Sunday, April 25, 2010

திருவண்ணாமலை திருத்தலம் - ஒரு இனிய பயணம்



திருவண்ணாமலை திருத்தலத்தை கேள்விப்பட்ட நாட்களில், என்றாவது ஒரு நாள் சென்று, இறையை  தரிசித்து வர வேண்டும்  எனும் ஆவல் இருந்தது.. நண்பர், இதோ நான் திருவண்ணாமலை செல்கிறேன்.. வருகிறீர்களா? என அழைத்தார்.. உடனே புறப்பட்டு விட்டேன்.. ஆரூரில் பிறந்தால் முக்தி.. பேருரை தரிசித்தால் முக்தி.. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என கேள்விப்பட்டு இருந்தேன். திரிபுரம்  எரித்த சிவன் ஜோதி ரூபமாய் நின்ற தலம்.. பஞ்ச பூத தலங்களுள் முக்கியமான ஒன்றாகும்.. ஒட்டுமொத்த மலையையே சிவபெருமானாய் பூஜிக்கப்படும் சிறப்பு பெற்ற தலம் திருவண்ணாமலை..

கல்லூரி நாட்களில் எங்கள் கல்லூரி தமிழ் பேராசிரியை மூலம் அண்ணாமலையை பற்றி அதிகம் கேட்டறிந்து இருக்கிறோம். இங்கு உறையும் இறைவன் அண்ணாமலையார்.  அருணாச்சலம் சிவன் என்றும் துதிக்க பெறுகிறார்.  இங்கு உள்ள இறைவி, உண்ணாமுலை அம்மை. இறைவிக்கு இன்னொரு பெயர், அபித குஜலாம்பாள். ல. சா. ராமாமிர்தம் அவர்களின் ஒரு நாவல் தலைப்பு, "அபிதா".. ஜோதி ரூபமாய் நிற்கும் இந்த மலை ஒரு சித்தர் பூமி. காலம் தோறும் சித்தர்களை, மெய் ஞானியரை தன்னை நோக்கி ஈர்த்த படி உள்ள அரிய தலம் இது. அருணகிரி நாதர்,  மகான் சேஷாத்திரி  சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் என எத்தனையோ ஞானியர் உலவிய தலம்..


" ஆதி நடமாடு மலை அன்றிருவர் தேடும் மலை
ஜோதிமதி ஆதரவும் சூழும் மலை 
நீதி தழைக்கும் மலை  ஞான போதனரை
வா வென்று அழைக்கும்  மலை அண்ணாமலை"




இங்கு ஒவ்வொரு பௌர்ணமி நாளும் அதி முக்கியத்துவம் பெறுகிறது. பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறந்ததாய் நம்ப படுகிறது. காயும் நிலவொளி மலையில் பட்டு நம் உடலை தொடுகிறது. அந்த மலை காற்றும், நிலவின் கிரகண கதிரும் நம் உடலையும் மனதையும் ஒரு சேர புத்துணர்வு ஊட்ட வல்லவையே.

யாவரும் நன்கறிந்த விழா திருகார்த்திகை தீப திருவிழா. மலையில் தீபம் தோன்றிய பின் மக்கள் அதை கண்டு வணங்கி பின் தத்தம், வீடுகளில் விளக்கேற்ற
துவங்குவர். சற்று நேரத்தில் ஒட்டுமொத்த திருவண்ணாமலை நகரமும் ஜோதி ரூபமாய் மாறி இருக்கும். படிப்படியாய் ஊர், விளக்குகளால், அலங்கரிக்கப்படுவது ஒரு அற்புதமான காட்சியாகும்.  இங்கு அதிகம் மன வருத்தம் கொள்ள செய்த விஷயம், நிறைய பேர் கை ஏந்துகின்றனர்.


