Sunday, October 23, 2016

சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்

"கண்ணுக்கு தெரிபவற்றை  காட்டிலும், மண்ணுக்குள் புதையுண்டு போன கல் ரதங்கள்  தான் பார்க்கப்பட வேண்டியவை" - வண்ணதாசன் (அகம் புறம்)

 "இறைவன்  மட்டுமே நித்தியமானவன் ! மற்றவை யாவும் ஒரு நாள் தேய்ந்து அழிந்து போவனவே; யாவும் மரணிக்க கூடியனவே !  தேவதைகள்,  மனிதர்கள், விலங்குகள், இந்த பூமி,  சூரியன், நிலா, நட்சத்திரங்கள் யாவும்  அழியக்கூடியனவே; அனைத்தும் மாற்றத்துக்கு உட்பட்டவையே ! இன்று மலையாய் இருப்பவை முன்பொரு காலத்தில் பெருங்கடலாய் இருந்தவையே; அவை நாளை மீண்டும் பெருங்கடலாய் மாறும்; ஆனால் ஒன்று நிரந்தரமானது; அது மாற்றத்துக்கு  அப்பாற்பட்டது; அது இறைவன்; நாம் இறைவனை நெருங்கினால், நம்மால் நிச்சயமாக இயற்கையை வென்றெடுக்க முடியும்" - சுவாமி விவேகானந்தர்



ஒரு நூற்றாண்டை கடந்தும், இன்றைக்கும், விவாத  பொருளாய்,ஆச்சர்ய வினாவாய் தொடுக்கப்படுவது சுவாமி விவேகானந்தரின் மரணம். நாற்பது வயதை தொடும் முன்னரே, தன் வாழ்வின் இறுதி உரையை எழுதி முடித்த சுவாமிஜி ஒரு ஆச்சர்ய துருவம். மின்னல் கீற்று போலும் அதை தொடரும் இடி முழக்கத்தை போலும், அவரது பேச்சு வான் முகடுகளை தொட்டு பார்த்தது. அசுரத்தனமான உழைப்பு, சலிப்பேதும் இல்லா  பயணம், தேசத்தின் மண்ணை காலால் நடந்து அறிந்து கொண்ட அனுபவம், அவர் பெற்ற அபூர்வ ஆன்ம ஞானம் அவரை காலம் தோறும் மிகப்பெரும் ஆச்சர்ய புருஷராய் இனம் கண்டு கொண்டது.காலம் அவரை மண்ணில் தோன்றிய மாபெரும் புனிதராய் புரிந்து கொண்டது. தொண்டும், தியாகமும் தேசத்தின் லட்சியம் என பேச வைத்தது.

என்றென்றும் இளைஞராய், எல்லோரிடமும் எக்காலத்தும் உத்வேகத்துடன் பயணப்படும் ஸ்வாமிஜி, நல்ல நம்பிக்கையை விதைக்கும் எண்ணங்களை தூவி சென்ற துறவி என யுகத்திற்கும் நிலைபெற்று விட்டார். 'வலிமையே வாழ்வு ' என உடலை வலுப்படுத்த சொன்ன சுவாமிஜி யின் பயணம் நிச்சயம் அதிசயமானதே!. 'கீதையை படிப்பதை காட்டிலும் கால்பந்தின் மூலமே நீங்கள் சொர்கத்திற்கு மிக அருகில் இருப்பீர்கள்' என சொல்ல வைத்தது'. 'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே' - என யாவரையும்அழைக்கிறார். அவரே ஒரு முறை குறிப்பிட்டதை போல 'போதும், நான் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கான பணியை முடித்து விட்டேன்' என்கிற எண்ணம் அவரிடம் வேர்விட்டு இருந்தது.

அவர் நாற்பதை தாண்டியும் வாழ பிரிய படாமல் போனதற்கு இரு காரணங்கள் இருந்திருக்கலாம்.. பெரிய மரங்கள் இருக்கிற இடத்தில், சிறிய மரங்கள் செழித்து வளர்வதற்கு வாய்ப்பில்லை. பெரிய மரமே கிளை பிரித்து நிழல் பரப்பி ஒட்டுமொத்த இடத்தையும் ஆக்கிரமித்து கொள்ளும்; அது போல குருமார்கள் தொடந்து வழிகாட்டியபடி இருந்தால், சீடர்களால் தனித்து ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி பெற முடியாது. இன்னொரு காரணம் வேடிக்கையானது; ஆனால் பொருள் பொதிந்ததே!.

