உறவாடட்டும்.

5) உங்களின் ஒவ்வொரு நாளிலும் பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும், யோகா பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள். அதையும் உங்கள் வாழ்கை முறையாக, வாழ்வின் அங்கமாக கொணருங்கள். எல்லா நாளும் நல்ல நாளே.

6) நிறைய விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. எல்லோர்க்குமானதே. விளையாட்டு உங்கள் ஒவ்வொரு உடல் அணுக்களையும் இளமைக்கு இட்டு செல்கிறது.

7) சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நீங்கள் படித்து முடிக்கும் புத்தகங்கள் அதிகமாக இருக்கட்டும்.

8) ஒவ்வொரு நாளும் அமைதியாக பத்து நிமிடங்கள் அமர்ந்து இருங்கள். மனம் முழுதும் பன்னீர் புஷ்பங்கள் உதிர்ந்தது போல் உணர்வீர்கள்.

9) ஒவ்வொரு நாளும் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்கி எழுங்கள். தூக்கத்தை போல் உடலையும் மனதையும் புத்துணர்ச்சிக்கு எடுத்து வரக்கூடிய பொருள் உலகில் வேறெதுவுமில்லை. நல்ல தூக்கம் ஆரோக்கியத்தின் அடையாளமும் கூட.

10) ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து முதல் முப்பது நிமிடம் நடக்க பழகுங்கள். நடக்கும் பொழுது உங்கள் முகமும் உடலும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் வெளிப்படுத்தட்டும்.

உங்களின் ஆளுமை :
உங்களின் ஆளுமை வளர்ச்சி எப்படி இருக்கிறது. உங்கள் வளர்ச்சி, உங்கள் நடவடிக்கை உங்களுக்கு திருப்தியா? இல்லை; இன்னும் மாற்றம் வேண்டும். என்னுள் வளர்ச்சியும் வேண்டும்.. என் பார்வையில் இன்னும் விசாலம் வேண்டும்... என் அறை கதவு இன்னும் காற்றை அனுமதிக்கட்டும்.

1) உங்களின் வாழ்வை மற்றவரோடு எக்காரணத்தை கொண்டும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் உங்களால் அவர்களின் பயணத்தை அறிந்திருக்க முடியாது. அவர்களின் பயணம் முற்றிலும் வேறு விதமாய் இருக்கலாம்.

2) உங்களுக்குள் எதிர்மறை சிந்தனைகள் தோன்றிட அனுமதிக்க வேண்டாம். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி வருத்தமும் கொள்ள வேண்டாம். எப்பொழுதும் உங்கள் எண்ணம் நேர்மறை சிந்தையுடன், முன் உள்ள செயங்களில் நிலை கொள்ளட்டும்.

3) முதுகுக்கு பின்னால் அவதூறு பேசுவதை விட்டொழியுங்கள். அதில் உங்கள் அளவிடமுடியாத ஆற்றல் வீணாகிறது.

4) விழிப்பு நிலையில் நிறைய கனவு காணுங்கள்.

5) பேராசை , பொறாமை இவை நம்மை அழிக்க வல்லது. நமது தேவைகள் நமக்கு முன்னரே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டு விட்டன; நிறைவேறி வருகின்றன..

6) நேற்றைய தவறுகளையும் , பிரச்சனைகளையும் மறந்து விடுங்கள். உங்கள் துணைவரின் கடந்த கால தவறுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டாம். கவனமாய் இருங்கள். ஏனெனில், அவை தற்போதைய மகிழ்ச்சியை துடைத்து எடுத்து செல்லும் வல்லமை உள்ளவை.

7) வாழ்வு மிக மிக சிறிய எல்லை கொண்டது. பிறரை வெறுத்து ஒதுக்காதீர்கள். சக மனிதர்களிடம் அன்பு பாராட்டிடுவோம்.

8) கடந்த காலம், உங்களின் நிகழ்கால வாழ்வின் அமைதியை குலைக்க அனுமதியாதீர்.

9) உங்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு. யாரும் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. உங்கள் மகிழ்ச்சிக்கு முழுவதும் நீங்களே பொறுப்பு.