முதலில், ஒவ்வொரு லிங்கமாய் வணங்கி கிரிவலம் வந்த பின் கோயிலை அடைந்தோம். நாங்கள் வந்த பாதையில் கண்ட அடி அண்ணாமலை கோயில் பெரிதாய் ஆச்சர்யப்படுத்தியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலை அடைந்த பின், ராஜ கோபுரத்தை கண்டோம். ராஜ கோபுரத்தில் இருந்து கண்ணை அகற்ற   முடியவில்லை. நான் வாழ்வில் முதல் முறையாக இவ்வளவு நீண்ட நெடிய  கோயிலை தரிசிக்கிறேன்.  


மனித முயற்சியின் அளப்பரிய வடிவம் கண்முன் நின்றது.   ஆயிரமாயிரம் கல்லுளிகள் மேற்கொண்ட இடையறாத பணி, ஒரு அற்புத ஆலயத்தை வடிவமைத்து தந்திருக்கிறது. அந்த கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ   சிற்பிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! நாட்கள், வருடங்களாய், தலை முறை தாண்டியும், பணி செய்திருக்க வேண்டும். தேவதச்சன் விஸ்வகர்மா செய்த எதையும் கண்டதில்லை.  ஆனால் மனித முயற்சியின் மாபெரும் வடிவமாய் நின்றது, அந்த கோயில்.





நான்கு கோபுரங்கள்.. இடப்புறம் அலங்கரிக்கும் குளங்கள் என கோவிலுக்கே உரித்தான அழகு அங்கு இருந்தது . முதலில் முருக பெருமானையும், பின் ஜோதி வடிவாய் உள்ள அண்ணாமலை இறைவனையும்  , இறைவி அபித குஜலாம்பாளையும், தரிசித்தோம். கோவில் சிற்பங்களை தொட்டு பார்த்த பொழுது இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளுக்குள் ஓடியது.. இறைவனை கண்ட பொழுதும் அதே ஆனந்தமும், அமைதியும் நெஞ்சில் பொங்கியது. இங்கு வந்த திருச்சுழி வெங்கட்ரமணன், "தந்தையே உன் கட்டளைப்படி இதோ வந்துவிட்டேன்", என இறைவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த இடம். பின்னர் மெய் ஞானியாய் மலர்ந்ததும்,  ரமண மகரிஷியாய் மிளிர்ந்ததும் இவை யாவற்றுக்கும் துவக்க புள்ளி இந்த இடம். காலம் தோறும் மனிதர்களை தன்  பக்கம் ஈர்க்கும் இறைவன்.


ஆயிரம் கால் மண்டபம், ரமணர் தங்கி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த பாதாள லிங்க அறை, இவற்ற்றை கண்டோம். அந்த அறையின் முகப்பில், ரமணரின் படமும், அவரை பற்றிய குறிப்பும் உள்ளது. உட்புறம், அவரது புகைப்படங்களும், தொடர்புடைய நிகழ்வுகளும்  கருத்தோவியமாக உள்ளது.

மாலை பொழுதில் ரமண ஆஷ்ரமம் காண சென்றோம். ரமணரை பற்றி அறிந்த நாட்களில் இருந்து, இந்த ஆவல் இருந்து வந்துள்ளது. Timeless in Time: Sri Ramana Maharshi. By A.R. Natarajan புத்தகம் மிக அருமையான விவரிப்பை தந்து அந்த ஆவலை பெருக செய்திருந்தது. ரமணரை பற்றிய மிக முக்கிய படைப்பு அது. சிறு வயதில் டி. டி. தமிழ் தொலைக்காட்சியில் ரமணரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட அரிய படைப்பு இன்றும் இமையோரம் மினுங்குகிறது. 