இறை ஒரு கழுதையை  படைத்து நீ காலையில் இருந்து இரவு வரை உழைத்து கொண்டு இருப்பாய். உன் முதுகில் பெரிய பாரத்தை தூக்கி கொண்டு செல்வாய். உனக்கு நான் ஐம்பது ஆண்டுகளை வாழ்நாளாக தருகிறேன்; உனக்கு பெரிய அளவில் அறிவு இருக்காது என்றது. ஐம்பது வருடம் என்பது எனக்கு அதிகம்; எனவே எனக்கு இருபது வருடங்கள் போதும் என்றது கழுதை. இறை அதை ஏற்று கொண்டது. அடுத்து நாயை இறைவன் படைத்தான்; அப்படி படைத்து இறைவன் நீ மனிதனுக்கு தோழனாய் இருப்பாய்; அவன் வீட்டை காப்பாய்; அவன் எதை உணவாக தருகிறானோ, அதை உண்பாய்; உனக்கு நான் இருபத்து ஐந்து வருடங்களை வாழ்நாளாக தருகிறேன் என்றது; அதற்கு நாய், எனக்கு பத்து வருடங்கள் போதுமானது என்றது; இறைவனும் ஏற்று கொண்டான்;

அடுத்து இறை ஒரு குரங்கை படைத்து நீ இருபது ஆண்டுகள் வாழ்வாய்; உனக்கு கிளைக்கு கிளை தாவும் வல்லமை உண்டு; நீ சில நேரங்களில் வேடிக்கையாய் நடந்து கொள்வாய்; என்றது. ஐயோ! எனக்கு பத்து வருடங்களே போதும் அய்யா என்றது குரங்கு; அதற்கு இறைவன் சரி என ஒப்பு கொண்டார்; அடுத்து இறைவன் மனிதனை படைத்தான்; அதன் பின் நீ பகுத்தறிவு உள்ளவன்; உனக்கு மற்ற மிருகங்களை தன்  வழி படுத்தும் ஆற்றல் உண்டு; நீ உலகை ஆளலாம்; உனக்கு இருபது ஆண்டுகள் வாழ்நாள் என்றது; அதற்க்கு மனிதன் எனக்கு நீங்கள் அந்த கழுதை விட்ட முப்பது ஆண்டுகள், நாய் விட்ட 15 ஆண்டுகள், குரங்கு வேண்டாம் என சொன்ன 10 ஆண்டுகளை என் இருபது ஆண்டுகள் ஆயுளோடு தாருங்கள் என்றது; மனிதனாய் இருக்கும் நான் இருபது வருடங்கள் வாழ்ந்து எதையும்  சாதிக்க முடியாது என வேண்டினான்; இறைவனும் ஒப்பு கொண்டார்;

அது முதல் மனிதன், தன் முதல் இருபது ஆண்டுகள் மனிதனாகவும் அதன் பின் அடுத்த முப்பது ஆண்டுகள் கழுதையை போல் குடும்ப பாரத்தை சுமப்பவனாகவும் இருக்கிறான்; பின் பதினைந்து ஆண்டுகள் பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பிய பின் நாயை போல் வீட்டை பாதுகாக்கும் வேலையை பார்க்கிறான்; அடுத்த பத்து வருடங்கள் அவனது பணி ஓய்வு வருடங்கள்; அதில் அவன் குரங்கை போல் காரணமடித்து பேர குழந்தைகளை மகிழ்விக்கிறான்; இது வேடிக்கையாய் சொன்னாலும் மனிதனின் திறனோடும் பிணையப்பட்டதே; மனிதனின் முதல் நாற்பது ஆண்டுகள் பேராற்றலாலும், அளப்பரிய உந்து சக்தியாலும் நிறைந்தவை; காற்றாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு போக கூடியது; உலகிற்கு பயன் தரும் நாட்கள் அவை;

