Saturday, August 15, 2009
அந்த நாள் ஞாபகம் - ஒரு அபூர்வ ஆகஸ்ட் பதினைந்து
வருடங்கள் பல ஓடிவிட்டாலும் மலரும் நினைவுகள் அழகானதே. ஒரு வெற்றி. உலகின் அதி உச்சத்தில் நிற்பது போன்ற நிமிடங்கள். நிச்சயம் அது வைரமுத்து சொல்வது போல் பவுன் நிமிடங்கள். வாழ்நாள் முழுதும் பரவசப்படுத்தும் நிமிடங்கள். அந்த, ஆகஸ்ட் பதினைந்து போல் எதுவும் இன்று வரை இல்லை. தேசத்தின் சுதந்திர தினத்தை விடவும் இது நிச்சயம் ஒரு படி மேல். அந்த நாள், தியான் சந்த்- டைரியின் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பூரித்திருக்கும். அது 1936- பெர்லின் ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்ற தருணம். அதுவும் அசாதாரண வெற்றி. எதிர் அணி ஹிட்லரின் ஜெர்மனி அல்லவா.!
இதுநாள் வரையில் பாரத தேசம் அப்படி ஒரு விளையாட்டு வீரனை இன்னொரு முறை உருவாக்கவில்லை. அது அன்றைய ஹாக்கி அணி தலைவன் - தியான் சந்த். ஒரு தன்னிகர் அற்ற விளையாட்டு வீரன். அந்த ஒலிம்பிக் போட்டியில் தன் சகோதரன் ரூப் உடன் கலந்து கொண்டார்.
ஜெர்மனியில் நடந்த அந்த ஒலிம்பிக்கில் இந்தியா தான் அப்போதைய நடப்பு சாம்பியன் . இந்தியா மேல் அன்று அளவு கடந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒலிம்பிக் போட்டி துவங்கும் முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், ஜெர்மன் அணியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. ஆனால் வீறு கொண்டு எழுந்த இந்திய அணி, அந்த முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. அரை இறுதியில் பிரான்சை சந்தித்த இந்திய அணி அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த ஆட்டத்தில் தியான் நாலு கோல்களை அடித்து இருந்தார்.
ஒட்டுமொத்த உலகமும், ஆவலோடு எதிர்பார்த்த அந்த இறுதி போட்டியும் வந்தது. அன்று தியான் ஹாக்கி மைதானத்தில், நிகழ்த்திய ஆச்சர்யம், சொல்லில் அடங்காதது. என்றென்றும் நினைவில் மங்காத இடத்தை அந்த போட்டி பெற்றது. முதலில் ஆகஸ்ட் பதினான்கில் போட்டி நடப்பதாய் இருந்தது,. அன்று சரியான அடை மழை. ஆக போட்டி ஆகஸ்ட் பதினைந்துக்கு மாறியது.
போட்டிக்கு முன் அன்றைய மேனேஜர் பங்கஜ் குப்தா இந்தியாவுக்கு சரியான எதிர் அணி ஜெர்மனி தான் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒத்துக்கொண்டார். அன்றைய நாளில் ஜெர்மனியிடம் தோற்ற முந்தய ஆட்டம், வீரர்களிடம், போட்டியின் முடிவை பற்றி ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது. இனி போட்டிக்கு செல்லலாம் எனும் நிலையில், வீரர்கள், மூவர்ண கோடி முன் நின்று வணங்கி புறப்பட்டனர். அன்றைய போட்டியை காண நிறைய பேர் குழுமி இருந்தனர். ஹிட்லர், அன்றைய பரோடா சமஸ்தான மன்னர் என நிறைய பிரபலங்கள் அன்றைய பார்வையாளர் வரிசையில்..
முதல் கோல் அடிப்பது மிக மிக முக்கியமாக இருந்தது. அந்த நிலையில் ஆட்டத்தின் முப்பத்து இரண்டாவது நிமிடம், ரூப் சிங் மூலம் முதல் கோல் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆட்டத்தின் இடை வரை போட்ட ஒரே கோல் அது மட்டுமே. அந்த நிலையில், அணியை பாராட்டிய தியான், ஒரு கோல் என்பது மிக மிக சிறிய வித்தியாசம் என நிலைமையை எடுத்து சொன்னார். உற்சாகம் கொண்ட இந்திய அணி அடுத்த பாதியில் ஆட்டத்தை முழுதும் தன் கட்டுப்பாட்டில் கொணர்ந்தது. ஆட்டத்தின் துவக்க நிமிடத்தில் தியான் கோல் அடித்தார். ஐந்து நிமிடத்தில் நான்கு கோல்கள் ஆட்டத்தின் முடிவை தீர்மானித்தன. ரூப் அந்த நிமிடத்தை கூர்ந்து நினைவுக்கு கொணர்கிறார்.
