Sunday, September 28, 2008

மஹாபாரதமும் கிளை கதைகளும்


மஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி.
S. ராமகிருஷ்ணன்(S.Ramakrishnan) அவர்கள் குறிப்பிடுவது போல் பாரதத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை பாரதங்கள் உலவுகின்றன.

நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த மூன்று கதைகள் இங்கே.

முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துடியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை.

துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகின்றன. அவற்றையும் எடுத்து புகட்டுகிறான். முதிய மனிதர் களைப்பு விடை பெற்றவராய் நீங்கள் கர்ணன் தானே என வினவுகிறான். தற்போது முன் சென்ற பாவி உணவிடும் இடத்தை சுட்டிசென்றதாய் வருந்துகிறார் . கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். முதியவர் தன் களைப்பு நீங்கியதை சொல்லி பயணத்தை தொடர்கிறார். உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதை கொண்டே நாம் உணரலாம்.

இன்னுமொரு புனைவு
அர்ஜுனனுக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். எல்லோரும் கர்ணனை பெரும் வள்ளலாய் கொண்டாடுகிறார்களே என்பதே. உண்மையில் நம்மை விட கர்ணன் ஒரு போதும் பெரும் வள்ளல் அல்ல என்பது அவன் எண்ணம். தன் கருத்தை கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். கிருஷ்ணா, எல்லோரும் ஏன் கர்ணனை மட்டும் இப்படி வள்ளலாய் கொண்டாடுகிறார்கள். நான் எதில் குறைந்து போனேன்? என்னை அப்படி யாரும் சொல்லவில்லையே என வருந்தினான். கண்ணனும் தனக்கே உரித்தான தனி புன்னகையோடு நாளை உங்கள் இருவரில் யார் வள்ளல் என்பதை நிருபிக்கிறேன் என்று புறப்பட்டான்.

அடுத்த நாள் உதயத்தில் கண்ணன் தனது சக்தியால் இரண்டு தங்க மலைகளை உருவாக்குகிறான். கர்ணனையும் அர்ஜுனனையும் அழைத்து இவை உங்கள் சொத்து என சொல்லி புறப்படுகிறான். இருவர்க்கும் ஒரு நிபந்தனை..

அந்த நாளின் முடிவில் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தங்க மலைகளை தானம் செய்ய வேண்டும் .
அர்ஜுனன் தன் காரியத்தில் கண்ணானான். வருகின்ற வறியவர் அனைவர்க்கும் தங்க மலைகளை வெட்டி வெட்டி அளித்தபடியிருந்தான். அந்த நாளும் முடிவுக்கு வருகிறது. அர்ஜுனனுக்கு ஒரே பெருமை. அந்த மலையில் குடைந்து நிறைய தங்கத்தை வெட்டி தந்திருந்தான். கர்ணன் ஒருபோதும் இவ்வளவு மலையை தானமாக தந்திருக்க முடியாது எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அந்த தருணத்தில் கிருஷ்ணனும் அர்ஜுனனை காண வந்துவிட்டார். அர்ஜுனனும் நிறைய பெருமிதத்தோடு தான் அன்று தானம் செய்த மலை பகுதியை சுட்டி காண்பித்தான். ஆனால் கிருஷ்ணன் கர்ணன் வென்று விட்டதை குறிப்பிட்டார். அர்ஜுனனால் நம்பமுடியவில்லை .
காரணத்தை கிருஷ்ணனிடமே கேட்டான். கர்ணன் எவ்விதமாய் தானமளித்தான் என்பது அவனுள் எழுந்த முதல் வினா..

கிருஷ்ணன் அதித புன்னகையோடு பதில் சொன்னான். இன்று காலை உன்னை போல் கர்ணனுக்கு ஒரு மலையை கொடுத்தேன். அவனிடம் ஒரு மனிதன் யாசித்து வந்தான். கர்ணனும் அந்த மலையை சுட்டி காட்டி இந்த மலையை வைத்துக்கொள் என தன் வழியே அடுத்த காரியத்துக்கு புறப்பட்டு விட்டான். கர்ணனின் தான நிகழ்வு காலையிலேயே முடிவுக்கு வந்து விட்டதாய் சொன்னான். அதன் பின் அர்ஜுனனுக்கு தான் பேச்சு எழவில்லை.

மற்றுமொரு புனைவு :
அந்த நாளில் பாண்டவர் அனைவரும் கானகத்தில் உள்ளனர். அது பாண்டவர்களின் தந்தை பாண்டுவின் இறுதி கணங்கள். பாண்டுவுக்கு தான் மறைந்த பின் இந்த உலகில் தன் மைந்தர்கள் எப்படி வாழ போகிறார்கள் என்கிற கவலை. அவரது மனம் தீர யோசித்தது. தன் புதல்வர்களை அருகே அழைத்த அவர், தன் மறைவுக்கு பின் அவரது உடலை உண்டுவிடுமாறு பணித்தார். அப்படி செய்தால் அவர்கட்கு உலகில் எந்த தீங்கும் உருவாகாது என்பது அவர் கணிப்பு.

பாண்டுவும் மறைந்தார். அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணன், பாண்டவர்களை தடுத்து நர மாமிசம் புசிப்பது மனிதர்களின் இயல்பு அல்ல என விளக்கினார். பின்பு பாண்டுவின் உடலை எரித்திட பாண்டவர்களை திசைகொருவராய் அனுப்பி விறகு முதலான பொருட்களை திரட்ட பணித்தார்.

பாண்டவர்களும் கண்ணனும் விறகு எடுத்து வர சென்றனர். ஆனால் சகாதேவனுக்கு ஒரு கேள்வி குழவியாய் குடைந்தது. அவனுக்கு கால காலமாய் மனிதனை தொடரும் முதுமொழி நினைவுக்கு வந்தது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அல்லவா என்பது அவன் எண்ணம். அதை அறிய தந்தையின் உடல் அருகே சென்றான். முதலில் தென்பட்டது தந்தையின் பெருவிரல். ஒரே கடியில் பெருவிரல் வாய்க்குள் அகப்பட்டது. பெருவிரல் உண்டபின், சகாதேவனுக்கு முக்காலமும் அறிகிற அறிய ஞானம் வந்தது.
அவனால் அனைத்து காலமும் அறிய இயலும். ஏறக்குறைய கடவுளால் மட்டுமே முடித்த விஷயம் மனிதனுக்கு வாய்த்த நிமிடம் அது.

அதே தருணத்தில் கண்ணனும் அவ்விடம் நிறைய கோபமாய் தோன்றினார். தோன்றிய கண்ணன் என்ன காரியம் செய்தாய் என திட்டியபடி நீ தெரிந்தவற்றை மற்றவர்க்கு சொன்னால், உன் தலை சிதறிவிடும் என சபித்தான். பதிலுக்கு சகாதேவன் எங்கள் ஐந்து பேரையும் காக்க தவறினால் உன் தலை சிதறி விடும் என சபித்தான்.

இருவரின் எண்ணமும் நிலை கொள்கின்றன. பின் நாட்களில் கண்ணனே ஐவரையும் போரில் காக்கிறான். முதுமையில் முதலில் உலகை விடுபவனும் அவனே. சாஸ்திரத்தில் கெட்டிக்காரன் சகாதேவன் எனும் முதுமொழி முகிழ்த்து வந்தது இதன் தொடர்ச்சி தானோ?




1 comment:

alphathoughts said...

Great!. Please continue with the கிளை கதைகள்... very interesting and informative

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்