தான் வாழ்ந்த இறுதி நாட்களில், பேலூர்  ராமகிருஷ்ண மடத்தின், துறவியர் கட்டிடத்தின் தென் கிழக்கு மூலையில் இருந்த அறையை சுவாமிஜி  உபயோகித்தார்; இந்த அறையில் தான் தன் இறுதி சுவாசத்தை விட்டார்; அந்த அறை  இன்றும் பழமை மாறாமல், புத்துரு குன்றாமல், அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது; அந்த அறையின் நாட்காட்டி 1902 ஆம் ஆண்டின் ஜூலை 4 ஐ, இன்றும்  காட்டுகிறது;

அவர் உபயோகிக்கும் மேசை, பேனா, மை புட்டி, அவரின் புகைப்படம், அவர் தியானத்திற்கு உபயோகித்த மானின் தோல், அவர் உபயோகித்த தேனீர் குடுவை, அவரின் கட்டில் அப்படியே உள்ளது; இந்த அறையில் தான் தன் விருந்தினர்களையும், சகோதர துறவிகளையும் சந்தித்து  அளவளாவி வந்தார்; அருகே சுளித்து ஓடும் கங்கை நதியையும், அதன் செஞ்சாம்பு நிறத்தையும், அதன் வேகத்தையும், துடுப்பு போடுவதையும் மேலை நாட்டினருக்கு தன் கடிதத்தில் குறிப்பிட்டார்;

அவரின் இரண்டாவது மேலை நாட்டு பயண தருவாயில் இருந்தே அவரின் உடல் நலிவுற தொடங்கி விட்டது; அவரின் இறுதி ஒன்றரை வருடத்தில், அவரிடம் சர்க்கரை நோய் அவரை பற்றி இருந்தது; அவர் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தார்; அவருக்கு இருந்த பத்தியத்தில் 21 நாட்கள் அவர் தண்ணீரும், உப்பும் எடுத்துக்கொள்ள கூடாது என்பது; அதன் படியே அவரின் தொண்டை ஒரு சொட்டு நீரை கூட கடந்து செல்ல அனுமதிக்கவில்லை; "உடல் மனதின் ஒரு கருவி; மனம் எதை எண்ணுகிறதோ அதை உடல் சரிவர முடிக்க வேண்டும் " என்பார் அவர். பார்வை பாதிப்புக்கு உள்ளான தருணத்தில், அட நான் சுக்ராச்சார்யார் போல் ஆகி விட்டேன் என குறும்பாக குறிப்பிட்டும் உள்ளார்;

இறுதி ஆண்டுகளில், அவர் முக்கிய விஷயங்களில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்; முடிவெடுப்பதில் இருந்தும் மடத்தின் சொத்துக்களை தனக்கு பின் யார் கவனிப்பார் என்பதை முடிவெடுத்து செயல்படுத்தினார்; அதன் பின்  தன்   அறையில் செல்ல பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தார்; அவர் அதன் பின் தன் தாயை அழைத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டார்; ஆதி சங்கரரின் வாழ்வை அவர் இங்கு நினைவு கூர்கிறார் ; வாழ்வு முழுவதும் அவர்களுக்கு நான் பல தொல்லைகள் தந்து உள்ளேன்; ஒரு விதவை தாயின் கடைசி ஆசையை, தன்  மகன் நிறைவேற்ற வேண்டும் அதை செய்கிறேன் என ஜனவரி 26 அன்று திருமதி ஓலே புல் அவர்கட்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்; அதன் பின் அவர்  தீர்த்த யாத்திரையின் ஒரு பகுதியாக டாக்கா நகரையும், சந்திரநாத் நகரையும் தரிசிக்கிறார்; அவரின் உடல் நிலையை முன்னிட்டு அஸ்ஸாமில் - ஷில்லாங் நகரில் தங்குகிறார்; அங்கு அவர் ஹென்றி காட்டன் அவர்களை சந்திக்கிறார்; அங்கு இருவரும் நிறைய கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர்; அதன் பின் ஸ்வாமிஜி மே மாதம் இரண்டாவது வாரம் பேலூர் மடத்துக்கு திரும்புகிறார்;

