Sunday, July 26, 2009

மறைந்து போன விஷயங்கள்/ கடந்து போன நாட்கள்


பால்யத்திலும், பதின் வயதுகளிலும் ஆடி மாதம் நிறைய குதூகலத்துடன் கடந்து போயிருக்கிறது. அதிலும் ஆடி பதினெட்டாம் நாள் சிறப்பானது. நாங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட ஆடி மாதத்தையும், ஆடி பதினெட்டையும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஊரை விட்டு நகரத்தில், படிக்கவும், பணிபுரியவும் வந்த பின், உள்ளூர் திருவிழாக்கள், இல்லத்தில் நடைமுறையில் இருந்த விழாக்கள் யாவும் மறந்து வருகின்றன. வீட்டில் உள்ளவர்கள் சொன்னால் மட்டுமே, அட ஆமாம்! என ஞாபகம் வருகிறது.

பள்ளி நாட்களில், ஆடி மாதம் துவங்கிய உடன், ஒரு சில விஷயங்கள் உடனே நினைவில் வந்து விழும். முதல் விஷயம் - பட்டம். இன்று ஊர் முழுக்க காற்றாலைகள் வந்து விட்டன. ஆனால் நாங்கள் அன்று பெரிதும் விரும்பியதும், ஆச்சர்யம் கொண்டதும் - பட்டங்கள் [காற்றாடிகள்] தான். சுழன்றடிக்கும் ஆடி காற்று அதற்கு தூது விடும்.. ஆடி மாதத்தில் முதல் தீர்மானம், ஒவ்வொரு வருடமும் கூட; இந்த வருடம் எப்படியாவது பட்டம் பறக்க விட வேண்டும் என்பதே. ஆனால் எங்கள் அதிர்ஷ்டம், இறுதி வரை பட்டம் சரியாக கட்ட வரவில்லை.

எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் எப்படியாவது பட்டம் கட்டி தர கேட்டு வந்துள்ளோம். அவர்களும் ஆகட்டும் பார்க்கலாம் என சொல்லி வந்துள்ளனர். அதே நாட்களில் சிறுவர்கள், காகிதம், ஈர் குச்சிகள், அடர் நூல், பட்டம் ஒட்டிட மைதா மாவு - [அட அன்று முதல் இன்று வரை அதை அடிக்க ஆள் இல்லை] என திரிவார்கள். அந்த நாட்களில் பட்டம் கட்ட படுவதை நிறைய ஆவலோடு கண்டு உள்ளோம் [ கப்பல் கட்டுவதை விட இது எங்களுக்கு ஆச்சர்யம் நிறைந்தது. ]. ஆனால் இறுதி வரை எங்களுக்கு அந்த கம்ப சூத்திரம் வரவே இல்லை.

அன்று எங்கள் கிராமத்தில், ஆடி முதலில் இருந்து ஆடி இறுதி வரை தலையை உயர்த்தினால் , நிறைய பட்டங்கள் வானில் பறப்பதை காணலாம் . ஊரின் எந்த இடத்திலிருந்தும் பட்டங்கள் காண கிடைக்கும். மீன் பட்டம் , சதுர பட்டம் என நிறைய பெயர்களில், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வடிவில்.. குறைந்தது ஒரு பட்டத்திற்கு இரு சிறுவர்கள் இருப்பார்கள். பட்டம் கீழே சரிந்தால், அதன் வால் பகுதியை சரி செய்து தூக்கி விட ஒரு சிறுவன், கயிற்றை பிடிக்க ஒரு சிறுவன் என இந்த நிகழ்வுக்கு நிச்சயமாய் இருவர் வேண்டும் . 'விர்ர்' என வீசும் காற்றில் நிறைய ரீங்காரம் இட்டபடியே பறக்கும் பட்டம் அற்புதமானதே. ஆடி பதினெட்டுக்கு அடுத்தநாள், பள்ளியில் தாங்கள் பறக்க விட்ட பட்டம் பற்றிய பெருமையே, நிறைய சிறுவர்களின் விவாதத்தில் நிறைந்திருக்கும்.

இப்படியான நாட்களில், அன்று ஆடி பதினெட்டாம் நாள். முன் காலை பொழுதில் வாய்க்காலை வலம் வந்த எங்கள் கைகளில் ஒரு பட்டம் சிக்கியது. பொதுவாய் தண்ணீர் வரும் வாய்கால் அன்று எங்கள் பொருட்டு பட்டத்தை எடுத்து வந்திருக்கிறது. ஆர்வமாய் அதை ஆராய்ந்த நாங்கள் கைகளில் இருந்த நூல் கொண்டு பறக்க விட்டோம். அதுவும் போக்கு காட்டி படுத்து விட்டது. அந்த வழியாக வந்த இன்னொரு நண்பன், எங்களின் கையறு நிலைகண்டு உதவிகரம் நீட்டினான். சற்றே பட்டத்தில் மாறுதல் செய்திட்ட அவன், அழகாக பட்டத்தை பறக்க விட்டான். அதன் பின் பட்டம், எங்கள் கைகளுக்கு வந்தது. அன்று நாங்கள் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

இந்த பத்து ஆண்டுகளில் யாரும் பட்டம் விடுவதை காணவில்லை. பட்டம் சிறுவர்கள் உலகில் இருந்து முற்றிலுமாய் விடைபெற்று விட்டது போல் தோன்றுகிறது.

