Saturday, June 6, 2009

எழுச்சி கொண்ட ரோஜர் பெடெரர் - Roland Garros


இது ரோஜர் பெடெரர் - எழுச்சி கொண்ட நாட்கள். தனது நீண்ட நாள் கனவு, தொட முடியாதா என்னும் வெற்றியின் மிக மிக விளிம்பில் இருக்கிறார். டென்னிஸ் ஆட ஆரம்பித்து எல்லா வெற்றிகளையும் ரோஜரால் தொட முடிந்திருக்கிறது( கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம், நீண்ட நாள் தர வரிசையில் முதலிடம், அதிகமான சம்பாத்தியம்., ஈடிணை அற்ற ரசிகர்கள் உலகெங்கும்.. ). ஆனால் அவரின் எண்ணம் சொல் செயல் எல்லாம் - பிரெஞ்சு ஓபென்( Roland Garros) மேலே. இதோ அவரின் கனவை கைப்பற்ற இந்த ஞாயிறுக்காக தவமிருக்கிறார். அட ஒவ்வொரு ஸ்லாம் - பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அனைத்தும் ஞாயிறு தான்.

நாளை அவர் ராபின் சொடர்லிங் உடன் பலப் பரிட்சையில் இருக்கிறார். சொடர்லின்க் வென்றால் அவருக்கு இது முதல் ஸ்லாம். ரோஜருக்கு களிமண் தரை போக்கு காட்டி வந்துள்ளது. நான்கு முறை தொடர்ந்து களிமண் தரையில் இறுதிக்கு முன்னேறி உள்ளார். மூன்று முறை அவர் நடாலிடம் தோற்று உள்ளார். களிமண் தரையை பொறுத்த வரையில் நடாலுக்கு Just like that ஊத்தி தள்ளி விட கூடியவர். ரோஜரும் மற்ற யாரையும் விடவும் நடால் மிக முக்கியம்,. ஏனெனில் தடைகளே இல்லாமல் முன்னேரியவரின் ராஜ்ஜியம் நடால் தலையீட்டால் தவிடு பொடியானது.

ஐந்து முறை நடாலிடம் இறுதியில் தோற்று உள்ளார்(மூன்று முறை - பிரெஞ்சு ஓபன், ஒரு விம்பிள்டன், ஒரு ஆஸ்திரேலியா ஓபன்). டென்னிஸ் அறிந்த எல்லோரும் ரோஜரை கொண்டாடி உள்ளனர். டென்னிஸ் வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத தகுதியும் திறமையும் ரோஜருக்கு உரியது. இன்றைய நாளில் எல்லா ஸ்லாம் இறுதிக்கும் முன்னேறியவர். நாளை பிரெஞ்சு ஓபன் போட்டியை வெல்லும் பட்சத்தில் பீட சம்ப்ரசின் பதினாலு கிராண்ட் ஸ்லாம் என்பதை சமன் செயபவராவர்.

இந்த பிரெஞ்சு ஓபன் மிக மிக அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்ததாய் உள்ளது. உலகின் முன்னணி வீரர் அனைவரும் ஒன்று சொன்னது போல் அனைவரும் வெளியேறி விட்டனர். அப்படி தான் நடாலுக்கும் ஆப்பு சொடர்லின்க் மூலமாய் வந்தது. எதிபாராமல் மண்ணை கவ்வி விட்டார். பிரெஞ்சு ஓபன் ஆட ஆரம்பித்தது முதல் தோல்வியில்லை. அந்த நாள் அது உடைந்தது.

ரோஜரை பொறுத்த வரை இந்த வருட அரை இறுதிஅற்புதமாய் இருந்தது. தனது செட்டை இழப்பதும் அடுத்ததில் மீட்பதுமாய் போராடினார். நேற்றைய போட்டியில் Back hand shot சிறப்பாய் இருந்தது. அவரது ஒவ்வொரு ஷாட்டும் ரசிக்கும் வகையில் இருந்தது. மூன்று மணி நேரத்திற்கும் அதிக நேரம் நீடித்த ஆட்டத்தில் டெல் போட்ரோவை போராடி வென்றார். டெல் ஒவ்வொரு தருணத்திலும் சிறப்பாக போராடினார்(3-6, 7-6 (2), 2-6, 6-1, 6-4.). அடுத்த ஸ்லாம் போட்டிகளில் அசத்த இன்னொரு முகம் ரெடி . நல்வாழ்த்துக்கள் டெல்.