அதன் பின்னான நாட்கள் மடத்தை ஒழுங்கு படுத்துவதிலும்,ராமகிருஷ்ண மடம் தொடர்ந்து எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், வகுக்க துவங்கினார்; அவர் மடத்துக்குள் தொடர்ந்து தியானம், சத்சங்கம், கற்றல், இறை ஆராதனை இவை  நடப்பதை விரும்பினார்; நான்கு மணிக்கு மணி அடிக்க படும்; துறவிகள் தம்முள் தயார் படுத்தியபடி அனைவரும், தியான அறையை/பூஜை அறையை அடைய வேண்டும்; மடத்தினில், தொடர்ந்து வகுப்புகள், சொற்பொழிவுகள், தியானம் இவை தொடர வேண்டும் என்பதில் பெரும் அக்கறை அவருக்கு இருந்தது; அனைவருக்கும் முன்பு மூன்று மணிக்கு எழும் அவர் முதல் மனிதராய் தியானத்தில் வடக்கு நோக்கி அமரவும் இரண்டு மணி நேரம் எந்த அசைவும் இன்றி தியானத்தில் லயித்து  ஈடுபடுவதில் அவர் நடை முறையில் இருந்தது; தியான சித்தர் என பெயர் எடுத்தவர் அல்லவா அவர்; அதன் பின் சிவ சிவ எனும் மந்திரத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திரு உருவ படத்தை வீழ்ந்து அடிபணிந்து வணங்கி மாடியில் இருந்து கீழ் இறங்கி செல்வார்;

ஒரு முறை ஸ்வாமிஜி அவர்களின் உடல் நிலை ஒத்துழைக்காத  நிலையில், சில நாட்கள், பிற பிரம்மசாரிகளுடன் தியான வகுப்பை தொடர  முடியவில்லை; ஒரு நாள் பிரார்த்தனை மண்டபம், ஒரு சில துறவி மக்களால் மட்டுமே நிரம்பி இருக்கிறது; மற்றவர் யாரும் அந்த நியதியை பின்பற்றவில்லை என எண்ணுகிறார் ஸ்வாமிஜி; அன்று தவறியவர் யாவரையும், வெளியில் போய் பிட்ச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் தண்டனை தரப்படுகிறது; இதில் மூத்த சகோதர துறவிகளும் தப்பவில்லை;



அந்த நாளில்,ஒரு அதிகாலையில்,  சுவாமி சிவானந்தர்( மகா புருஷ் மஹராஜ் ) எழுந்து பிரார்த்தனை அறைக்கு வரவில்லை[உடல் நோய்மையை முன்னிட்டு அவரால் முடியவில்லை]; அவரிடம் சென்ற சுவாமிஜி, சகோதரா! நீ  குருதேவரின் பூரண அருள் பெற்றவன்; உன்னால் முக்தியை எளிதில்  எட்ட முடியும்; ஆனால் பிற இளம் உள்ளங்கள் உன்னை பார்த்து, கற்பவர்க்கு நீ உதாரணமாய் இருக்க வேண்டாமா! அவசியம் நீ, பிரார்த்தனையில், ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று அமர வேண்டும்; தியானம் செய்ய வேண்டும் என்றார்; அவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து சுவாமி சிவானந்தர் தன் வாழ்வின் இறுதி வரை அவரின் உடல் ஒத்துழைக்காத இறுதி நாட்கள் வரை அப்படியே இம்மிபிசகாமல் கடைபிடித்தார்;

அவரது இறுதி நாளுக்கு முந்தைய வாரம்; அவர் தன்னுடைய சீடர் ஒருவரிடம், வங்காளி பஞ்சாங்கத்தை கேட்டு பெற்றுள்ளார்; அதன் பின், ஒரு குறிப்பிட்ட தேதிக்காக அதை திரும்ப திரும்ப புரட்டி உள்ளார்; அவரது மறைவிற்கு பிறகே, பிற  துறவியர்க்கு இதன் அர்த்தம் புரிந்துள்ளது; தான் இந்த பிரபஞ்ச வாழ்வை முடிக்கும் நாளுக்காகவே, அவர் தேடி இருந்துள்ளார்; முன்பு பரமஹம்சரும், அவரின் இறுதிக்கு முன், இப்படி தான் வங்க பஞ்சாங்கத்தை புரட்டி தன் மண்ணுலக இறுதி நாளை முடிவு செய்துள்ளார்;