அதே போல் ஆடி பதினெட்டில், தவறாமல் கடைபிடிக்க படும் இன்னொரு விளையாட்டு - ஊஞ்சல் விளையாட்டு [ எங்கள் வழங்கு மொழியில் தூரி ] . சிறுவர்களுக்கு எப்படி பட்டம் கைகளில் தர பட்டதோ , அதே போல் சிறுமிகளுக்கு தூரி. மரத்தின் ஏதாவது நீளும் கிளை, வீடுகளின் குறுக்கு சட்டம் இவை போதும். கயிறுகளில் உருவாகும் தூரி அந்த மாதம் முழுதும் அவர்கள் உலகை வசீகர படுத்தும். வரிசை நீண்ட படியே அடுத்து தான் என கூட்டம் இருந்த படி இருக்கும். சிறுவர்கள் மாலை ஆனவுடன் ஆட்டத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வர். தூரி மேல் நோக்கி செல்லும் பொழுது வரும் உற்சாகம் வேறு எதிலும் இல்லை. க்ரீச் ஒலி தொடர்ந்தது ஒலித்தபடி இருக்கும் . இன்றும் யாரும் தூரிகள் ஆடுகிறார்களா என தெரியவில்லை. ஒரே விதிவிலக்கு, எல்லா பண்டிகை காலத்திலும், கோயில் திருவிழாக்களில், ராட்டின தூரி முன் நிறைய கூட்டம் கூடுகிறது.

எப்பொழுதும் கதை கேட்கும் ஆவலில் உள்ள நாங்கள், இந்த ஆடி பதினெட்டை நாம் எதற்காக கொண்டாடுகிறோம் என பெரியவர்களை கேட்டு வந்துள்ளோம். அவர்களும், ஆடி பதினெட்டில், அந்த நாட்களில் [ பன்னெடும் காலத்திற்கு முன்] காவிரியில் புது வெள்ளம், இரு கரையை தொட்டபடி ஓடும். அன்று காவிரியில் கூடும் ஆண்களும் பெண்களும், கொண்டு வந்த உணவு பண்டங்கள் உண்டு முடித்த பின், குதூகலமாய் பொழுதை களிப்பர். ஆற்றின் கரை ஓரமாய் நிறைய ஆல மரம் வளர்ந்து இருக்கும். அந்த ஆல மர விழுதுகளில் ஊஞ்சல் கட்டி அந்த நாளை இனிமையாய் போக்குவர். அதன் தொடர்ச்சியாகவே நாம் என்றும் இந்த நாளை கொண்டாடுகிறோம் என்றனர். பின்னாட்களில் கல்கியின் " பொன்னியின் செல்வன் " - முதல் பாகம் படித்த பொழுது அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை என புலப்பட்டது.

ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் வளமையின் துவக்கம். கொட்டி தீர்த்த பருவ மழை, அந்த வருடமும் பொய்க்காத நீர்நிலை, வரும் ஆண்டின் புது நம்பிக்கை விதைப்பு என இயற்கைக்கு மனதார நன்றி பெருக்கை செலுத்தும் நல்ல நாள். அன்று பொங்கும் புது வெள்ளம் போல், வாழ்வு என்றென்றும் சிறப்புற வேண்டும் எனும் எதிபார்ப்பே அந்த நாள். ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி. புது பட்டம்; புது விதைப்பு; புதிய நம்பிக்கை ஒளி கீற்று எல்லாவற்றிற்குமான துவக்கம் அன்று. நம் மூதாதையர் அரிதான கண்டுபிடிப்பு பண்டிகைகள், விழாக்களே.

காவிரி நடைபயிலும் ஊர்களில் இன்றும் - அன்றைய நாளில் தலையில் காசுகளை வைத்து நீரில் முங்கி குளித்தல் உள்ளதை அறிந்துள்ளேன். அந்த குதூகலம் என்றென்றும் தொடரட்டும். இந்த ஆண்டும், பருவமழை பொய்க்காது பெய்து புது நம்பிக்கையை கொடுத்து உள்ளது.

அனைவர்க்கும் இனிய ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் பொங்கும் புது புனலாய் மலர்ச்சி வந்து சேரட்டும்.
.
.
.

4 comments:

கலையரசன் said...

அனுபவ பகிர்வு நன்றாகவே வருகிறது திருமலை உங்களுக்கு..
ம்ம்.. நானும் இதுபோல் எழுத முயற்சிக்கிறேன்!

நல்வாழ்த்துக்கள் சொன்ன உங்களுக்கும், பதிவுலகம் சார்பாக வாழ்த்துக்கள்!!

துபாய் ராஜா said...

சிறுவயது இனிய நினைவுகளை எண்ண வைத்த நல்லதொரு பதிவு.

UNIVERSAL said...

Appudiyaaa a a a a a a a a a a a a a a a a a !

THIRUMALAI said...

கலையரசன், துபாய் ராஜா, யூனிவேர்சல் - தங்கள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி.

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்