ரோஜரை பற்றி விளையாட்டு விமர்சகர் பீட்டர் ரோபக் Peter Roebuck- இப்படி குறிப்பிட்டார். ரோஜரின் அற்புதமான வெற்றிக்கு காரணம், அவர் பந்துகளை சரியான பகுதிகளில் எப்படி செலுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளார் என்பது. He knows how to place the ball at right areas.. எந்த தருணத்திலும் பதற்றத்தை காண்பிக்காமல் செயல்படுவது ரோஜரின் வெற்றிக்கு துணை நிற்கிறது. ஜான் போர்க், இவன் லேண்டில், ஜான் மெக்கன்ரோ, ஸ்டீபான் எட்பர்க், போரிஸ் பெக்கெர், பீட் சாம்ப்ராஸ் இப்படி யாரும் எல்லா கிராண்ட் ஸ்லமிலும் கலக்கியதில்லை. நாற்பது ஆண்டு கால டென்னிஸ் வரலாற்றில் அகாசி மட்டுமே அதை சாதித்து உள்ளார்.

அதை சாதிக்கும் முழு தகுதியும், திறமையும் ரோஜருக்கு உள்ளது. தற்போது அவரின் வயது இருபத்து ஏழு. இப்பொது உள்ள நிலையில் தன் ஆட்டத்தை நிலை நிறுத்தினால், டென்னிஸ் உலகம் இதுவரை கற்பனை செய்திட முடியாத உயரத்தை தொடுவார். ரோஜர் தொடர்ச்சியாக இருபது ஸ்லாம் அரை இறுதியை தொட்டு உள்ளார். இது நினைத்து பார்க்க முடியாத பயணம். ரோஜருக்கு சமீபமாக அதிக சறுக்கல்கள். தனது பிரியமான விம்பிள்டன் தோல்வி, ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா ஓபன் தோல்வி என தவிப்புக்கு மேல் தவிப்பு. ஆஸ்திரேலியா ஓபெனில் ஐந்து செட்டிலும் போராடி அடக்க மாட்டாமல் கதறியதை உலகம் கரிசனத்துடன் நோக்கியது.

பார்க்கலாம். நாளை சொடர்லாங்கை வெல்லும் தருணத்தில், தான் இன்னும் சாம்பியன் தான், இன்னும் தன் பயணம் முடியவில்லை, தான் என்றும் கருப்பு குதிரை தான் என்பதை இன்னும் அழுத்தமாக நிரூபிப்பார். வரலாறு மீளும் என எதிர்பார்க்கலாம்.
.
.
.

Sunday, May 31, 2009

வாழ்வின் வளமைக்கு அடிப்படைகள்


வாழ்வை வளமாக்க, பொருள் பொதிந்ததாய் அமைந்திட, லட்சியம் நோக்கிய பயணத்தில், தவறாது பயணித்திட சில அடிப்படை விதிகள்... இவை வெற்றியின் உன்னத கூறுபாடுகளாய் போற்றப்படுபவை.
1. பார்வையை மாற்றுங்கள்:
உங்கள் பார்வை கோணத்தை மாற்றுங்கள். நேர்மறை சிந்தனை உங்களை ஆட்கொள்ளட்டும். நல்ல நட்பு, மகிழ்வான, அமைதியான நாட்களையே எதிர்பார்த்திருங்கள். ஏனெனில் நீங்கள் கேட்டதே கிடைக்கும்.

2. உடனுக்குடனே செய்து முடித்தல்:
வாழ்வு ஒன்றும் ஒத்திகை அரங்கல்ல. எடுத்த எந்த செயலையும் உடனுக்குடன் செய்து முடித்தல் வெற்றிக்கு அடிப்படை.

3. என்றென்றும் நன்றி உடையவர்களாய் இருங்கள்:
நமக்கான ஆசீர்வாதங்களை கணக்கு வைத்திடுங்கள். துன்பத்தை கணக்கு பார்க்காதீர்கள். என்றென்றும் இறைவனுக்கு, சக மனிதருக்கு நன்றி உடையவர்களாய் இருங்கள்.

