Sunday, October 31, 2010

திரும்பி பார்க்கிறேன்


திருமணம், அதற்கு பின்னான இடைவெளியில் வெகு நாட்கள் வரை பதிவுலகம் பக்கம் ஒதுங்க முடியவில்லை. இதோ சற்றே கிடைத்த இடைவெளியில் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். திருமணம் - வாழ்வில் அறிய திருப்பு முனையாய் இருந்தது.  பால்யம் முதல் இது நாள் வரையில் நிறைய மனிதர்களை கடந்து போகின்றோம். சிலரை வாழ்வின் நதி எங்கும் ஞாபகத்தில் வைத்திருக்கிறோம். சிலர் ரயில் பயண பயணியாய், மறந்தும் மறைந்தும் போகின்றனர்.

திருமண அழைப்பிதல் தரும் பொருட்டு, நிறைய நண்பர்களை, என் ஆசிரிய பெருந்தகைகளை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அந்த வகையில், அந்த நிமிடங்கள் தித்திபானவையே. நிறைய மனிதர்களின் மனங்களில் இருந்து நான் மறைந்து போயிருந்தேன். ஆசிரியர்களில் பலருக்கு என்னை அடையாளம் தெரிவதில் பிரச்சனை இருந்தது. அவர்களுடன் கடந்த நாள் நிகழ்வுகளை சொல்லி என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  வருஷத்தில் எப்படியும் இருநூறு புதிய முகங்களை சந்திப்பவர்கள் அவர்கள் இல்லையா.

முன்பே என் மன  கண்ணில் நிறைய மனிதர்களை சந்திக்க எண்ணி இருந்தேன். வாழ்க்கை கொடுக்கும் கால இடைவெளியில், அது தரும் கிடிக்கி பிடியில் சிலரை சந்தித்து அளாவவும், நட்பை புதுப்பிக்கும் வாய்ப்பும் பெற்றேன்.  நிறைய நண்பர்களுக்கு, அழைப்பிதழை மின்னஞ்சல் செய்திருந்தேன்.

சிலர் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆம்.. அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை சூழல்கள்.. அவரவர் ஓட்டங்கள்.. ஆனால் அதில் சிலர் வரவு அபூர்வமாய் அமைந்தது. மொத்தத்தில் நிகழ்வுகள் கலவையாய் எண்ணங்களை தந்து சென்றன. எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரை அன்று சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். தன் முதிய வயதில், நடுங்கும் கரங்களோடு என் கரங்களை பற்றி தன் அன்பையும் நட்பையும் பகிர்ந்து கொண்டார்,


மிக முக்கியமாய் புகைப்படம் எடுத்து கொண்ட நிமிடங்கள்.. இன்னும் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாதவை.. சார்.. நீங்க.. கண்ணை மூடாதீங்க.. கண் சுருங்குது பாருங்க.. சார் கொஞ்சம் சிரிங்க.. இன்னும் எனக்கு புரியவே இல்லை.. எப்படி சார் சிரிச்சுட்டே கண்ணை சுருக்காமல் பார்ப்பது.. ஒரு சமயம் சிரித்த பொழுது, அருகே இருந்து வந்த கமன்ட்.. "கண்ணு சுருங்குது பாரு" .. என்பதே.. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி பல நிமிடம் நின்றேன்.. இப்படியே போனால் சந்திரமுகியில் வரும் வடிவேலின் ராஜ பார்வை கிட்டும் என பயந்து போனேன்.. என் செய்ய.. மணம் முடித்த மண மக்களை கேட்டு பாருங்கள்.. அது தனி இம்சையே..  அவர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட கதையை ஒரு மெகா நாவலாய் போட முடியும் என்பது என் நம்பிக்கை. 

வாழ்வு நதியை திரும்பி பார்க்கும் பொழுது கண்கள் ஓரம் நிறைய கணங்கள் கடந்து போனது தெரிந்தது. பால்யத்தில் விரல் பிடித்து நடந்த மனிதர்களில் நிறைய பேர் இந்த நிமிடங்களை பகிர்ந்து கொள்ள என்னுடன் இல்லை. நிறைய மனிதர்களின் வழிகாட்டுதலில், அவர்களின் குட்டுகளில் இந்த நிமிட மனிதனை உருவாக்கி உள்ளது. அவர்களின் அத்தனை பார்வைக்கும், என் நன்றிகள். வாழ்வில் அனைத்தும் உள்வாங்கி முன் செல்ல பழகி உள்ளேன். கடந்த நாட்கள் நிறைய சறுக்கல்களும் துரத்தலும் நிறைந்ததே.. என் வரையில் கடந்த போன நாட்கள் இல்லை எனில் இன்றைய நான் இல்லை. கடந்து போன அத்துணை மனிதர்கட்கும் மரியாதைக்கு உரியவர்களே.

வாழ்க்கை நதி இன்னும் ஆரவாரத்தோடு பயணிக்கிறது. உடன் பயணிக்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.


.
.