இறுதி மூன்று நாட்களுக்கு முன், மாலையில் உலாவ சென்ற அவர், சகோதர துறவி சுவாமி பிரேமானந்தரிடம், ஒரு வில்வ மரத்துக்கு கீழே சுட்டிக்காட்டி, என் இந்த உடலை, இந்த இடத்தில் எரியூட்டுங்கள் என குறிப்பிட்டு உள்ளார்; ஆக யாவும் அவருள் திட்டமிட்டே நடைபெற்று உள்ளன;

சகோதரி நிவேதிதை, தனக்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கோர்வையாக பதிவு செய்துள்ளார்; அது புதன் கிழமை; அன்று சுவாமிஜி உபவாசம் இருந்தார்; அன்று மடத்துக்கு வருகை தந்த நிவேதிதை, தன் பள்ளி பற்றி சில ஆலோசனைகளை கேட்டு உள்ளார்; அதில் தன்னை ஈடுபடுத்தாத சுவாமிஜி, தன் சகோதர துறவிகளை அணுக பணித்துள்ளார்; ஆனால், அன்றைய காலை உணவை, அவரே நிவேதிதைக்கு பரிமாறுகிறார்; அன்று நன்கு வேக  வைத்த பலா கொட்டைகள்,உருளை கிழங்கு, அரிசி உணவு இவற்றுடன் நல்ல பால் பரிமாற்ற பட்டது; அன்று வழக்கத்துக்கு மாறாக, சந்தோஷமும் கேலியும், கரைபுரண்டு ஓடியது; உணவு உண்டு முடித்த பின், அவரே கைகளை கழுவிட நீர் விட்டு, கைகளை துடைத்து விடுகிறார்;

அப்போது நிவேதிதை, சுவாமிஜி! நீங்கள் என்னுடைய குரு! பார்க்க போனால், நான் அல்லவா இந்த பணிவிடைகளை செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்; அதற்கு சுவாமிஜி, 'ஏன்! இயேசு கிறிஸ்து தன் அருமை சீடர்களுக்கு பாதங்களை கழுவி விடவில்லையா!' - என கேட்கிறார்; ஆனால் அது இறுதி முறை அல்லவா!, வார்த்தைகள் நிவேதிதாவின் உதடு வரை வந்து உறைந்து போய் நின்று விட்டன!

அன்று ஜூலை 4,  வெள்ளி கிழமை, வழக்கத்துக்கு மாறாக மிக அதிக ஆரோக்கியத்துடன் தென்பட்டார்; அதிகாலையில் எழுந்த அவர், தனியாக மடத்து தியான அறைக்கு சென்று மூன்று மணி நேரம் தியானத்தில் அமர்ந்துள்ளார்; வழக்கத்துக்கு மாறாக அந்த அறையை அவர் பூட்டிய பின் அமர்ந்துள்ளார்; அன்று காளி தேவியை வழிபட வேண்டும் என்கிற அவரின் விருப்பத்தை சொல்லி உள்ளார்; மடத்தில், அதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன; அதன் பின் தன சீடர் சுத்தானந்தரிடம், யஜுர் வேதத்தில் ஒரு பகுதியை சொல்லி அதை அதன், தெளிவுரை விளக்கத்தோடு படித்து காட்ட சொல்லி உள்ளார்; அன்று பிற சகோதர துறவிகளுடன் அமர்ந்து மதிய உணவை மகிழ்ச்சியுடன் உண்டு உள்ளார்; அதன் பின் பிற பிரம்மச்சர்ய துறவிகளுக்கு, ஏறக்குறைய மூன்று மணி நேரம் சமஸ்கிருத இலக்கண வகுப்பை எடுத்துள்ளார்; அன்று மாலையில் சுவாமி பிரேமானந்தருடன் இரண்டு மைல் தூரம் நடந்து சென்று வந்துள்ளார்;

மாலை ஏழு மணிக்கு தன் அறைக்கு சென்ற சுவாமிஜி, தன்  சீடரை அழைத்து தான் அழைக்காத வரை தன் அறைக்கு யாரும் வர வேண்டாம் என சொல்லி உள்ளார்; அப்படி போனவர், ஒரு மணி நேரம் தியானத்தில் இருந்துள்ளார்; அதன் பின் தன் சீடரை அழைத்து, அறை  ஜன்னல்களை திறந்து விட சொல்லி,  தனக்கு விசிறி விட சொல்லி உள்ளார்; அதன் பின் தன் படுக்கைக்கு தானே சரிந்துள்ளார்; சீடருக்கு அவர் உறக்கத்தில் உள்ளார் என்ற நினைவு;