4. கற்றல் என்றென்றும் தொடரட்டும்:
உங்களை உயர்த்திக்கொள்ள தொடர்ந்து முயலுங்கள். கற்றல் என்றென்றும் உங்களுடன் இருக்கட்டும். சக மனிதரை பற்றி அவதூறு பேசுவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். [ எழுத்தாளர் சுஜாதா தன் வெற்றிக்கான ரகசியமாக பகிர்ந்து கொண்டது... நான் இன்னமும் தொடர்ந்து படிக்கிறேன். எனவே என்னால் என்றும் இளமையாய் எழுத முடிகிறது. ]

5. உங்களைப்பற்றிய மதிப்பீடு என்றென்றும் உயர்வாக இருக்கட்டும்:
உங்களை பற்றி நீங்கள் உயர்வாகவே எண்ணுங்கள். ஒருபோதும் உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். பிதாகரசின் அற்புதமான வரிகள் ... "உங்களையே நீங்கள் மதியுங்கள். அதையே மற்ற எல்லாவற்றிற்கும் மேலானதாய் கருதுங்கள் " என்பதே. சுய மதிப்பீட்டை வளர்த்துக்கொள்ள எளிய வழி ... "உங்களுக்கு அன்பாகவோ, பொருளாகவோ திருப்பி செலுத்த முடியாத மனிதனுக்கு நீங்கள் உதவ வேண்டும்." பிரதி பலன் பாராது செய்திடும் உதவி உங்கள் சுய மதிபீட்டை விண்ணுயரம் கொண்டு செல்லும்.

6. எதிர்மறை எண்ணத்திலிருந்து விலகி இருங்கள்:
ஒரு மனிதனின் கட்டுகோப்பான வளர்ச்சி, நல்ல எண்ணங்கள் நல்ல நட்பால் மட்டும் வளர்வதில்லை. அவன் தவிர்க்கும் எதிர்மறை சக்திகளிடமிருந்தும் வருகிறது.

7. செயல்களை, பணிகளை மகிழ்வுடன் ஏற்று கொள்ளுதல்:
எது தேவையோ, எது முடியுமோ அதை முடித்திட முன்வர வேண்டும். மேலும் செய்கிற பணிகள் மன நிறைவோடு செய்திட பழக வேண்டும்.

8. ஒவ்வொரு நாளையும் நேர்மறை சிந்தையோடும் தெளிவோடும் அணுகுங்கள் :
வெற்றியாளருக்கு ஒவ்வொரு நாளும் முக்கியம். துவங்கும் அந்த நாள் நிறைய தெளிவோடும் நேர்மறை சிந்தையோடும் இருக்கட்டும். உங்கள் வாழ்வை மாற்ற எண்ணினால் உடனடியாக செயல் புரிதலை வளர்க்க வேண்டும்.

1) எப்பொழுதும் சிதறும் புன்னகை
2)என்றென்றும் கூடவரும் அளவு கடந்த அன்பு
3)
அறிவில் சிறந்த மனிதர்களிடம் நாம் பெரும் மதிப்பு .
4)சரியான விமர்சனங்களை அவை கசப்பாக இருப்பினும் - உண்மை என்றால் ஏற்று கொள்ளுதல்
5)அடுத்தவர்களிடம் உள்ள அருங்குனங்களை மதித்தலும், ஊக்குவித்தலும்
6) எப்பொழுதும் உற்சாகம் பொங்கி வழியட்டும்..

நம் வாழ்வே ஒரு எதிரொலி போன்றது தான். நாம் எதை கொடுக்கிறோமோ அதையே நாம் திரும்ப பெறுகிறோம்.
[இந்த கருத்துகள் என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தவை. அரிதாயும், நேர்த்தியாகவும் உள்ள தொகுப்பு. ]
.
.

