Sunday, June 29, 2008
கோபமெனும் நீருற்று
நம்மில் அனைவரும் பாரபட்சமின்றி கோபமுருகிறோம். பீறிட்டு கிளம்பும் நீருற்று போல யாவரிடமும் புறப்பட்டுக்கொண்டே இருக்கிறது கோபம். பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லை அதற்கு. காய சண்டிகை விட்டு சென்ற அட்சய பாத்திரம் இன்றும் நம்மிடையேதான் உள்ளது. ஒரே வித்தியாசம். அன்னம் புறப்படும் இடத்தினில் கோபம்.
கோபமுறும் தருணத்தில் கண்கள் மாறுதலுருகின்றன. கைகள் நடுக்கமடைகின்றது. பதற்றம் நம்மை அறியாமல் நம்மை ஆட்கொள்கிறது. வார்த்தை பிரயோகம் தடுமாறுகிறது. நம்மை எப்போதும் உந்தி தள்ளும் உற்சாகம் வடிந்து போகின்றது. ஒரே ஒரு நிமிடத்தில் எழுகிற கோபம் நாள் முழுவதும் மனதையும் உடலையும் ஒருசேர பாதிக்கிறது.
பாரதி(Bharathi) உதிர்த்த "ரௌத்திரம் பழகேல்" என்ற அற்புத வாக்கியம் அனர்த்தப்படுத்திக்கொண்டோமோ. கோபத்தை ஏதோ தம் அடையாளமாகவோ , வலிய ஆயுதமாகவோ நாம் கையில் எடுத்துக்கொண்டோம். சாதாரண அரிப்புக்கு கொள்ளி கட்டையால் தலை சொரிந்துகொள்கிறோம். அவ்வளவே! பிறரிடம் பொருத்த முற்படுவது முள் கிரிடம் என்பதே பல நேரம் நாம் அறிவதில்லை. ஒரு நாளில் பயணம் செல்ல நேர்ந்தால் பயணம் நெடுகிலும் கோபத்தின் வீர்யத்தை உணரமுடிகிறது. தனி மனிதன் மேல் எழுகிற கோபம் நாட்களின் நகர்வில் வெறுப்பாய் உறைந்து விடுகிறது. விதை விருட்சமாகும் நிகழ்வு அது. கோபமும் வெறுப்பும் ஒட்டிபிறந்த இரட்டை குழந்தைகள்.
சமீபத்தில் காண நேர்ந்த சம்பவம் என்னுள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம் என்ற கேள்வி எழாமல் இல்லை என்னுள்.. பேருந்தில் அருகருகே இரு சிறுவர்கள் தந்தையுடன் பயணிக்கின்றார்கள். சிறுவர்கள் இருவரும் பதின்வயதின் துவக்கத்தில் இருப்பவர்கள். நீண்ட பயணத்தின் தொடர் பயணியாய் உறக்கம் அவர்களோடு. பயணம் முடிவுறும் தருணத்தில் அண்ணன் தம்பியை எழுப்ப முயல்கிறான். நித்திரை முடிந்தபாடில்லை அவனுக்கு. கனவுகளோடு மேலும் சற்றே நடைபயிலும் யத்தனம் தம்பிக்கு. அண்ணன் தம்பியின் பின்தலையில் தட்ட துவங்குகிறான். தூறல் அடைமழை ஆனதுபோல் அடியும் பலமாகிறது. ஏய் "எரிச்சல் படுத்தாதே! ஓங்கி அறைந்து விடுவேன்!" என்கிற பலமான வசவுகள் புறப்படுகின்றன
இதை கண்ட நான் நிறைய அதிர்ச்சிக்கு உள்ளானேன். இன்றைய குழந்தைகளின் உலகம் எரிச்சலும் கோபமும் சூழ்ந்து உள்ளது போலும். அன்பும், நல்லிணக்கமும் துள்ளல் துறுதுறுப்புமாய் வளைய வரவேண்டிய இளம் தளிர்கள் ஏன் இப்படி மாறிப்போனார்கள். குழந்தைகளின் மனம் இறை உறையும் நந்தவனங்கள். அமைதியும் ஆனந்தமும் பெருகுகிற நிருற்றுக்கள் அவை. களிப்பும் கும்மாளமும் குதுகலமும் வெடித்து புறப்படும் சிரிப்புமாய் பரந்த உலகை சிறைபடுத்த துடிக்கும் தளிர் கரங்கள் அவர்களுடையவை. எந்த குழந்தையும் வீட்டை நான்கு சுவர்களால் தீர்மானிக்க முயல்வதில்லை. பரந்த இந்த பிரபஞ்சம் முழுவதும் அதற்கு சொந்தம்! அமைதி தவள வேண்டிய அந்த காட்டில் பெரு நெருப்பை உருவாக்கியது யார்? நேசம் துளிர்க்கிற நெஞ்சம் நெருஞ்சி முளைத்த காடாய் போய்விட்டது எதனால் ? கேள்விகள்! கேள்விகள்!