ரமண ஆசிரமம் மலையின் அடிவாரத்தில், நிசப்தத்துடன், குடிகொண்டு உள்ளது. விலங்குகள்பால் பேரன்பு உடையவர் ரமணர். அந்த தலம் நிறைய மயில்களை காண முடிந்தது. முன்புறம் கோயில், அதை ஒட்டிய தியான அறை, பின்புறம் உணவு கூடம், ரமண ஆசிரம புத்தக கடை, ரமணர் நிர்விஹல்ப்ப  சமாதி அடைந்த அறை என காண கிடைகின்றன. அங்கு உள்ள முக்கிய கோயில் ரமணர் மற்றும் அவரது தாயாரின் சமாதி ஆகும். அந்த தளத்தில் ஒரு பீடத்தில் ரமணரின் சிலை செதுக்கப்பட்டு உட்கார்ந்த  வடிவில் வரும் பக்தர்களுக்கு தன்  கருணை பார்வையை பொழிந்தபடி உள்ளார்.   பக்தர்கள் அந்த பீடத்தை வலம் வந்து தியானத்தில்  அமர்கின்றனர். நிறைய வெளிநாட்டவரை  காண முடிந்தது.  அவரின் நிழலாய் இருந்த பக்தர்கள், சமாதி அருகில் உள்ளது. அவர் ஆசையாய் பராமரித்த விலங்குகள், பறவைகள் சமாதி சுற்றி உள்ளது;

அதன் பின் மாலையில், நண்பரும் நானும் கந்த ஆஷ்ரமம் Skandasramam பார்க்க புறப்பட்டோம். ரமண ஆசிரமத்தை ஒட்டியே மலை பாதை மேலே செல்கிறது. மலையில் தவழ்ந்த மாலை இளங்காற்று உவப்பை தந்தது.. ஒரு சில மனிதர்களை மட்டும் வழியில் கண்டோம். மாலையில் ச்கந்தாஷ்ரமம், பூட்டப்பட்டு இருந்தது. மலையில் மேலே வந்த பின், ஒரு பாறையின் முகப்பில், ஒரு வெளி நாட்டினர் தியானத்தில் மூழ்கி  இருந்தார்.  அவருக்கு நேரே கீழ் பகுதியில் மேற்கு கோபுரமும் , கிழக்கு கோபுரமும் நேர் கோட்டில் காட்சி தந்தன.




ச்கந்தாஷ்ராமத்துக்கு கீழே இறங்கி நடந்தால், விருபாக்ஷா குகை உள்ளது. இந்த குகையில் ரமண மகரிஷி பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து உளார் . இவற்றை கண்ட பின் நாங்கள் கீழே இறங்கி வர துவங்கினோம்..   அந்த தருணத்தில் திருவண்ணாமலை எங்கும் விளக்குகளால் ஜொலித்தது. நகரமே ஒரு பூரணத்துடன்  ஜொலித்தது. கோவில் ஒரு சதுர வடிவில் நான்கு கோபுரமுடன் ஒரு தீபெட்டியை போல் தோன்றியது. நகரத்தின் எதோ ஒரு  கோவிலில், "அருணாசலனே ஈசனே! அன்பே சிவநாத நாயனே! புவனங்கள் ஆளும் அருணாசலனே!" எனும் எஸ். பி. பி. குரல் தேவ கானமாய் ஒலித்தது. ஒரு கோவில் நகரம், ஒரு மாலை நேரம், அருமையான மாலை, தேனினும் இனிய இசை என அந்த இடத்தை, அந்த நேரத்தை அற்புதமாக்கியது. இறைக்கு நன்றி.  


முக்தியை என்னும் பொழுது இந்த பாடல் நினைவுக்கு வரும்..திருமந்திர பாடல்..
நாம் செய்ய வேண்டியது இது தான். இறைவனுக்கு நிவேதனமாய், ஒரு பச்சிலை, முடியவில்லை எனில் பசுவுக்கோர் முடிந்த உணவு, உண்ணும் கைப்பிடியில் யாரோ ஒருவருக்கு ஒரு கைப்பிடி உணவு, இன்னொரு மனிதருக்கு இன்னுரை, இவை போதுமாம், முக்திக்கு. 


"யாவர்க்குமாம் இறைவற்கோர் பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே! "
எளிய விஷயம் தானே.  கடைப்பிடித்து பார்ப்போமே!

"அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா!
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா!"
.
.
.

.
.
.



.(விருபாக்ஷ குகை )






.