Sunday, May 3, 2009

ஆனந்த விகடனில் புதிய பகுதி - என்னைச் செதுக்கிய 7 நாட்கள்


விகடனில் புதிய பகுதியாக, ஒரு தன்னம்பிக்கை தொடராக, என்னைச் செதுக்கிய ஏழு நாட்கள் தொடர் துவங்கி உள்ளது. சமூக பரப்பினில், அரிதாக இனம் காணப்பட்ட, பட்டை வைரங்களாய் சுடர் விடுபவர்கள், தம்மை அதிகம் பாதித்த, அதீத முக்கியத்துவம் வாய்ந்த ஏழு தருணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மொத்தத்தில், அவர்களின் வாழ்கை நதியில் பயணப்படும் அனுபவம். இந்த வாரம் வரை, இந்த பகுதியில், ஏ. ஆர். முருகதாஸ், மயில்சாமி அண்ணாதுரை, எஸ். ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன் போன்றோர் தம் எண்ணத்தை வெளியிட்டனர். அவற்றில் என்னை தொட்டவை..
ஏ. ஆர். முருகதாஸ் ( A. R. Murugadoss)
அது, பெற்றோர் தம் குழந்தைகளை படம் பார்க்க கூட அனுப்பாத தருணம். அந்த தருணத்தில், எனது தந்தை, உனக்கு இதுதான் சரிவரும் என்றால், அதையே எடுத்துக்கொள் என்றார். ஒரு தருணத்தில், திடீர் என என் தந்தை மறைந்து விட்டார். மயானத்தில் இருந்து திரும்புகையில், ஒருவர், என் தந்தையை குறிப்பிட்டு, ஒரு சுகத்தையும் அவர் காணவில்லை. மகன்களை தறுதலையாய் வளர்த்து விட்டு, இறந்தது விட்டார் என்றார். அந்த வார்த்தைகள், என்றும் என்னுள் உந்தி தள்ளுகின்றன. அது எதிர்மறை வார்த்தைகள் என்றாலும், அவை என்னை பொறுத்தவரை ஊக்க சக்திகள் என்கிறார் முருகதாஸ் .

மயில்சாமி அண்ணாதுரை (Mayilsamy-Annadurai):
1) அது சந்திராயன் திட்டத்திற்கான, செயல் திட்ட இயக்குனரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு. இஸ்ரோ தலைவர், மாதவன் நாயர், ஒவ்வொருவராக நேர்முகம் செய்கிறார். அது அண்ணாதுரையின் முறை. அப்பொழுது, சந்திராயன் திட்டத்திற்கு, அண்ணாதுரை, தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். மாதவன் நாயர், அந்த முறை, ஒரு கேள்வியை முன்வைக்கிறார். உங்களை சந்திராயன் திட்டத்திற்கு அனுப்பினால், தற்போது நீங்கள் கவனித்து வரும், இன்சாட் தொடர்பான பணிகள் முடக்கி போகாதா என்பது அவரின் கேள்வி. அதற்கு பதிலளித்த அண்ணாதுரை, 'நான், எங்கள் குழுவில், நிறைய தலைவர்களை உருவாக்கி உள்ளேன். அவர்கள் எனது இடத்தை அருமையாக நிரப்புவர்' என்றார். ஒருவர், நம் குழுவில், அதித வளர்ச்சி அடைந்தால், சிறப்பாக முன்னேறினால், அவர் நமக்கு போட்டியாளராக, உருவெடுத்து விடுவான் என எண்ணுவது அர்த்தமற்றது என்கிறார். எல்லா தருணத்திலும் நம் அடுத்த நிலையில் இருப்பவரை முக்கியமானவராக வார்த்தெடுக்க வேண்டும் என்கிறார். இன்னொருவரை போட்டியாளராக எண்ணினால், அனைத்து கதவுகளும் அடைபட்டு போகும் என்பது அவர் நம்பிக்கை.
2) இது மற்றொருநாள். இடம், சென்னை விமான நிலையம். அந்த தருணத்தில், சில விமானங்கள், ஓடுதளம் இடம் கிடைக்காமல், வானில் பொறுமையுடன் வட்டமிட்டபடி இருந்தன. தனக்கான இடம் காலியாகும் வரை அவை காத்திருக்கும். அதன் பின் அவை இறங்கின. இதே விதியை சந்திராயனில், பயன் படுத்த திட்டமிடப்பட்டது. முதலில் சந்திராயன் செயற்கை கொள் காலநிலை நமக்கு அனுகூலமாக இருக்கும், தருணத்தில் ஏவப்பட்டது. நிலவு பூமியை நெருங்கும் தருணத்தில், நிலவில் வெற்றிகரமாக காலடி பதித்தது. இப்படி வாழ்கை, நமக்கான பாடத்தை எங்கெங்கோ ஒளித்து வைத்துள்ளது. இப்படியான நாட்கள் அவர்க்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

எஸ். ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan):
1) தன் நண்பர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா மறைந்த புதனை, அதிகம் பாதித்த நிகழ்வாக சொல்கிறார். கொடிதினும் கொடிது நண்பனின் மரணம்.
2) அடுத்த நிகழ்வு, தன் முதல் கதை, 'பழைய தண்டவாளங்கள்', வெளியான நாள். மதுரையில் இருந்து விருது நகர் செல்லும் பேருந்தில் இருந்து தன் அடுத்த பயணி வைத்திருந்த புத்தகம் மூலம், தன் கதை வெளியாகி இருப்பதை அறிகிறார். அதன் பின், பின்னிரவில், அலைந்து திரிந்து தூங்கி கொண்டிருந்த தன் நண்பரை எழுப்பி தன் கதையை படிக்க கொடுக்கிறார். படித்த நண்பர், அருகில் இருந்த கடையில், தேநீர் வாங்கி தந்துள்ளார். ஒரு கோப்பை தேநீர், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பன், இவை இன்று வரையான தன் எழுத்தை இயக்குகின்றன என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

