Wednesday, October 2, 2013

இன்றைய நாளில் காந்தி - ஓர் பார்வை


இன்றைய நாட்களில் காந்தியை நாம் எப்படி பார்கிறோம்? நமக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் காந்தி தான் காரணம்.. காந்தி மட்டும் இல்லாமல் இருந்துருந்தால் நாம் நன்றாக இருந்து இருப்போமா? 


நம் முன் உள்ள பெரிய கேள்வி இது. வசூல் செய்ய முடியாத கணக்கை எல்ல்லாம் நாம் காந்தி கணக்கு என முத்திரை குத்தி விட்டோம். திரை அரங்கில் எப்போதெல்லாம் காந்தியை காண முடிகின்ற பொழுதுகளில் நாம் விசில் அடித்து நம் மரியாதையை காண்பிக்க ஒருபோதும் தவறுவதில்லை.  

காந்தி நம்மை விட்டு விடை பெற்று அறுபத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் நாம் செய்கின்ற அத்துனை தவறுகளுக்கும் காந்தியை பொறுப்பாக்குகிறோம். கவிஞர் மேத்தா அவர்கள் தன கண்ணீர் பூக்கள் எனும் நூலில் ஒரு கவிதையை வைத்தார். "தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி" என்பதே அது.



போகிற போக்கில் 
எங்கள் பிறந்த நாள் உடையே 
எங்கள் தேசிய உடையாக 
மாறிவிடுமோ ?
 
மகாத்மாவே உன்னை ஒரு வகையில் 
அப்படியே பின்பற்றுகிறோம் 
அரைகுறையாக தான்  உடுத்துகிறோம்.

எங்களுக்கு தங்கமும் வெள்ளியும் 
விழாக்களின் பெயரில் தான் 
கிடைக்கிறது.

திறந்து விடப்பட்டு தண்ணீர் எல்லாம் 
பள்ளங்களை ஏமாற்றி விட்டு 
மேடுகளை நோக்கியே பாய்கின்றன 
என்றார். 

அன்று எழுதிய வரிகளில் பெரும் மாற்றம் எதுவும் இன்று இல்லை. ஆனால் மற்றவர்கள் காந்தியை கொண்டாடிய அளவுக்கு, புரிந்து  அளவுக்கு நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே அது . மார்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை அவர்களின் அத்தனை போராட்டத்திற்கு பின்பும் அவர்களின் ஆதர்ஷம் காந்தி தான்.      

பாரதி இப்படி தான் காந்தியை எழுதினான்.. 

வாழ்க  நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வு உற்று, வறுமை மிஞ்சி 
விடுதலை தவறிக் கெட்டு 
பாழ்பட்டு நின்றதாமோர்  பாரத தேசம் தன்னை 
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ  வாழ்க. 
என்றே முண்டாசு கவிஞன் கொண்டாடுகிறான். 

காந்தி ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வந்த விஷயம் இரண்டு.
அவை அவரின் பெரிய கனவு.. ஒன்று ராம ராஜ்ஜியம். மற்றது கிராம ராஜ்ஜியம். அவை இரண்டும் இன்றும் கானல் நீராகவே உள்ளன. 



கலாம் தன்னுடைய தென் ஆப்பிரிக்க பயணத்தில் நெல்சன் மண்டேலாவை சந்தித்து இருக்கிறார். அதே போல் அவர் இருபத்து ஆறு ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ராபின் தீவு அறையை கண்டு வந்து இருக்கிறார். இந்த சின்ன அறையில் இவ்வளவு கடின வாழ்கையை எதிர்கொள்ள எது உங்களுக்கு துணையாய் இருந்தது என கலாம் கேட்க அவர் சொன்ன பதில் "மகாத்மா காந்தி!"

மண்டேலா மறைவுக்கு கலாமின் இரங்கல்களும் அவரின் நினைவும் இங்கே..

http://www.dnaindia.com/india/report-for-nelson-mandela-gandhi-was-an-anti-apartheid-icon-apj-abdul-kalam-1930708







     

  

எஸ். ராமகிருஷ்ணன் - குற்றமும் தண்டனையும்





எஸ். ராமகிருஷ்ணன் - பேச்சு (குற்றமும் தண்டனையும்) (தஸ்தாயெவ்ஸ்கி)

சமீபத்தில் ஓர் இனிய சொற்பொழிவின் தொகுப்பை காணொளியாக காண கிடைத்தது. அது எஸ். ரா. அவர்கள், ருஷ்ய பண்பாட்டு கழகத்தில் நடத்திய தொடர் சொற்பொழிவின் ஒரு பகுதி. அட்சரம் வெளியீடாக அது தனி தனியே வெளி வந்து இருக்கிறது. வெகு நாட்களாக அவரின் பத்தியை வாசித்ததில் இருந்து, இந்த பேச்சை காண ஆவல் கொண்டேன்.









