Sunday, December 28, 2008

பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே



ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாயினும் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுடனும், அறுபதை தாண்டிய முதியவர்களுடனும் செலவிட்டு பாருங்கள். அந்த நாள் சிறப்பாய் அமையும் என்கிறார்கள். அவர்களிடமே நமக்கு கற்பதற்கு ஆயிரம் விஷயம் இருக்கும். ஆனால் நாம் தயங்கி அந்த நல்ல சந்தர்பங்களை நழுவ விடுகிறோம்.

பின்வரும் சம்பவம் மனித உறவுகளுக்கான கருத்தரங்கில், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம் விவரித்தது. இது தன் பெற்றோருக்கு முதல் விமான டிக்கெட் வாங்கி வந்த நிகழ்வும், அதன் பின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சி பற்றியது. இனிஅவருடைய சொந்த உணர்வுகளில், ...

அன்று என் பெற்றோர் சொந்த ஊருக்கு புறப்பட தயார் ஆனார்கள். அவர்கட்கான டிக்கெட்டை அந்த முறை JetAirways மூலம் பதிவு செய்தேன். அதற்கு முன் எனது தந்தை விமானத்தில் பயணித்தது இல்லை. டிக்கெட்டை அவர் கைகளில் கொடுத்த பொழுது முற்றிலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த நிமிடமே குதூகலம் அவர் முகத்தில் அப்பிகொண்டது. பயணிக்கும் நொடிக்கான காத்திருப்பு, ஒரு பள்ளி சிறுவன் போல் அன்று அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

நாங்கள் அனைவரும் அன்று அவரை வழியனுப்ப அவருடன் விமான நிலையம் சென்று இருந்தோம். சுமைகளை எடுத்து செல்லும் டிராலி முதல், விமான நிலைய சோதனைகள், விமானத்தில் ஜன்னலோர சீட் என பரபரப்போடும், மகிழ்ச்சியோடும் இருந்தார். அவர் முற்றிலும் இந்த பயணத்தை அனுபவித்து செல்வது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும். அவரது மகிழ்ச்சியை, இந்த அனுபவத்தை கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் விமான சோதனைக்கு செல்லும் முன் என்னை நோக்கி வந்தார். அப்படி வந்தவர் கண்களில் நன்றி பெருக்கிற்கான ஈரம் தெரிந்தது. நெகிழ்ச்சியோடு என்னிடம் தன் நன்றியை தெரிவித்தார். அந்த தருணத்தில் என் தந்தை மிக மிக உணர்சிவயப்பட்டவராய் காணப்பெற்றார். நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அது அவருக்கு மிக பெரியதாக தோன்றியுள்ளது. நான் அவரிடம் நன்றி சொல்ல இதில் எதுவும் இல்லை என சொன்னேன்.

இந்த நிதழ்ச்சியுடன் பின்னர் என் வாழ்வை பற்றி நான் சிந்தித்து பார்த்தேன். நாம் குழந்தையாய் இருந்த தருணங்களில் நம் பெற்றோர் நம் எத்தனையோ கனவுகளை நனவாக்கி உள்ளனர். அவர்களின் அப்போதைய பொருளாதார நிலையை உணராமல், நாம் கிரிக்கெட் மட்டைகள், துணிமணிகள், பொம்மைகள் என அவ்வப்போது நச்சரித்து உள்ளோம். அவர்களின் இயலாமையிலும், நம்முடைய எல்லா தேவைகளையும், பூர்த்திசெய்திட முன்வந்துள்ளனர். நாம் எப்போதாவது, நம் பொருட்டு அவர்களின் தியாகத்தை எண்ணி உள்ளோமா? நம் விருப்பங்களுக்கு அவர்கள் எவ்வளவோ இழந்துள்ளனர்.

