Sunday, April 24, 2011

சச்சின் 38 - ஒரு தொடர் பயண நினைவுகள்



முதலில் சச்சினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இளமையும், திறமையும் போட்டிபோடும் ஒரு விளையாட்டில் என்றென்றும் தன்னிகர் அற்ற சக்கரவர்த்தி. இந்திய மண் உற்பத்தி செய்த மிகச்சில விளையாட்டு வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரும் முதன்மையானவர். ஹாக்கி வீரர் தியான் சந்த், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீரர்கள்  பயஸ், பூபதி , கிரிக்கெட்  வீரர் கபில் வரிசையில் சச்சினுக்கு முதன்மையான  இடம்  நிச்சயம்   உண்டு. தியான் சந்த் அடித்த மொத்த கோல்களுக்கு சரிவர கணக்குகள் இல்லை. ஆனால், சச்சின் கிரிக்கெட் மட்டையை தொட்ட தருணம், தொலை தொடர்பும் அது சார்ந்த  ஒளிபரப்புகளும், விஸ்வரூபம் எடுத்த தருணம். அவரது ஒவ்வொரு அசைவும் அப்படியே ஊடகத்தை அடைகின்றன..


சச்சின், தன் கிரிக்கெட் வாழ்வில், காயங்களால் நிறையவே அவதி பட்டு வந்திருக்கிறார். அப்படி அவர், காயங்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்திருந்தால், இந்திய அணி  மிக மிக முன்னரே ஒரு பொன் தருணத்தை தொட்டிருக்கும். அவரது கிரிக்கெட் கிராப் வேறு எங்கோ இருந்திருக்கும். ஆனால் அவரது பார்வையில், யாவும் நல்லதற்கு தான் எனும் எண்ணமே மேலோங்கி உள்ளது.. இன்றைய பொழுதில் அவரது மட்டை முன் எப்போதும் இல்லாத படி, சொன்னது சொன்னபடி கேட்கிறது.. ரன்களை அள்ளி எடுக்கிறார் இந்த வயதிலும்.. எதோ நேற்று தான் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது போல்...


டெண்டுல்கர் எதிர்வரும் ஒரு நாளில், கிரிக்கெட்டுக்கு  குட் பை சொன்னாலும், சச்சின் இல்லாத போட்டிகளை ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சச்சின் நிறைய விமர்சனங்களை சந்திக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரோஜர் பெடரர் பிரெஞ்ச்சு ஓபன் பட்டத்தை வென்ற பின், மனம் திறந்தவராய், இனி என்னை யாரும், "பிரன்ச்சு ஓபனை  வெல்ல முடியாதவர் " - என சுட்டி காட்ட  முடியாது என்றார். அது தான் இன்று சச்சினுக்கும், நடந்திருக்கிறது. இத்தனை நாட்களிலும், சச்சின் என்னதான் திறமை  கொண்டவராய்  யாவராலும் ஒப்பு கொள்ளப்பட்டு  இருந்தாலும், அவரால் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தர முடியவில்லை என்ற குற்ற்றச்சாட்டு இருந்தது.
அதை இந்த முறை தீர்த்து வைத்து தன ஒட்டு மொத்த பயணம்
அனைத்துக்கும் பெருமையை, மன நிறைவை தேடி கொண்டார்.


இந்தியாவில் தான் இந்த மாதிரி பார்க்க முடியும். ஒரு காலத்தில், சச்சின் ஆட்டம் இழந்தால் ஒட்டுமொத்த மைதானமே வெறிச்சோடி விடும். அப்படி ஒரு தருணமும், அந்த பொறுப்பை சுமந்தவராய் வலம் வந்த காலமும் இருந்தன. ஆனால், இன்று அணியின் பொறுப்பை சுமக்க நிறைய இளம் வீரர்கள், வந்து விட்டனர். இன்று தனக்கான பங்களிப்பை செய்தால் போதும் எனும் நிலைமைக்கு சச்சின் வந்து விட்டார். வானத்தை நோக்கி ஒவ்வொரு பந்தையும் ஆக்ரோஷமாய் அனுப்ப வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்த மனிதர், இருபது ஆண்டுகளில், நல்ல முதிர்ச்சியோடு, சரியான இடங்களுக்கு பந்தை   விரட்டும் வல்லமையோடு, குறைவான சக்தியோடு ரன்களை குவிக்கிறார். அதற்கு மேல், இன்று அணிக்கு முன் எடுத்து செல்ல ஒரு பீஷ்மன் இவர் வழியில் கிடைத்திருக்கிறார்.


ஒரு முறை விளையாட்டு விமர்சகர், "பீட்டர் ரோபக்" இப்படி குறிப்பிட்டு இருந்தார். அது நான்கு  ஆண்டுகளுக்கு முன், சச்சின் தடுமாறிய தருணம்.. "இது சச்சின் ஓய்வு பெற வேண்டிய வயது என..". சச்சினின் ஆஸ்திரேலிய  சுற்று பயணத்துக்கு பின், தன் வார்த்தைகளுக்கு வருந்தியவராய்.. "அவரை பதினைந்து வயதில் சந்தித்தேன். அன்று இருந்த அவரது ஆர்வமும், உழைப்பும் இன்றும் தொடர்கின்றன.. அவரால் இன்னும் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் " என்றார். "One can Inspire the billions  by the way he or she is living his/her life." என்பார்கள். இது சச்சினை பொறுத்தவரையில் உண்மை.

சென்ற ஆண்டில் அவரது திட்டமிடல் அருமையாய் இருந்தது. சென்ற ஆண்டு முழுவதும், டெஸ்ட் போட்டிகளில் முழுக்க தன் கருத்தை செலுத்தினார். 1998  - சச்சினை பொறுத்தவரையில், ஒரு நாள் போட்டியின் பொற்கால ஆண்டு. 2010  - சச்சினின் டெஸ்ட் போட்டிகளுக்கான பொன்  ஆண்டு.


கற்றலையும், பயிற்சியையும் தொடரும் இந்த  இளைஞன் நிகழ் காலத்தின் ஒளி பொருந்திய நட்சத்திரம்.. பயணம் தொடரட்டும்.. நல வாழ்த்துக்கள் சச்சின்.. கிரிக்கெட் மட்டையை தொடும் இன்றைய சிட்டுக்களுக்கும்  அவரே ஊக்கத்தின் ஊற்றுக்கண்..
.
.