அவரது முந்தைய பேச்சு, டால்ஸ்டாயை பற்றி இருந்தது. எனக்கு பார்க்க கிடைத்தது, அவரின்  (குற்றமும் தண்டனையும்) (தஸ்தாயெவ்ஸ்கி) பற்றிய பகுதி மட்டுமே. எஸ். ரா. அவர்கள்,தஸ்தாயெவ்ஸ்கியின் மிக பெரிய உபாசகர். தன வாழ்வு எங்கும், யெவ்ஸ்கியும், அவரின் தனித்த எழுத்தும் பின் தொடர்வதாக சொல்கிறார் . யெவ்ஸ்கியை, அவரின் மூல எழுத்து எப்படி இருக்கும் ; அதை வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் ரஷ்ய மொழி படிக்க முனைந்தவர் அப்படி ஒரு மலைப்பு அவருக்கு.   யெவ்ஸ்கியை தொடரும் நிறைய பேர் அப்படி இருப்பது அவரின் பெரிய வெற்றி தான். அவரின் மனதிற்கு மிக மிக நெருக்கமானவராக தஸ்தாயெவ்ஸ்கி இருந்திருக்கிறார்.

எஸ். ரா. அவர்களின் வலை மனையில் உள்ள நிறைய பத்திகள் யெவ்ஸ்கியை கொண்டாடி தீர்க்கின்றன. 






நான் தஸ்தாயெவ்ஸ்கி, ஆண்டான் செகாவ், டால்ஸ்டாயை பற்றி அதிகம் அறிந்தது, அவரின் எழுத்து மூலமே. கல்லூரி நாளில் டால்ஸ்டாயின் வாழ்வு பாடமாய் இருந்தது.எஸ். ரா. அவர்களின், " துணை எழுத்து", "குற்றமும் தண்டனையும்" பற்றி அதிகம் பேசுகிறது. 

அவரது இந்த பேச்சு ஓர் அழகான பயணம். நாம் அவரின் கைகளை பற்றியபடி பயணிக்கிறோம்.

டால்ஸ்டாய,  யெவ்ஸ்கி இருவரும் ஒரே காலத்திய ரஷ்ய எழுத்தாளர்கள். இருவரும் கடைசி வரை பார்த்து கொள்ளவே இல்லை.   டால்ஸ்டாய், செழிப்பான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர்.  யெவ்ஸ்கி - அதற்க்கு நேர் எதிர் துருவம் வாழ்வில் விதி அவரை துரத்தி துரத்தி அடித்தது கதறி கதறி அழ வைத்தது. யெவ்ஸ்கியின் கதை உலகம்,  ஒளியும் அதை ஒட்டிய இருளுமாய் இருந்தது.


எஸ். ரா. எழுத்து மூலமே, எனக்கு "இடியட்", 'வெண்ணிற இரவுகள்', "கார்மசெவ் சகோதரர்கள்" என  யெவ்ஸ்கி மெல்ல அறிமுகம் ஆனார் .

எஸ். ரா. அவர்களின் பேச்சுக்கு வருவோம்.யெவ்ஸ்கி பற்றிய அவரின் அறிமுகம் அவ்வளவு அருமையாக இருந்தது. யெவ்ஸ்கி - தன வாழ்வில் பட்ட அவமானம், துயர், வலி, நோய்மை , புறக்கணிப்பு இவை அவரின் நாவல்களில் பிரதிபலிக்கிறது. அவரின் வாழ்வையும், எழுத்தையும்  நம்மால்   பிரித்தறிய முடியாது போலும். அவர் வாழ்வையே கதாபாத்திரங்களூடே நாவலை படைத்து சென்றுள்ளார்.

