Sunday, March 11, 2012

தெய்வத்தின் குரலான ரா. கணபதி



அருமையான புத்தகங்களை தமிழுக்கு தந்தவரும், கல்கியின் ஆசிரியர் குழுவில் இருந்தவருமான ரா. கணபதி அவர்கள் சென்ற மகா சிவராத்திரி அன்று மறைந்து விட்டார். அவரின் எழுத்துக்கள் அதிகம் வாசித்து இருக்கிறேன். நிறைய மனிதர்களுக்கு, மண்ணில் உதித்த மாமனிதர்களை அறிமுகம் செயவித்தவை அவரின் எழுத்துக்கள். அவரின் அறிவுக்கனலே அருட்புனலே புத்தகம், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரையும், சுவாமி விவேகனந்தரையும் பேசியது. அவரின் நடை மூலம், இருவரையும் பாமரர்க்கும் அறிமுகம் செய்வித்த எழுத்து அவருடையது. 

அடுத்த தொகுப்பாக "சுவாமி விவேகனந்தரின் வாழ்க்கை " பற்றிய நூல், சுவாமிஜியின் இள வயது முதல் அவரின் வாழ்வை படம்பிடிக்கிறது. கல்லூரி நாட்களில் ஒவ்வொரு வெள்ளி கிழமை  இரவும்  இந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயம் வாசிக்கப்பட்டு அவரின் வாழ்க்கை பயணத்தை அறிய முடிந்தது. ரோமன் ரோலந்த் அவர்களின் புத்தகத்தை போலும், சுவாமி நிகிலானந்தரின் சுவாமிஜி பற்றிய புத்தகத்தோடும் இந்த வாழ்க்கை வரலாறு ஒப்பு நோக்க தக்கது.

அவர் கல்கியில் தொடர்ந்து எழுதிய "அருள்  வாக்கு  " - காஞ்சி மகா பெரியவரின் வார்த்தைகளை அப்படியே கொண்டு வந்தது. அவர் கல்கிக்கு வந்தது தனி கதை. அது எம். எஸ். அவர்களின் கச்சேரி. ஒரு துண்டு சீட்டு, சதாசிவம் அவர்களின் கைகளுக்கு. ஒரு குறிப்ப்பிட்ட மந்திரத்தை எழுதி, இதை பாடி எம். எஸ். அவர்கள் கச்சேரியை நடத்தினால் நன்றாக இருக்கும் என சொல்லி இருந்தார். அவரை கல்கியில் சேர்க்க இதுவே சதாசிவம் அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. 

மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ஆங்கில பேச்சை தமிழில் மொழியாக்கம் செய்து அதை அவரிடமே தந்து திருத்தி கல்கியில் தந்து வந்திருக்கிறார். ராஜாஜியின் திருத்தங்களை தனக்கு உடன்படாத பகுதியை அவரிடமே சொல்லி வந்திருக்கிறார். 

அவரின் மறைவுக்காக கல்கி ராஜேந்திரன் அவர்கள் கல்கியில் எழுதிய பத்தியும், பாலகுமாரன் அவர்கள் விகடனில் எழுதிய பத்தியும் என் கண்ணில் பட்டன. யோகி ராம் சுரத்குமார் பாலகுமாரனிடம், தெய்வத்தின் குரல் பகுதியை ஆழ்ந்த வாசிப்புக்கு எடுத்து செல்ல பணித்த நிகழ்வு அதில் சொல்லப்பட்டு உள்ளது. இறை பணியை தன் எழுத்தில் வெளி கொணர்ந்த கணபதி அவர்கள் இறையின் நிழலில் இரண்டற கலந்து விட்டார்.