10) வாழ்வு ஒரு பள்ளிக்கூடம். இங்கு நாமனைவரும் பாடம் பயில வந்துள்ளோம் என்பதை நினைவில் வைத்திருங்கள். பிரச்சனைகள் நாம் கற்கும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போன்றே தோன்றுவதும் மறைவதுமாய் இருக்கும். ஆனால் நாம் கற்கும் ஒவ்வொரு பாடமும் வாழ்வு முழுதும் கூட வருபவை.

11) எல்லா விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாற்று கருத்து உள்ளவரையும் கண்ணியத்துடன் ஏற்று கொள்ளுங்கள்.

12) எதுவும் அளவோடு இருக்கட்டும். உங்களின் எல்லைகளை நீங்களே வரையருங்கள். எதையும் அதிதமாய் முயல வேண்டாம்.

13) எந்த விஷயத்தையும், பிரச்சனையும் அமைதியோடு அணுகுங்கள். அதிகமாய் பதறினாலும், கோபம் பெருகினாலும் பாதிப்படையும் முதல் நபர் நாம்தான்.

12) நிறைய புன்னகைக்கவும். முடிந்தால் அதிகமாய் வாய் விட்டு சிரிக்கவும். வாலியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது...

"சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதிபலம்.
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு
ஏதுபலம்.
உள்ளம் என்றும் கவலைகள் சேரும் குப்பை தொட்டி இல்லை.
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் வாழ்கை துன்பமில்லை.
"


[ இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது, அபூர்வ பட்டியல் என்னை நிறைய நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆட்படுத்தியது. அதை பகிர்ந்து கொள்கிறேன்... ]

.

.
.

Saturday, June 6, 2009

எழுச்சி கொண்ட ரோஜர் பெடெரர் - Roland Garros


இது ரோஜர் பெடெரர் - எழுச்சி கொண்ட நாட்கள். தனது நீண்ட நாள் கனவு, தொட முடியாதா என்னும் வெற்றியின் மிக மிக விளிம்பில் இருக்கிறார். டென்னிஸ் ஆட ஆரம்பித்து எல்லா வெற்றிகளையும் ரோஜரால் தொட முடிந்திருக்கிறது( கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம், நீண்ட நாள் தர வரிசையில் முதலிடம், அதிகமான சம்பாத்தியம்., ஈடிணை அற்ற ரசிகர்கள் உலகெங்கும்.. ). ஆனால் அவரின் எண்ணம் சொல் செயல் எல்லாம் - பிரெஞ்சு ஓபென்( Roland Garros) மேலே. இதோ அவரின் கனவை கைப்பற்ற இந்த ஞாயிறுக்காக தவமிருக்கிறார். அட ஒவ்வொரு ஸ்லாம் - பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அனைத்தும் ஞாயிறு தான்.

நாளை அவர் ராபின் சொடர்லிங் உடன் பலப் பரிட்சையில் இருக்கிறார். சொடர்லின்க் வென்றால் அவருக்கு இது முதல் ஸ்லாம். ரோஜருக்கு களிமண் தரை போக்கு காட்டி வந்துள்ளது. நான்கு முறை தொடர்ந்து களிமண் தரையில் இறுதிக்கு முன்னேறி உள்ளார். மூன்று முறை அவர் நடாலிடம் தோற்று உள்ளார். களிமண் தரையை பொறுத்த வரையில் நடாலுக்கு Just like that ஊத்தி தள்ளி விட கூடியவர். ரோஜரும் மற்ற யாரையும் விடவும் நடால் மிக முக்கியம்,. ஏனெனில் தடைகளே இல்லாமல் முன்னேரியவரின் ராஜ்ஜியம் நடால் தலையீட்டால் தவிடு பொடியானது.

ஐந்து முறை நடாலிடம் இறுதியில் தோற்று உள்ளார்(மூன்று முறை - பிரெஞ்சு ஓபன், ஒரு விம்பிள்டன், ஒரு ஆஸ்திரேலியா ஓபன்). டென்னிஸ் அறிந்த எல்லோரும் ரோஜரை கொண்டாடி உள்ளனர். டென்னிஸ் வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத தகுதியும் திறமையும் ரோஜருக்கு உரியது. இன்றைய நாளில் எல்லா ஸ்லாம் இறுதிக்கும் முன்னேறியவர். நாளை பிரெஞ்சு ஓபன் போட்டியை வெல்லும் பட்சத்தில் பீட சம்ப்ரசின் பதினாலு கிராண்ட் ஸ்லாம் என்பதை சமன் செயபவராவர்.