அவரின் வலிப்பு நோய், அவரின் பண பிரச்சனை, நெருங்கிய மரணம், சூதாட்டங்கள், அதற்கு இடையிலான அவரின் எழுத்து , சைபீரிய சிறை வாழ்வு, மரணம் வரை சென்று மீண்டது என அவரின் வாழ்வை அழகாக நம் முன் விவரிக்கிறார். கணக்கில் அடங்கா திருப்பங்கள் கொண்டதே     யெவ்ஸ்கி வாழ்வு. எஸ் ரா அவர்களின் ஞாபக கித்தான்கள், ஒரு மிக நீண்ட வாழ்வை நம் முன் திரை இடுகின்றன.

குற்றமும் தண்டனையும் என சொல்லும் போது  நம் முன் அரசர்கள் எப்படி எல்லாம் தண்டனை தந்தனர் என பட்டியல் இடுகிறார். மனிதன் குற்றம் புரிய காரணம் தேடுவதும், அதை நியாய படுத்துவதும் ஒரு கலையாகவே வளர்ந்து வந்துள்ளது. அன்றைய நாளில் கூட சீட்டு கம்பெனி நடத்தும் ஒரு பேராசிரியர் இருந்துள்ளார்.   

அவரின் இந்த கவித்துவமான பேச்சுக்கு நன்றி.. !!!
         


Sunday, April 7, 2013

வண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று !




வண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று ! பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இது நிச்சயம் மிக மிக உபயோகமான பங்களிப்பு விகடன் மூலம்.. நிறைய எழுத்தாளர்களின் எழுத்தை வாசித்த நமக்கு, அவர்களின் குரலை கேட்கும் பாக்கியம் கிட்டுவதில்லை. சமீபத்தில் ஒரு ப்ரொவ்சிங் சென்டரில் ஆச்சர்யமாக ஒரு சொற்பொழிவை கேட்க நேர்ந்தது. அங்கு வேலைக்கு இருக்கும் ஒருவர் சொற்பொழிவை கேட்டு கொண்டு இருந்தார்.

நானும் அவரை அணுகி, இது யாருடைய பேச்சு என கேட்டேன்.. அவர் இது கண்ணதாசன் குரலுங்க... நீங்க கேட்டதில்லையா என்றார். அட! நான்  தவழ்கிற வயதிலேயே ,  விடைபெற்ற கண்ணதாசனின்  எழுத்து, என்னை அடைந்ததை போல் அவரின் குரல் என்னை அடைந்ததில்லை.. அந்த புண்ணியத்தை இந்த முறை விகடன் கட்டி கொண்டது.. இந்த ஒலி வடிவம் வந்து ஏறக்குறைய ஆறு மாதம் இருக்கும்... இருந்தாலும் வண்ணதாசனின் பேச்சை, என் அப்போதைய பரவசத்தை வார்த்தைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி.  மழையை, உங்கள் குழந்தையை பார்க்க சொல்லுங்கள் என்கிறார்..

ஒவ்வொரு நாளும் அவரின் பதியப்பட்ட குரல் ஒலிபரப்பாகும்.. நான் கேட்டதும் பதிந்ததும் ஒரு நல்ல நாளின், காலையில்.... எழுத்தாளர் மாலன் ஒரு முறை எழுதியது போல 'ஓடுகின்ற கங்கையை ஒரு செம்புக்குள் எடுத்து வந்த திருப்தி!' உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த பதிவு...  இனி அவரின் காந்தமாய் ஈர்க்கும் வார்த்தைகள்  ...

சமீப காலமாக எங்கள் வீட்டு பகுதியில் அவர் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்... நேர்த்தியான மேலுடை, கால் சட்டை, காலணிகள்; அதை   விட முக்கியமான அடையாளம், நடந்து வரும் போதே அவர், விசில் அடித்து பாடிக்கொண்டே வருவது, அப்போது தான் விசில் அடிக்க கற்று  கொண்டது போல்  இருக்கும்..

காற்றும் அந்த  கிறிஸ்தவ கீதங்களில் மட்டும் தனி தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல விலகும்.. கையில் ஒரு நேர்த்தியான தோல்பட்டியில், மினுமினுக்கும் பித்தளை கண்ணியுடன் ஒரு நாயை கூட்டி கொண்டே வருவார்.  அவருடைய தோற்றத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம்  இல்லாமல் அந்த நாய் இருக்கும். நம்முடைய எந்த தெருவிலும், எந்த சந்திலும் பார்க்க முடிகிற, ஒரு சாதாரண நாய் அது. ஊட்டமாக கூட இராது; மெலிந்தே இருக்கும்; பொதுவாக நாய்கள், அதற்கு வேற்று  முகமாக  தெரிகிற நாயை பார்த்தால், தன்னுடைய அதிகாரத்தையோ, பயத்தையோ காட்டும் இல்லையா ? தன் அதிகார எல்லையை, நிரூபிக்க முயலும் இல்லையா? அப்படி கூட இராது அந்த நாய்.. இது குறைக்கவே இல்லை.  