தமிழருவி மணியன் (Tamilaruvi Manian):
1)பத்தாவது படிக்கும் பொழுது, ராமையா வாத்தியாரிடம் கணக்கு பாடம் பயில அனுப்பினார்கள். அப்போது ஒரு நாள், எனது தாயார், கடைக்கு சென்று ஒரு சில பொருள்கள் வாங்கிவர சொன்னார்கள். நான், மறுத்து, போக்கு காட்டிக்கொண்டு இருந்தேன். என்னை அழைத்த ராமையா வாத்தியார் , 'மணியா! நன்றி உணர்ச்சியின் முதல் துளி எப்போதுமே நம் பெற்றவர்க்கு உரித்தானது. நன்றி படர்ந்து இருக்கும் இதயம் தானே இறைவனின் இருப்பிடம். சொத்து, சுகம், ஆஸ்தி, அந்தஸ்து என ஒருவன் வாழ்ந்திருந்தாலும், பெற்றோரை பேணி காத்து இருந்தால் மட்டுமே அவனது மறைவிற்கு பிறகும் வாழ்ந்திருப்பான். அப்படி பட்டவர்கள் ஆண்டாண்டு காலம், நிலைத்து நின்று உச்சகட்ட மதிப்பு பெரும் தேக்கு மரத்திற்கு ஒப்பாவர். பெற்றவர்களை உதாசீனப்படுத்துபவர்கள், எளிதில் வெட்டி வீழ்த்தி விடக்கூடிய முருங்கை மரத்துக்கு ஒப்பானவர்கள்.
நீ தேக்கா, முருங்கயா? என்று கேட்டார். இன்று வரை தேக்கு மரமாக நிலை கொள்ளும் வகையில் தான், எனது நடவடிக்கைகளை அமைத்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு பொழுது புலர்கையில், என் பெற்றோரை மானசீகமாக என் மனதில் நிறுத்தி வழிபடுகிறேன்.
2) நான் அப்போது , ஆறாம் வகுப்பு மாணவன். அப்போது கல்கி இதழில் வெளிவந்த நா. பார்த்தசாரதியின், 'குறிஞ்சி மலர்' தொடர் கதையை என் தந்தை ஆழ்ந்து வாசிப்பார். அப்படி என்னதான் அவர்களை ஈர்த்து இழுக்கிறது என்று நானும் அந்த தொடர் கதையை வாசிக்க தொடங்கினேன். மயிலிரகாகவும், வாள் முனையாகவும் வார்த்தைகளை நா.பா. பிரயோகித்த விதம் பேராச்சர்யம்!
பனித்துளியை விட பரிசுத்தமாக கதையின் நாயகன் அரவிந்தன் தன் வாழ்கையை அமைத்துக்கொண்டு இருப்பான். 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்பார்கள். ஆனால், சின்ன விதிவிலக்காக தீதும் நன்றும் தரவல்லது ஒரு புத்தகம். இன்று நான் செழும் செல்வத்தையும், அதிகார அரியணையையும் கைக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல மனிதனாக, எனது ஆயுளை இந்நாள் வரை கழிப்பதற்கு அந்த அரவிந்தனுக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
[குறிப்பு: நிஜம் தான். உங்களை போலவே நாங்களும், செதுக்கப்பட்டுள்ளோம். நா. பா. என்கிற மணிவண்ணன் அவர்களின் பாத்திரங்கள் எவ்வளவு தனித்துவம் மிக்கவை. ஒரு அரவிந்தன், பூரணி, சத்திய மூர்த்தி, மோகினி, பாரதி' - காலத்தை வென்றெடுத்த கதா மாந்தர்கள். என்றென்றும் பொருந்தும் உதாரண மனிதர்கள். அன்றாட வாழ்வில், அரவிந்தன், பூரணி என பெயர்களை அறியும் பொழுது மனம் தானாகவே, தீபம் நா. பார்த்தசாரதியை(N.Paarthasaarathy) ஞாபகத்திற்கு கொணர்கிறது. ]

[இவற்றில் பெரும்பாலானவை, என் சொந்த வார்த்தைகளின் வழியே, அவர்களின் உணர்வை பிரதிபலித்திட முயன்று உள்ளேன். ]


.


.

2 comments:

இருமேனிமுபாரக் said...

மிக மிக அருமையான இடுகை. தங்களைப்போலவே அரவிந்தனின் ரசிகன் நான்.திருப்பரங்குன்றம் போய் சில காலம் அங்கிருந்து கொண்டு அரவிந்தனைத்தேடி கிடைக்காமல் பின்னர் அவன் நடந்த தெருக்களில் நானும் நடந்து மகிழ்ந்திருக்கிறேன். பழைய யாபகங்களை மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.நன்றி!!

THIRUMALAI said...

இருமேனிமுபாரக் - பதிவிற்கு வந்தமைக்கும், தங்கள் பின்னுட்டம் இட்டமைக்கும் நன்றிகள் பல!

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்