Sunday, January 11, 2009

உங்களை உணர - யோகா



"விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்!"

என்பது பாரதியின் மொழிகள். உயிர் இயக்கம் முழுதும் உடல் சார்ந்ததே! உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே! என்பது திருமூலர் வாக்கு. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், மனிதனுக்கு அதை விட வேறு செல்வம் தேவை இல்லை. உடல் எந்த பகுதியில் பிரச்சனை என்றாலும், மனிதனின் ஒட்டுமொத்த செயல் திறனும் கேள்விக்கு உள்ளாகிறது. தனிச்சிறப்பு பெற்ற இந்த உடலை சரிவர பேனுகிறோமா? உலகின் அத்தனை அறிவியல் மேதைகளும் இணைந்தாலும் இந்த அற்புத உடல் போல் ஒன்றை வடிவமைத்திட முடியாது. உடலை சரிவர பராமரித்திட, உயிர் உன்னதம் பெற்றிட அரிய வரப்பிரசாதம் நம்முன் இருக்கும் யோகா. உடல் வலுப்பெற, இந்த கலை போதும்.

ஜீவாத்மாவை, பரமாத்மாவுடன் இணைக்கும் இனிய செயலாய் யோகா அணுகப்படுகிறது. பதஞ்சலி முனிவரால் யோக சூத்திரங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைக்கு கொணரப்பட்டன.

யோகா ஒரு தொடர் நிகழ்வாக பின்பற்றப்பட வேண்டும். பிற கலைகள் போல் கற்று வைத்துக்கொள்வதால் யோகாவில் ஒரு பயனும் இல்லை. தொடந்த பயிற்சியாக யோகா கடைபிடிக்கப்பட வேண்டும். அப்படி யோகா பயிற்சி செய்திட, உடலும் மனமும் ஒருசேர புத்துணர்ச்சி அடையும். நம்முள் கிடைக்கும் புத்துணர்ச்சி உணர கூடியதாய் இருக்கும். மனமும் உடலும் , உடலின் ஒவ்வொரு செல்லும் நம் ஆரோக்கியத்தை உணரும்.

தூக்கமின்மை, உடல் பிரச்சனைகள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பதற்றம், மன அழுத்தம் இவற்றிற்கு யோகா ஓர் அரிய வரப்பிரசாதம். யோகா கற்றலும், தொடர்ந்த பயிற்சியும் ஒரு இனிய அனுபவம். தொடர்ந்த யோகா நம்முள் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கவல்லது. இத்துடன், உணவுப்பழக்க வழக்கம் சிறப்புற நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நல்லதொரு குருவிடம், யோகா கற்றல் நலமானது. யோகா செய்திட அதிகாலை பொழுது பரிந்துரைக்கப்படுகிறது. அசைவ உணவுகள், முற்றிலும் தவிர்க்கப்படல் அவசியமாகிறது. மிளகாய், மைதா பொருட்கள் தவிர்க்கப்படல் அவசியம். யோகா பயிற்சிக்கு தளர்வான உடை பரிந்துரை செய்யப்படுகிறது.

யோகாவில் கற்று தரப்படும், பிரணாயாமம் பயிற்சி நம் சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. நம் உடலை இயக்கும் பெரிய சக்தியான ஆக்சிஜன், தடையின்றி கிடைத்திட உதவுகிறது. அடுத்த நிகழ்வு, சீரான ரத்த ஓட்டம். தொடர் பயிற்சிகள் நல்ல ரத்த ஓட்டத்திற்கு உத்திரவாதம் தருகின்றன. இதனால் இதயமும், நுரை ஈரலும், வலுவடைகின்றன. சரியான நேரத்திற்கு உறங்குதல், சரியான நேரத்திற்கு விழிப்பு, சரியான நேரத்திற்கு உணவு உண்ணுவது அனா வாழ்வு இங்கு திட்டமிடப்படுகிறது. பிற கலைகள் போன்று, இங்கு பெரும் தொகை வசூலிக்கப்பட்டு, கற்று தரப்படுவதில்லை. உன்னதமான ஆசிரியர்கள், எந்த எதிர்பார்ப்பும் அற்ற அறிய உள்ளங்கள் இந்த கற்பித்தலில் தங்களை தோய்த்து உள்ளனர். குரு, மாணவர் பக்தி முதல், வாழ்விற்கான நல்ல பழக்கங்கள் கற்று தருதல் வரை, அவர்களின் ஈடுபாடு அற்புதமானது. பிராணாயாமம் துவங்கி, சூரிய நமஸ்காரம் வரையான பயிற்சி உங்களை பூரண ஆரோக்கியத்திற்கு இட்டு செல்ல வல்லவை.

நம் முன் தடையாய் இருப்பது ஒரே கேள்வி. ஒரே பதில் . இதற்க்கு எல்லாம் நேரம் எங்கே உள்ளது. எனக்கும் யோகா செய்திட ஆசை தான்; ஆனால் நேரம் வேண்டுமே! என்பதே நம் பெரும்பாலோர் பதில். என் யோகா ஆசிரியர் கேள்வி கேட்டு பதிலையும் சொன்னார். அந்த பதில் எல்லா தருணத்திலும், யோசிக்க வைத்தது. அவசர நவீன உலகில், இதே பதற்றத்துடன், ஓடிக்கொண்டு இருந்தால், உங்களுக்கு ஐம்பது வயதில் இரத்த கொதிப்போ, இருதய பாதிப்போ, நீரிழிவு நோயோ ஆட்கொண்டு விடும். அதன் பிறகு உங்களின் வாழ்வு முடங்கிப்போகும் அபாயம் அதிகம். அப்படி பிந்தைய நாட்களில் அவதியுறுவதை காட்டிலும் தற்போது நேரம் ஒதுக்கலாமே!

ஒரு நாளின், இருபத்து நாலு மணி நேரத்தில், உங்களின் முதலீடு வெறும் 45- நிமிடங்களே. அதன் பின் நீங்கள், அன்று பிறந்தது போல் உணர்வீர்கள். அத்தனை மகிழ்ச்சியும், உவகையையும், உங்கள் உடம்பு வெளிப்படுத்தும். அந்த நாளுக்கான அத்தனை உற்சாகத்தையும், அந்த மணித்துளிகள் பெற்று தர வல்லவை. நம் உடலின் ஆரோக்கியம் , நம்முடைய கட்டுப்பாட்டில். ராமானுஜர் பாமரர் அனைவரும் முக்தியுற அனைவர்க்கும் நாராயண மந்திரம் சொன்னது போல், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட யோகா துணை புரியும்.

உடற்பயிற்சி கூடம் சென்று, பளு தூக்குதல் போன்றவற்றை செய்யும் பொழுது உங்கள் சக்தி செலவழிக்கப்படும். ஆனால் யோகாவில் மட்டும், உங்கள் சக்தி முழுக்க உங்கள் உடலில் சேர்ந்துகொள்ளும்.

புட்டபர்த்தியில் உள்ள ஒயிட் பீல்ட் மருத்துவமனை முதல், யோகா நிலையங்கள் வரை ஒரு நல்ல வாசகம் பளிச்சிடும். "Curry, Worry and hurry will spoil your health. " இது முற்றிலும் நிதர்சனமே! ஓடும் ஓட்டத்தில், ஆரோக்கியத்தையும் கவனிப்போமே!

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்