ஏன் இப்படி ஒரு நாயை அவர் தனக்கு தேர்ந்தெடுக்கிறார் ? பார்த்தாலே விரட்டுகிற, கன்றுக்குட்டி உயர செல்லங்கள் எவ்வளவோ இருக்கின்றதே. இவர் ஏன் இதை போல ஒன்றை அழைத்து கொண்டார்? என்னால் கேட்காமலே இருக்க முடியவில்லை ..ஆனால் கேட்பதற்கு சற்று  தயக்கம்.. ஆனால் இந்த தயக்கம் எல்லாம் சங்கரி அம்மாவுக்கு கிடையவே கிடையாது.. அவர் கேட்டே விட்டார். நேரடியாக கேட்காமல், என்ன அதுக்கு உடம்பு சரி இல்லையா? அவர் விசில் அடிப்பதை நிறுத்தி விட்டு, சிரித்தாராம்.. ஏன் அது நல்லா தானே இருக்கு என நாயின் உச்சந்தலையை தடவினாராம்.. அது அவர் மேல் முன்காலை பதித்து, கொஞ்சுவது போல சத்தம் கொடுத்ததாம் ..  பார்த்தீங்களா என்பது போல, மறுபடியும் சிரித்தாராம்.. அவர் வேறு ஒன்றும் சொல்லவில்லையாம்.. மறுபடியும் விசில் அடித்து பாடி கொண்டே போய் விட்டாராம் . சங்கரி அம்மாவும், அதிகம் விவரிக்கவில்லை. 

இது நம்ம லச்சுமி தத்தெடுத்த கதயால்லமா இருக்கு என்று மட்டும் என்னிடம் சொன்னார். லச்சுமி என்பது அவருடைய சினேகிதி.. 

தாமதமாக தான், லட்சுமிக்கு கல்யாணம் ஆயிற்று கணவர், பஸ் ஓட்டுகிறவர்..மிகச்சின்ன வாடகை வீடு தான்.. சந்தோசமாக தான் இருந்தார்கள்.. பத்து பதினைந்து வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை அவர்களுக்கு .  இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.. இவர்களை போலவே, இன்னொரு சிறிய வாடகை வீட்டில் பிறந்த அந்த நான்கு வயது குழந்தையை, தத்தெடுத்து கொண்டார்கள்.. அதற்கு, நான்கு வயதுக்கு உரிய மனவளர்ச்சி இல்லை. சரியாக பேச்சு வரவில்லை.. அந்த குழந்தையை, லட்சுமியின் கணவர் கொஞ்சுவதை பார்க்க, ஆச்சர்யமாக இருக்கும்.. இதுவரை தரையில் படுக்கும் அவர், அந்த குழந்தைக்காக, ஒரு கட்டிலை வாங்கினார். சின்ன அளவு, தொலைகாட்சி பெட்டியை வாங்கினார். லட்சுமி, சங்கரி அம்மாவிடம் சொன்னார்களாம்.. ஓடி ஆடுகிற பிள்ளைகளை வளர்க்கத்தான், ஊர் உலகத்தில், ஆயிரம் பேர் இருக்காங்களே! 

நம்முடன் இப்படி ஒரு லட்சுமி இருக்கிறார்.. நம்முடன், நாயை கூடி கொண்டு , விசிலடித்து பாடியபடியே செல்கிற இப்படி ஒருவர் இருக்கிறார். இவர்களிடம் இருந்தும், இவர்களை போன்ற பலரிடம் இருந்தும் தான் நான்   கற்று கொள்கிறேன். நான் கற்றது கையளவு ! ஆனால் அந்த கையளவு எல்லாம், இது போன்ற மனிதர்களின் மனதளவு.. எல்லாவற்றுக்கும், மனம் தான் அளவு! எல்லாவற்றையும் விட, மனம் தான் அழகு!
.
இவை பிற நாட்களில், ஒலிபரப்ப பட்டவை..