தன்னல ஆட்டத்தை எப்பொழுதும் ஆடாத தியான், அந்த நிமிடத்தில், வீரருக்கு கொடுத்த உத்தரவு, அவரை ஆச்சர்ய படுத்தியது. தேவை இல்லாமல், பந்து அவரது மட்டையில் தேங்குவது கிடையாது. அப்படி இருக்க.. நீங்கள் பந்தை என்வசம் செலுத்துங்கள். மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்றார் தியான். மைதானம் இன்னும் ஈரம் மாறாமல் இருக்க, தயானும், சகோதரனும், காலனியை கழற்றி விட்டு வெறும் காலுடன் களத்தில் விளையாடினர். அன்று அவரின் ஹாக்கி மட்டை, ஒரு மந்திர கோல் போல் சொன்னதெல்லாம் கேட்டது.
ஒரு செய்தி தாள் தியானின் ஆட்டத்தை இப்படி வர்ணித்தது. "a flick of the wrist, a quick glance of his eyes, a sharp turn and then another turn, and Dhyan Chand was through." தன் மணிக்கட்டு நகர்வில், தன் ஒற்றை கண் பார்வையில், இரு திருப்பங்களில், ஒரு கோல் தியானுக்கு சாத்தியமாகிறது என எழுதியது.
இந்த நிலையில், ஜெர்மனி தன் கோல் கீப்பர் மூலம் ஒரு கோலை திருப்பியது. இந்தியா ஆறாவது கோலை போட்ட பின் ஜெர்மனியின் ஆட்டத்தில் மாற்றம் காணப்பட்டது. ஆக்ரோஷமான தாக்குதல், தியானை குறி வைத்து ஜெர்மனி தாக்கியது. ஜெர்மனி கோல் கீப்பரின் தயவில், தியானின் முன் பல் உடைந்தது. ஒரு சிறிய முதல் உதவிக்கு பின் களம் கண்ட தியான், தன் வீரருக்கு கோல் அடிக்கும் முயற்சியை நிறுத்துமாறு பணித்தார். பந்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம், எதிர் அணிக்கு நம்மால் பாடம் நடத்த முடியும் என்றார்.
எதிர் அணி கோல் கம்பம் வரை பந்தை எடுத்து சென்று, பந்தை தமக்கு உள்ளே திருப்பி கொண்டனர் வீரர்கள். இந்த உத்தி, ஜெர்மானியருக்கு, நிறையவே புதிராய் அமைந்தது. இறுதி நிமிடத்தில் முனைந்த தாரா, தியான் இந்தியாவுக்கு எட்டாவது வெற்றிகரமான கோலை மாற்றி கொடுத்தனர். இறுதியில் இந்தியா இந்த ஆட்டத்தை "8-1"என வென்றது.
போட்டி முடிவில் வீரர்கள், அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஆனால் தியான், வருத்தம் தோன்றியவராய் காண பட்டார். அவரது வருத்தம், இந்த வெற்றி மூவர்ண கொடிக்கு கிடைத்து இருந்தால் மகிழ்ச்சியாய் உணர்ந்தது இருப்போமே என்பதாகும்.
இன்றைய நாள் வரை தியானை நிறைய வீரர்கள், ஹிட்லரை எதிர்த்து வெற்றி கொண்ட தன்னிகர் அற்ற வீரராகவே கொண்டாடுகின்றனர். நாமும், ஒரு மகத்தான சாம்பியனை பெற்றமைக்காக, நம் முன் எல்லாமும் சத்தியம் என நிரூபித்தவருக்காக சிரம் தாழ்த்தி நன்றி சொல்வோம். அன்று வென்ற தங்கம் நிச்சயம் தியானுக்கும், அவரின் நெஞ்சுரத்துக்கும், அவரது ஈடிணை அற்ற குழுவின் முழு முயற்சிக்கான பரிசே. .
.
.
Labels:
தியான் சந்த்
Subscribe to:
Posts (Atom)