படித்ததில் பிடித்தது


ஒரு சில சிந்தைகள் எண்ணம் முழுதும் ஆட்கொள்ளும். சில இதயம் தொட்டு என்றென்றும் ஞாபகத்தில் உறவாடும். அவற்றில் சில ...
  • வாழ்வு ஒரு பந்தயம் அல்ல. அது ஒரு தொடர் பயணம்.
  • மற்ற எவரையும் விட முதலாவதாய் வருவதில் பெரிதாய் பெருமை கொள்ள எதுவுமில்லை. தன்னோடு வரும் மற்றவரையும் போட்டியாளராய் கருதாமல், ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி வழிநடத்தி சென்றால் அதை விட மனதிற்கு மகிழ்ச்சி தருவது உலகில் எதுவுமில்லை.
  • நம்மோடு தொடரும் பதற்றத்தில், அரிதான தருணங்களை தவற விடுகிறோம். அடுத்து என்ன என்று தேடி ஓடுவதை காட்டிலும், இந்த கணத்தை முழுதும் உணர்ந்து உன்னதத்தை அனுபவியுங்கள்.
  • எனக்கு இதுவேண்டும், அது வேண்டும் என்ற தேவைகளின் பட்டியலை நிறுத்தினால் போதும். நம்மிடம் குவிந்து கிடக்கும் ரத்தினங்கள் கண்ணுக்கு புலப்படும். நம் ஒவ்வொருவரும் ஆண்டவனால் அதிகமாகவே ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளது புலப்படும்.
  • வாழ்வு வேகமாக நகரும் தருணங்களில் வேகம் மகிழ்வு தருவதாய் இருக்கும். ஆனால் வேகம் மட்டுமே நம் ஒட்டுமொத்த அனுபவமாய் மிஞ்சிட கூடாது. அதற்க்கு மேலும் சந்தோசப்பட வாழ்வில் நிறைய உள்ளது.
  • வாழ்வு முழுதும் அற்புதமானதும், ஆச்சர்யம் தரக்கூடியதுமான நிமிடங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. நிதானத்துடன் நகர்ந்தால் மட்டுமே, அதன் அருமையை பருக முடியும்.
  • ஒரு தனித்துவமான மனிதனை சந்திக்க ஒரு நிமிடம் தேவைப்படுகிறது. ஒருவரை பாராட்டிட, ஊக்குவித்திட ஒரு மணிநேரம் நமக்கு தேவைப்படுகிறது. அவர்களிடம் அன்பு செய்திட ஒரு நாள் பிடிக்கிறது. ஆனால் அந்த மனிதனின் நினைவுகள் வாழ்வு முழுவதும் நம்முடன் சக பயணியாய் பயணிக்கிறது.

    ஒரு சில மனிதர்களை பார்த்த பார்வையில் நம்முள் பெரிதாய் எந்தவொரு மாற்றத்தையும் உருவாக்குவதில்லை. ஆனால் நீண்ட நெடிய வாழ்வியல் பயணத்தில், நம்மில் நெருங்கிய நட்பாக இறுகி இருப்பார். பார்வை கோணங்கள் பல நேரம் தவறாகவும் முடிகின்றன.

    [இந்த பகுதி என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. வார்த்தைகளின் வசீகரம் கருதி இந்த பகிர்தல் சாத்தியப்பட்டு உள்ளது. ]
    .
    .

கணினி முன் தான் உங்கள் வாழ்வா? - இதோ உங்களுக்காக


எல்லா பொழுதும் கணினி முன் செலவளிப்பவரா நீங்கள்? விசைப்பலகையில் முன் நெற்றி பட்டு ரத்த காயம் உருவாகும் வரை மோதி முடிப்பவரா நீங்கள்? ஏன் நிறுத்தி விட்டாய் நீலவேணி? வீடு இடியும் வரை ஆடு என்பது போல் கணினியை தட்டி தீப்பொறியை கிளப்புபவரா நீங்கள்? வாரான், வாரான் பூச்சாண்டி! இரயிலு வண்டியிலே! வாரணாசி கோட்ட தாண்டி ரயிலு வண்டியிலே! இரயிலு வண்டியிலே! மெயிலு வண்டியிலே! .... இந்த பாட்டு உங்களுக்காக இட்டு கட்டி பாடப்பட்டதாய் உங்கள் அறை நண்பன் சொல்கிறானா? ( நடு இராத்திரியில் அடைமழை நாளில் கதவை தட்டி எழுப்பிய காண்டு அவனுக்கு என்றும் உண்டு) அட உங்களை அல்லவா இத்தனை நாள் தேடிக்கொண்டு இருந்தேன்... நீங்கள் தான் இப்பொழுது வேண்டும்..

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் - நான் போட்டோ ஷாப் முதல் வெறும் தரை வரை எங்கும் வரைவேன் எனும் பதில் காதில் விழுகிறது... இருந்தாலும்.. நாம் செய்திடும் வேலை மிக பல சமயம் கண்ணை விற்று ஓவியம் வாங்கும் முயற்சி தான். அத்தனை உணர்ச்சிகளையும் வெளியிடும் கண்ணையும் ஒரு பார்வை பார்ப்போமே..

திரையை தொடர்ந்து முக்கண்ணனாய் முறைப்பதால் உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? உங்கள் கண் நல்ல நிலையில் உள்ளதா? கணினி சார்ந்த பார்வை கோளாறுகள் உங்களுக்கும் உள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது? இரண்டு மணி நேர தொடர் உழைப்புக்கு பின் பின்வருவனவற்றில் ஏதாவது இருந்தால் சற்றே நீங்கள் கவனிக்க வேண்டும்...