இந்த பிரெஞ்சு ஓபன் மிக மிக அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்ததாய் உள்ளது. உலகின் முன்னணி வீரர் அனைவரும் ஒன்று சொன்னது போல் அனைவரும் வெளியேறி விட்டனர். அப்படி தான் நடாலுக்கும் ஆப்பு சொடர்லின்க் மூலமாய் வந்தது. எதிபாராமல் மண்ணை கவ்வி விட்டார். பிரெஞ்சு ஓபன் ஆட ஆரம்பித்தது முதல் தோல்வியில்லை. அந்த நாள் அது உடைந்தது.

ரோஜரை பொறுத்த வரை இந்த வருட அரை இறுதிஅற்புதமாய் இருந்தது. தனது செட்டை இழப்பதும் அடுத்ததில் மீட்பதுமாய் போராடினார். நேற்றைய போட்டியில் Back hand shot சிறப்பாய் இருந்தது. அவரது ஒவ்வொரு ஷாட்டும் ரசிக்கும் வகையில் இருந்தது. மூன்று மணி நேரத்திற்கும் அதிக நேரம் நீடித்த ஆட்டத்தில் டெல் போட்ரோவை போராடி வென்றார். டெல் ஒவ்வொரு தருணத்திலும் சிறப்பாக போராடினார்(3-6, 7-6 (2), 2-6, 6-1, 6-4.). அடுத்த ஸ்லாம் போட்டிகளில் அசத்த இன்னொரு முகம் ரெடி . நல்வாழ்த்துக்கள் டெல்.

ரோஜரை பற்றி விளையாட்டு விமர்சகர் பீட்டர் ரோபக் Peter Roebuck- இப்படி குறிப்பிட்டார். ரோஜரின் அற்புதமான வெற்றிக்கு காரணம், அவர் பந்துகளை சரியான பகுதிகளில் எப்படி செலுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளார் என்பது. He knows how to place the ball at right areas.. எந்த தருணத்திலும் பதற்றத்தை காண்பிக்காமல் செயல்படுவது ரோஜரின் வெற்றிக்கு துணை நிற்கிறது. ஜான் போர்க், இவன் லேண்டில், ஜான் மெக்கன்ரோ, ஸ்டீபான் எட்பர்க், போரிஸ் பெக்கெர், பீட் சாம்ப்ராஸ் இப்படி யாரும் எல்லா கிராண்ட் ஸ்லமிலும் கலக்கியதில்லை. நாற்பது ஆண்டு கால டென்னிஸ் வரலாற்றில் அகாசி மட்டுமே அதை சாதித்து உள்ளார்.

அதை சாதிக்கும் முழு தகுதியும், திறமையும் ரோஜருக்கு உள்ளது. தற்போது அவரின் வயது இருபத்து ஏழு. இப்பொது உள்ள நிலையில் தன் ஆட்டத்தை நிலை நிறுத்தினால், டென்னிஸ் உலகம் இதுவரை கற்பனை செய்திட முடியாத உயரத்தை தொடுவார். ரோஜர் தொடர்ச்சியாக இருபது ஸ்லாம் அரை இறுதியை தொட்டு உள்ளார். இது நினைத்து பார்க்க முடியாத பயணம். ரோஜருக்கு சமீபமாக அதிக சறுக்கல்கள். தனது பிரியமான விம்பிள்டன் தோல்வி, ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா ஓபன் தோல்வி என தவிப்புக்கு மேல் தவிப்பு. ஆஸ்திரேலியா ஓபெனில் ஐந்து செட்டிலும் போராடி அடக்க மாட்டாமல் கதறியதை உலகம் கரிசனத்துடன் நோக்கியது.

பார்க்கலாம். நாளை சொடர்லாங்கை வெல்லும் தருணத்தில், தான் இன்னும் சாம்பியன் தான், இன்னும் தன் பயணம் முடியவில்லை, தான் என்றும் கருப்பு குதிரை தான் என்பதை இன்னும் அழுத்தமாக நிரூபிப்பார். வரலாறு மீளும் என எதிர்பார்க்கலாம்.
.
.
.