நாம் இதுவரை நம்பொருட்டு அவர்கள் செய்தவற்றிற்கு நன்றி செய்துள்ளோமா? நம் மகிழ்ச்சியை நன்றியை சொல்லி உள்ளோமா? அதே போல், இன்று நம் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது, நன்கொடையை பொருட்படுத்தாது நல்ல பள்ளியை தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளுக்கு சிறப்பான பொம்மைகள், சிறப்பான தீம் பார்க்குகள் என பார்த்து பார்த்து செய்கிறோம்.
ஆனால் நாம் ஒன்றை முற்றிலும் மறந்து விட்டோம். நம் பெற்றோர் நம் மகிழ்ச்சிக்காக செய்த தியாகத்தை மறந்துவிட்டோம்.

ஆகவே நம்முடைய கடமை, அவர்களின் சிறிய சிறிய கனவுகளை நனவாக்க முயல்வதே. அவர்கள் இளமையில் பெற முடியாததை, அந்த சந்தோஷ தருணங்களை மீட்டு தருவதே. இவற்றை நாம் அவர்கட்கு அளித்தால் அவர்கள் வாழ்வு நிச்சயம் முழுமை அடையும்.

நிறைய தருணங்களில், என் பெற்றோர் சில கேள்விகளை கேட்பார்கள். அந்த தருணத்தில், பொறுமை இன்றி நான் பதில் சொல்லி உள்ளேன். ஆனால் அதற்கு மாறாக , இன்று என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைய மரியாதையோடு பதில் சொல்லிவருகிறேன். நான் தற்போது உணர்கிறேன். என் பெற்றோர் அடைந்த வருத்தத்தை, இன்று என்னால் உணர முடிகிறது.

முதியவர்கள் அனைவரும், தம் இரண்டாவது குழந்தை பருவத்தில் உள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். இதுவும் நம் குழந்தைகளை போற்றி பாதுகாப்பது போன்றதே. அதே அக்கறையும், அதே சிரத்தையும், நம்முடைய முதிர்ந்த பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவர்கள் பொருட்டு நேரம் ஒதுக்குவதும், பணிவோடு பதில் சொல்வதும், அவர்கட்கு மிக மிக அவசியம். அவர்களின் கண்ணை பார்த்து, மிக்க மகிழ்ச்சி வெளிப்பட பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்கிறேன். பத்திரிக்கை படித்தவாறு ஒற்றை மொழியில் பதில் சொல்வதை தவிர்பேன். என்பொருட்டு அவர் நன்றி சொல்வதை விட்டு, இத்தனை காலம் அவரின் சின்ன சந்தோசத்தை நிறைவேற்றிட முன்வராமல் இருந்ததற்காக வருத்தபடுகிறேன். இன்று முதல் அவர்களின் சந்தோசத்திற்காக என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்.

அவர்கள் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் எல்லா ஆசைகளையும், இனியும் பேர குழந்தைகளை எண்ணி விட்டுவிட வேண்டியதில்லை. அவர்கட்கும் நியாயமான ஆசைகள் நெஞ்சத்தில் உண்டு.

அக்கறையோடு பெற்றோரை காத்திடுங்கள். உங்கள் பெற்றோர் விலைமதிக்க முடியாதவர்கள்!

தொடரும் குதூகலம் - டாம் மற்றும் ஜெர்ரி


கண்கள் களைப்படைந்த பொழுதுகளிலும், மனம் உற்சாகம் இழந்து, சிக்கல்களில் நீந்துகிற நாட்களிலும், அந்த நிமிடங்களில் குதுகலத்தை மீட்டு தருவது எளிதல்ல. என் வரையில் அந்த பணியை சிறப்புற செய்பவை "TOM" பூனையும் "JERRY" எலியும். இவை எந்த மனிதனையும் குதுகலிக்க வல்லவை. இதற்கு பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடில்லை.

குழந்தையாய் இருக்கிற நாட்களில், நாம் நம்மோடு மகிழ்ச்சியையும் மற்றொரு ஆடையாய் அணிந்திருப்போம். துள்ளும் நடையும் , வெடி சிரிப்புமாய், கூத்தும் கும்மாளமும் நம்மோடு இயைந்திருக்கும். வளர்கிற பொழுதுகளில் அவை ஒவ்வொன்றாய் நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல் விடை பெற்றுவிட்டன. நம் முகத்தில் சிரிப்பு அமர்ந்திருக்கும் தருணங்கள் மிக மிக அரிதாகிவிட்டன.