பிரிதொரு சம்பவம்! அதே நாளில் தொடரும் பிரிதொரு பேருந்து பயணம் . சக பயணியரிடை நடந்த உரையாடல் . ஒருவர் முதியவர் , மற்றவர் நடு வயதினர்; வயதை மீறிய வசைபாடல். வார்த்தைகள் கடினமாக பேருந்திலிருந்து இறங்கிய முதியவரின் மைந்தன் மீண்டும் படியேறி தாக்கும் நிலைக்கு பிரயத்தனப்பட்டு விட்டான்.
இந்த நிலைக்கு யார் காரணம். ஒரு குழந்தையும் ஒரு இளைஞனும் கோபமுற நிமிடங்களே போதுமானதாய் அமைகின்றன. சாந்தமடையவே நேரமாகிறது . குடிபோதையில் மட்டுமல்ல கோபமுறும்போதும் மூளை செயல் இழக்கிறது. எந்த விஷயத்தையும் நாம் மூளைக்கோ இதயத்திற்கோ எடுத்து செல்ல முற்படுவதில்லை. அந்தந்த நிமிடங்கள். அதே நிமிட தீர்வுகள். இது தான் நமக்கு வேண்டியது. அதையே வாழ்வியல் அறமாய் பற்றியுள்ளோம். எங்கோ இருந்த் குட்டி சாத்தானை விருப்பத்தோடு நம் வரவேற்பறை வரை கொண்டு வந்துள்ளோம். அது வேறு எதுவுமல்ல. ஊடகமே அது. சரியாக பயன்படுத்தியிருந்தால் குற்றமில்லை. ஆனால் ...
ஊடகத்தில் காணும், கேட்கும் அத்தனை விஷயங்களையும் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். நம் வாழ்வாகவே எண்ணுகிறோம்! நாம் அறியாமலே நம்மை அவை நடைமாற்றம் செய்கின்றன. ஊடகம் மிக மிக வலிமையான விஷயமே. அனைத்தும் பயன்பாட்டை ஒட்டியவையே! ஆக்கத்திற்கு பயன்பட வேண்டியது புதை குழியை நோக்கி இழுக்கிறது..
சிறுவர்கள் ஊடகங்களில் தோன்றும் அத்தனை நாயகரோடும் கைகோர்த்து கொள்கிறார்கள். ஊடக நாயகன் கோபம் போன்றே கோபப்பட்டு நிழலுக்கும் நிஜதிற்குமான புரிதலின்றியே நாட்கள் நகர்கின்றன.
இந்த தருணத்தில் வாலியின்(vaali) வைர வரிகள் ஞாபகம் வருகின்றன. இது பரந்தாமன் பார்த்தனுக்கு உரைத்த சொற்கள் நாமனைவரும் புரியவேண்டியவை..
புரையற்ற புத்தியை
பேண்
காஞ்சனம் கல் ஒன்றாகக் காண்
உண்டியை குறை ஓரளவே
உதரத்தை உணவால் நிறை
தியானம் தினம் பயில்
தவிர் சோம்பல் துயில்
வெகுளி
வீக்கம் விடு
வேட்கைக்கு விடைகொடு ....
ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று
உச்சரித்து பழகு
சாந்தம்தான் தெய்வ சித்தத்திற்கு அழகு
(பாண்டவர் பூமி)
Labels:
நம்மில் கோபம்
Subscribe to:
Posts (Atom)