க.சீ.சிவக்குமார்[
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்] அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மிக அதீத அதிர்ச்சியை தந்தது. நக்கலும், நய்யாண்டியோடும், புனைவோடும், கொங்கு மண்ணின் வாசனையை, வட்டார வழக்கை, மண்ணின் மாந்தர்களை, அப்படியே கண் முன் படைத்து உலவ விடும் ஆற்றல் அவருக்கே உரியது.எப்பொழுது எல்லாம் அவரின் எழுத்துக்கள் கண்ணில் படுகிறதோ அந்த தருணங்கள் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்; எடுத்த புத்தகம், பிரித்த பத்தி அதை படித்து முடித்த பின்பே வைக்க தோன்றும்; சமீபத்தில் அவரின் எழுத்து தாங்கி வந்த இதழ்கள் என் கண்ணில் படுகின்றன; மனம் அசைபோடுகிறது;
அவர் முதல் முதலில், எனக்கு அறிமுகம் ஆனது அவரின் 'ஆதிமங்கலத்து விசேஷங்கள் ' என்கிற ஜூ.வி. தொடர் கட்டுரைகள் மூலமாக. அதில் அவர் உலவ விட்டிருக்கும் ஊர் மாந்தர்கள் ஆர். கே.நாராயணனின் "மால்குடியை " ஞாபகப்படுத்துபவை; அவரின் ஊரோடு பிணைத்து எழுதாமல், அவரின் எந்த தொடரும்,சிறுகதையும் நிறைவு பெறுவதில்லை; நிலம் சார்ந்த படைப்புகள் அவருக்கு கைவந்த கலை. அது சின்ன தாராபுரமாகட்டும், கொடைக்கானல், கன்னிவாடியாகட்டும், மூலனூர், கரூர், ஏன் தாராபுரத்தில் அடையாளமான உப்பாறு ஆகட்டும் - கதையில் நடு நாயகமாக அவரின் ஊரும் அதன் வெள்ளந்தி மனிதர்களுமே; ஊருக்கு புதிதாய் வந்த மினி பஸ் ஆகட்டும், கிணறு வெட்டும் ஆள், கிணற்று மேடுகள் அதில் கவலை ஓட்டும் தொனி ஆகட்டும், சால் பறி விவரிப்புகள்; காளைகள்,ஆடுகள், நாய்கள் என ஆகப்பெரிய காட்சிப்படுத்துதல் அவருடையது;
அவரின் ஆதி மங்கலத்து விசேஷங்கள் தொகுப்பு சிரித்து வயிறு புண்ணாக்கும் வல்லமை பெற்றவை; ஊருக்குள் எப்படி தொழில் நுட்பங்கள் நுழைந்தன என்பதை இதை விட அழகாக சொல்ல முடியாது; அட அந்த பி பி காரர், ரேடியோவோடு மரம் ஏறும் மனிதன், எண்ணெயில் எரியும் தெரு விளக்குகள், முதல் தொலைபேசி இணைப்பு - பரவசமான விவரிப்புகள்;
அவரும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் பிரிக்க முடியாத இரு வல்லவர்கள்; மண் மணம் மாறாமல் எழுத்தை பரிமாறுபவர்கள்; அவரின் ஊர் போல் அவரின் எழுத்து பயணம் நினைவெங்கும் தித்திக்கிறது; கொங்கு மண்டலத்தை அழகாக காட்சிப்படுத்தி, ஆவணப்படுத்திய இன்னொரு எழுத்து ஜாம்பவானின் அவசரமான விண் பயணம் விழிகளில் நீர் சுரக்கவைக்கிறது.
படைப்புகள்:
‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு,
‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது),
‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,
‘குணசித்தர்கள்’,
‘கானல் தெரு’ - குறுநாவல்,
‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைகள்,
‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள்
பிற பதிவுகள்:
http://www.vikatan.com/news/miscellaneous/79734-writer-kasisivakumar-memorial-article.art
தமிழ் ஹிந்து
http://www.sramakrishnan.com/
http://www.athishaonline.com/2017/02/blog-post.html
http://www.jeyamohan.in/95052அவரின் பேச்சு :
https://www.youtube.com/watch?v=7cdT43HGaaY
https://www.youtube.com/watch?v=z9RUeuSIvzw
https://www.youtube.com/watch?v=l15scWagiHs
https://www.youtube.com/watch?v=0LXPnhYSfcA
.
.