இழந்த சிரிப்பை இந்த எலி பூனை கூட்டணி நிச்சயம் மீட்டு எடுக்கும் வல்லமை கொண்டவை . மனிதனுக்குள் இருக்கும் சண்டைகளை, மனிதனுக்குள் இருக்கும் கோபத்தை, மனிதனுக்குள் இருக்கும் கபடத்தை விலங்குகளுக்கு பொருத்தி பார்த்துள்ளோம். இது மொத்தத்தில் நம்மை நாமே உற்று நோக்குவதே. ஆனால் அது இவ்வளவு வேடிக்கையாய் இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

பூனையை சோதனை குழாயில் நிரப்பினால் எப்படி இருக்கும்? பூனை, எலியை கொன்றிட ரயில் ஓட்டினால் எப்படி இருக்கும்? பூனை பேயை கண்டு பயந்தால் எப்படி இருக்கும்? என்று முடிவில்லாத கேள்விகளுக்கு விடைதர முயன்று இருக்கிறார்கள். பூனையை குதூகல உலகத்துக்கு அழைத்து வந்தால் இவ்வளவு விஷயங்கள் நடைபெறும் என்பது அபூர்வ கற்பனையே. எல்லா தருணங்களிலும் அததற்கான உடை சரியாக பொருந்துகிறது.

அனைத்து தருணங்களிலும், எலி செய்கிற சேஷ்டையும், அதனால் பூனை கோபம் கொள்வதும் எலியை துரத்தி பூனை செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் இதை இவ்வளவு கதைகளாய், தொடர்ந்து எடுத்து செல்ல முடியுமா? வற்றாத கற்பனைக்கு நிச்சயம் சவாலானதே. ஆனால் எந்த தொடரை பார்த்தாலும் , சலிப்பு தோன்றுவதில்லை. அற்புதமான காலத்தை விஞ்சி நிற்கும் இனிய படைப்பு.

டாம் பூனைக்கும், ஜெர்ரி எலிக்கும் நடக்கும் முடிவில்லாத யுத்தம் இந்த தொடர், ஹன்னா மற்றும் பார்பரா எனும் இருவரால் மொத்தம் நூற்றி பதினாலு 'டாம் அண்ட் ஜெர்ரி' தொடர்கள் எழுதப்பட்டு இயக்கப்பட்டன. இது ஏழு முறை அகாடமி விருது பெற்ற சிறப்புடையது. இதற்கு முன் இதே கார்டூன் அனிமேஷன் பிரிவில் 'வால்ட் டிஸ்னி' யின் 'சில்லி சிம்போனி' பெற்றுள்ளது.

இந்த தொடரின், கதை மட்டும் நாயகன் இல்லை. கதை முழுதும் பின் தொடரும் பின்னணி இசை கதைக்கு ஊயிரோட்டம் கொடுக்கிறது. அபாய கட்டங்கள், குதூகல கட்டங்கள் என இசை அற்புதமாக பொருந்துகிறது. இசையை நீக்கி விட்டு பார்த்தால் அங்கே ஒன்றுமில்லை. கதையோடு இசையும் கைகோர்த்து மாபெரும் படைப்பை தந்திருக்கிறது.

Thursday, December 25, 2008

இல. செ. க. வின் கிராமத்து ஓவியங்கள்


தன்னம்பிக்கை இதழின் நிறுவனரும், வளரும் வேளான்மை இதழின் நிறுவன ஆசிரியருமான இல. செ. க. வின் கிராமத்து ஓவியங்கள் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இந்த நூல் எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுரிகளில் துணை நூலாகவும் அமைந்து இருந்த சிறப்புடையது.

ராசிபுரத்திற்கு அருகே பிறந்தவர் இல. செ. கந்தசாமி அவர்கள். பள்ளி ஆசிரியராக துவங்கியவர், பின் நாளில் கோவை வேளாண் பல்கலை துறை தலைவராக பணியாற்றினார். தமிழில் முதன் முயற்சியாக மனித நம்பிக்கையை மீட்டு எடுக்கும் நோக்கில் தன்னம்பிக்கை நூல் உதயமானது.

