Sunday, November 30, 2008
முதிய மனம் - ஒரு பார்வை
இன்றைய நாட்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் முதியவர்களை பெரும் சுமை என எண்ணும் நிலை அதிகரித்து வருகிறது. நிறைய குடும்பங்களில் மகனாலும், பேரகுழந்தைகளாலும் முதியவர்கள் கேளிக்கைக்கு இலக்காகிறார்கள். முதிய பருவத்தை தொட்டவுடன் வாழ்வு ஒன்றும் அஸ்தமிப்பதில்லை. அவர்கட்கும் பொழுது விடிகின்றதே!
இளமையில் பூரிப்போடு திகழ்ந்த அந்த முகங்களில் இன்று சுருக்கங்கள். காலம் முழுதும் தன்னை சார்ந்த மனிதர்கட்காக சிந்தித்த நல்ல இதயங்கள் பின்பு ரத்தம் சிந்துகின்றன.
உணவு உண்ணும் போது இலையில் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலை இலைகளா முதியவர்கள்? வெளி நாடுகளில் வாழும் பிள்ளைகள் தம் பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புவது ஒருபுறம் என்றால் மற்றொரு சாரார் முதியவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கவும், உணவு அளித்திடவும் மறுக்கிறார்கள். பெருசு என்ற அடைமொழியோடு பரணில் அமர வேண்டிய பொருளாய் உணர்கிறார்கள்.
அந்த முதிய மனம் ஒரு நாளும் தம் பிள்ளைகளை பெரும் சுமையாக கருதியதில்லை. தம் வறுமை நிலையிலும், எல்லா தருணத்திலும் பிள்ளைகட்கு நல்ல உணவையும், கல்வியையும் தம் தகுதிக்கு அதிகமாகவே தந்திருக்கிறார்கள். அதனால் தான் நாம் நன்றி உணர்ச்சியோடு கல் எறிகிறோம்.
அவர்கள் தம் வளர்த்தல் பொருட்டு எந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் முதிய நாட்களில் அவர்களின் சுயமரியாதை கேள்விக்குறியாகிறது. சிறிய நலவிசாரிப்புகள், தம் கருத்தை பகிர்ந்துகொள்ள, உலகை அறிந்துகொள்ள, தம்மோடு இயல்பாய் புன்னகை பூத்திட எல்லா நாட்களிலும் தவமியற்றுகின்றனர்.
மரநிழலில் இளைப்பாறுவது போன்றதே முதுமையும். அதற்கே உண்டான அர்த்தமும் அழகும் அதற்கு உண்டு. கார்டூனிஸ்ட் மதன் (Madhan) ஒருமுறை தந்தையை பற்றி ஹாய் மதன் பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டார். இது பெரும்பாலும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு பொருத்தமானதே.
சிறு வயதுகளில் ஒரு குழந்தை தன் தந்தைக்கு உலகில் அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் இருக்கும். பதின்வயதுகளில் அந்த எண்ணம் மாறி தன் தந்தைக்கு எதுவும் சரிவர தெரியாது என்ற மனம் வாய்க்கும். முப்பதுகளின் துவக்கத்தில் இருவர்க்கும் உள்ள திரை விலகி தன் வாழ்வில் சிக்கல்கள் வரும் எல்லா தருணத்திலும் அவற்றை எதிர்கொள்ள தந்தையின் உதவியை நாடுவான். நாற்பதுகளில் அதன் பின்பும் தன் தந்தை இல்லையே, தனக்கு சரியாக வழிகாட்டிட அந்த அனுபவ இதயம் இல்லையே என்ற நிலை உருவாகும். - எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள் இவை.
கல்லூரி நாளில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. அரசனொருவன் முதியவர்கள் சமூகத்திற்கு பாரமானவர்கள் என கருதி அனைவரையும் கொன்றிட ஆணையிட்டான். ஆனால் தந்தை மீது மதிப்புடைய ஒரு மனிதன் தன் தந்தையை பாதாள அறையில் வைத்து பராமரிப்பான். அதன் பிறகு கால மற்றத்தினில் அந்த நாடு பஞ்சத்தில் அவதியுறும். யாருக்கும் அதை போக்கிட வழி தெரியவில்லை. கையில் விதைக்க தானியமில்லை. ஆனால் மழை பொழிவு இருந்தது. இந்த நிலையில் தந்தையை பராமரித்து வந்த மனிதன் மட்டும் அறுவடை செய்து பயன் பெற்றான். செய்தி மன்னனின் காதுக்கு எட்டுகின்றது. ஆச்சர்யப்பட்ட மன்னன் அந்த மனிதனிடம் விசாரித்தான். அந்த மனிதன் தன் தந்தையின் அறிவுரைப்படி தான் செயல்பட்டதை விவரித்தான்.
அறுவடை காலத்தில் வண்டிகளில் தானியங்கள் எடுத்து செல்லும் பொழுது வழியெங்கும் அது சிதற வாய்ப்புண்டு . அதனால் அவனும் நடைபாதையை உழவு செய்து தானியங்கள் முளைத்து பயன் பெற்றதாய் முதியவர்களின் அருமையை விளக்கி கதை செல்லும்.
Labels:
முதிய மனம்
Subscribe to:
Posts (Atom)