  • சோர்வான/எரிச்சலான/ சிவப்பேறிய கண்கள்
  • கண்களில் வறட்சி (Dry Eyes)
  • தலைவலி, கவனம் குவியாமை
  • இரட்டை பார்வைகள் ( jeans aishwaryaarai)
  • மங்கிய பார்வை ( Blurred Vision)
  • கண் கூசுதல்.
  • கழுத்து, தோள்பட்டை, முதுகு வலிகள்
  • காண்டக்ட் லென்ஸ் தரும் அசௌகர்யம்

பிரச்சினைகளின் துவக்க புள்ளி:
திரையில் தெரியும் எழுத்துக்கள் மைய பகுதி அதிக அழுத்தத்துடனும், அதன் முனை பகுதிகள் சற்றே மங்கியும் அமையும். அதுவே அச்சடிக்கப்பட்ட புத்தகம் போன்றவற்றில் எழுத்தின் முனைகளும் சரியாக அமைந்திருக்கும்,. இங்கு படிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் திரையில் சிக்கல் உருவாகிறது.

கணினியில் படிக்கிறேன், பார்கிறேன் பேர்வழி என அஷ்ட கோணலாய், திருவிக்கிரம வடிவமாய், நாராயணனின் அத்தனை தோற்றத்தையும் காட்டி அமர்நதிருந்தால் , நிச்சயம், கழுத்து முதுகுவலி வந்தே தீரும்.

பார்வை பிரச்சனைக்கு அதி முக்கிய காரணிகள்:
1) நீங்கள் சரிவர கண்களை இமைப்பதில்லை.
2) கண்களை அளவுக்கு மீறி அகல விரித்து திரையை உற்று நோக்குவது
3) உங்கள் அலுவலக வெளிச்சமும், கணினி திரையும் சாதகமாய் இல்லாமை.

எப்படி சரி செய்வது:
1) கண்களில் இமைத்தலில் பிரச்சனை:
அடிக்கொருமுறை இமைப்பதை நடைமுறையில் கொணருங்கள். தொடர் உழைப்பில் சிறிய இடைவெளி அவசியம். திரையில் இருந்து கண்களை சற்றே எடுத்து வெவ்வேறு தூரத்தில் இருக்கும் பொருட்களை கவனியுங்கள்(சுவர், சுவர் கடிகாரம், ஜன்னலுக்கு வெளியே பாரதிராஜா கைகள் வழியே காட்டுவது போல், அடிவானத்து குருவிகள், மைனாக்கள், வெளியே கிளை தாவும் அணில்)

பிரகாசமான ஒளியால் வரும் பிரச்சனை:
வெளியில் இருந்தும், அரை விளக்கில் இருந்தும் வெளிவரும் வெளிச்சம், அதிதமாக கணினி திரையில் பட்டு ஒளிர்தல்.

  • கணினியை கண் கூசாதபடி சரியான இடத்தில் வைத்தல்.
  • கணினி திரையை உங்கள் கண் பார்வையில் இருந்து கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளுதல்.
  • ஜன்னல் திரையை சரிவர உபயோகித்தல்( கண்களுக்கும், திரைக்கும் பொருந்துகிற நிலையில்).
  • தலைக்கு மேலே உள்ள விளக்கு அதிக வெளிச்சம் தருகிறதா? சற்றே வெளிச்சம் குறைவான விளக்குக்கு மாறுங்கள்
  • கணினி திரைக்கு முன் ஒரு கண்ணாடி திரை உங்களுக்கு சரியான வெளிச்சத்தை பெற்று தரும் (attach a glare filter)
  • விசைப்பலகை மற்றும் சுட்டி இவை முழங்கை உயரத்திற்கும் தாழ்வாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
  • உங்கள் இருக்கைகள் சரியான கை - தாங்கிகள்(Arm Rests) இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • கணினி திரை உங்களை விட்டு சற்றே விலகியும், உங்கள் கண் பார்வைக்கு கீழும் இருக்கட்டும்( ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற நிலை).
ஞாபகம் இருக்கட்டும்: 2020விதிகள்:
  • இருபது நிமிடத்திற்கு ஒருமுறை நிறுத்தி இருபது முறை இமைக்கவும்.
  • பார்வையை நகர்த்தி 20- அடிக்கு வெளியே உள்ள பொருளை 20-நொடிகள் பார்க்கவும்.
  • உங்களுக்கு (20/20) (6/6) பார்வை உள்ளதா என சரிபார்த்து தேவைப்படின் மூக்கு கண்ணாடி அணியவும்.

    --- நன்றி COmputer Vision Syndrome , சங்கரா கண் மருத்துவமனை
    .
    .