ஒரு மணி நேரத்துக்கு பின், அவர் கைகள் சற்றே அதிர்ந்துள்ளன; ஒரு ஆழ்ந்த சுவாசத்தை அவர் எடுத்து உள்ளார்; சில நிமிட நிசப்தத்துக்கு பின் இன்னுமொரு ஆழ்ந்த சுவாசம்; அதன் பின் அவரின் கண்கள், புருவ மையத்தில் நிலை பெறுகின்றன. முகம் ஒரு தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறது; அப்பொழுது அவரின் சீடர், சில இரத்த துளிகளை, மூக்கு, கண், வாயில் காண்கிறார்; யோக சாத்திரத்தின் படி, ஒரு யோகியின் உயிர், இறுதி ஸ்வாசம், உச்சசந்தலையில் உள்ள துளை வழியே வெளியேறுகிறது என்கிறது;   அது அவர்க்கு இரத்த துளிகளாய்  வெளிப்பட்டு உள்ளது; பரந்துபட்ட வானத்தில் சிறகடித்து பறந்து, வான் முகடுகளில் கூடுகட்டி வாழ்ந்த ராஜாளி பறவை, விண்ணுலகம் நோக்கி சென்ற நொடி அது; அவரை பரிசோதித்த மருத்துவர், அவரின் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டது என்கிறார்; செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு காத்திருந்த  பின், நள்ளிரவில், அவர் மறைந்து விட்டார் என அறிவிக்க படுகிறது;

அடுத்த நாள் காலையில், இந்த செய்தி வெளிப்பட்டு மக்கள் எல்லா இடத்தில் இருந்தும் வந்து குவிந்து விட்டனர்; சகோதரி நிவேதிதை, அவரின் உடலுக்கு காலையில் இருந்து அருகே இருந்து விசிறியபடி இருந்துள்ளார்; கால் மற்றும் கை அச்சுகள் படி எடுக்க படுகின்றன ; மதியம் இரண்டு மணிக்கு கீழே எடுத்து வரப்பட்ட உடல், காவி துணியாலும், மலராலும் அலங்கரிக்க பட்டு,  அவர் சுட்டி சென்ற அதே வில்வ மரத்துக்கு இறுதி யாத்திரையாய் எடுத்து செல்லப்படுகிறது; சிதை மூட்டப்படுகிறது; இதே கங்கையின் மறு கரையில், பதினாறு ஆண்டுகளுக்கு முன் ராமகிருஷ்ணரின் உடலும் இப்படி தான் அக்கினிக்கு அர்ப்பணிக்க பட்டது;

இதை பார்த்தபடி இருந்த நிவேதிதை ஒரு சிறு குழந்தை போல் அழுது புரள்கிறார்; அந்த தருணத்தில், காற்றில் வெளிப்பட்ட சிறு காவி துணி, நிவேதிதாவின் மடியை அடைகிறது; அதை அவர் தனக்கு அமைந்த ஆசீர்வாதமாய் எடுத்து கொள்கிறார்; அங்கு பெறப்பட்ட அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது; அதே இடத்தில் இன்று விவேகானந்தருக்கு கோயில் எழுப்ப பட்டு உள்ளது;

நான் இந்த உடலை விட்டு வெளியேறி விட்டேன் என்றால் நான் வேலை செய்வதை விட்டு விட்டேன் என்று அர்த்தமில்லை!. நான் எங்கும் மனிதர்களை ஊக்க படுத்துவேன்! உலகம் யாவும் இறை தான் என உணர்கிற நாள் வரையில் என் பணி  தொடரும்.

[இந்த பகுதி என் நண்பரின் வேண்டுதலால், பதிவிடுகிறேன்.  மேலும் ஆழ்ந்து பயணப்பட, சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறை காணவும் - சுவாமி ஆசுதோஷானந்தர் ][Vivekananda - a  Biography - swami Nikhilananda ]




சுவாமி விவேகானந்தர் அறை - பேலூர் மடம் :









அவரின் அறை - யூ டியூப் காணொளி 
https://www.youtube.com/watch?v=naOqN6BXZ9k