Sunday, December 28, 2008

தொடரும் குதூகலம் - டாம் மற்றும் ஜெர்ரி


கண்கள் களைப்படைந்த பொழுதுகளிலும், மனம் உற்சாகம் இழந்து, சிக்கல்களில் நீந்துகிற நாட்களிலும், அந்த நிமிடங்களில் குதுகலத்தை மீட்டு தருவது எளிதல்ல. என் வரையில் அந்த பணியை சிறப்புற செய்பவை "TOM" பூனையும் "JERRY" எலியும். இவை எந்த மனிதனையும் குதுகலிக்க வல்லவை. இதற்கு பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடில்லை.

குழந்தையாய் இருக்கிற நாட்களில், நாம் நம்மோடு மகிழ்ச்சியையும் மற்றொரு ஆடையாய் அணிந்திருப்போம். துள்ளும் நடையும் , வெடி சிரிப்புமாய், கூத்தும் கும்மாளமும் நம்மோடு இயைந்திருக்கும். வளர்கிற பொழுதுகளில் அவை ஒவ்வொன்றாய் நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல் விடை பெற்றுவிட்டன. நம் முகத்தில் சிரிப்பு அமர்ந்திருக்கும் தருணங்கள் மிக மிக அரிதாகிவிட்டன.

இழந்த சிரிப்பை இந்த எலி பூனை கூட்டணி நிச்சயம் மீட்டு எடுக்கும் வல்லமை கொண்டவை . மனிதனுக்குள் இருக்கும் சண்டைகளை, மனிதனுக்குள் இருக்கும் கோபத்தை, மனிதனுக்குள் இருக்கும் கபடத்தை விலங்குகளுக்கு பொருத்தி பார்த்துள்ளோம். இது மொத்தத்தில் நம்மை நாமே உற்று நோக்குவதே. ஆனால் அது இவ்வளவு வேடிக்கையாய் இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

பூனையை சோதனை குழாயில் நிரப்பினால் எப்படி இருக்கும்? பூனை, எலியை கொன்றிட ரயில் ஓட்டினால் எப்படி இருக்கும்? பூனை பேயை கண்டு பயந்தால் எப்படி இருக்கும்? என்று முடிவில்லாத கேள்விகளுக்கு விடைதர முயன்று இருக்கிறார்கள். பூனையை குதூகல உலகத்துக்கு அழைத்து வந்தால் இவ்வளவு விஷயங்கள் நடைபெறும் என்பது அபூர்வ கற்பனையே. எல்லா தருணங்களிலும் அததற்கான உடை சரியாக பொருந்துகிறது.

அனைத்து தருணங்களிலும், எலி செய்கிற சேஷ்டையும், அதனால் பூனை கோபம் கொள்வதும் எலியை துரத்தி பூனை செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் இதை இவ்வளவு கதைகளாய், தொடர்ந்து எடுத்து செல்ல முடியுமா? வற்றாத கற்பனைக்கு நிச்சயம் சவாலானதே. ஆனால் எந்த தொடரை பார்த்தாலும் , சலிப்பு தோன்றுவதில்லை. அற்புதமான காலத்தை விஞ்சி நிற்கும் இனிய படைப்பு.

டாம் பூனைக்கும், ஜெர்ரி எலிக்கும் நடக்கும் முடிவில்லாத யுத்தம் இந்த தொடர், ஹன்னா மற்றும் பார்பரா எனும் இருவரால் மொத்தம் நூற்றி பதினாலு 'டாம் அண்ட் ஜெர்ரி' தொடர்கள் எழுதப்பட்டு இயக்கப்பட்டன. இது ஏழு முறை அகாடமி விருது பெற்ற சிறப்புடையது. இதற்கு முன் இதே கார்டூன் அனிமேஷன் பிரிவில் 'வால்ட் டிஸ்னி' யின் 'சில்லி சிம்போனி' பெற்றுள்ளது.

இந்த தொடரின், கதை மட்டும் நாயகன் இல்லை. கதை முழுதும் பின் தொடரும் பின்னணி இசை கதைக்கு ஊயிரோட்டம் கொடுக்கிறது. அபாய கட்டங்கள், குதூகல கட்டங்கள் என இசை அற்புதமாக பொருந்துகிறது. இசையை நீக்கி விட்டு பார்த்தால் அங்கே ஒன்றுமில்லை. கதையோடு இசையும் கைகோர்த்து மாபெரும் படைப்பை தந்திருக்கிறது.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்