கிராமத்து ஓவியங்கள் நூலிற்கு வல்லிக்கண்ணன் அவர்கள் முன்னுரை வரைந்துள்ளார். இந்த நூல் நடை சற்றே வித்தியாசப்படுகிறது. இந்த நூலின் கதை மாந்தர்கள் மூலமாக அவர்களின் எண்ணத்தில் கதையை நகர்த்தி சென்றுள்ளார். நூலின் முன்னுரையில், ஆசிரியர், தன் நோக்கத்தை தெரிவிக்கிறார். ஒவ்வொருவரின் காலமும் விலைமதிக்க முடியாதது. என்னுடைய நோக்கம் யாருடைய நேரத்தையும் வீணாக்குவது அல்ல என சொல்லி துவங்குகிறார்.

அவர் படம் பிடிக்கும் கிராமம் இன்றைய நாட்களுக்கும் அப்படியே பொருந்துகிறது. சமூக நாவலாக இந்த நூலை தந்துள்ளார் ஆசிரியர். தனது பாத்திரங்கள் மூலம் நல்லதொரு கிராமம் எப்படி அமைய வேண்டும் என்பதை சொல்லி செல்கிறார். இதில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவரும் சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் மக்களே. ஊர் தோறும் தொடரும் குடிப்பழக்கம் என்றும் சக மனிதனின் அடையாளமாகி விட்டது. கிராம பொருளாதாரத்தின் மிகப்பெரும் பங்கு இன்றும் மது அருந்தும் இடத்தில் தான் செலவிடப்படுகிறது. அவர் சுட்டி செல்லும் திரை படங்கள் போன்றே இன்றும் சமூக அக்கறை அற்றவை மலிந்துவிட்டன. சுய லாபத்திற்காக அரசியல் செய்வது நாள்தொறும் பெருகிவருகிறது.

ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாய், தன் தேவைகளை தானே நிறைவேற்றும் வல்லமை கொண்டதாய் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறார். மனிதரிடம் உள்ள பிற்போக்குத்தனம், ஏற்ற தாழ்வுகள், இளைய சமுதாயத்திடம் என்றும் உள்ள தடுமாற்றம் என மனித வாழ்விற்கு தேவையான கொள்கையோடு நாவல் நகர்கிறது. வாழ்விற்கு நல்ல சிந்தையை அறிமுகப்படுத்தும் முனைப்பு ஆசிரியரின் எளிய நடையில் பளிச்சிடுகிறது.

எழுத்துக்கள் மனித வாழ்விற்கு எந்நாளும் உரம் இடுகின்றன. அந்த வகையில் வந்த, வாழ்வின் உன்னதத்தை அறிமுகம் செய்யும் அரிய நூல் இது.

புத்தகத்தில் இடம்பெறும் சில சிந்தனைகள்:

  • அரும்புவதற்கு என்றும், மலர்வதற்கு என்றும், காய்ப்பதற்கு என்றும், கனிவதற்கு என்றும் ஒரு காலம் இருக்கின்றதல்லவா? சிலவற்றை அடைவதற்கு அந்த காலம் வரும் வரை பொறுத்திருக்கவும் வேண்டும்.
  • புகழ்ச்சி மிகப்பெரிய மயக்கத்தை உண்டாக்கிவிடும். அறிவை வேலை செய்ய விடாமல் மழுங்க செய்துவிடும். புகழ்ச்சிக்கு அடிமையாகி தங்களை இழந்தவர்கள் மிகப்பலர்.
  • வாழ்கையில் வருகின்ற துன்பமும், தோல்வியும் தான் மனிதனை முழுமையான மனிதனாக்குகிறது.
  • வாழ்கையில் அழுத்தமான குறிக்கோள் இருந்தால் மனிதன் அதை நோக்கியே சென்று கொண்டிருப்பான். அதனால் தவறுகள் அதிகம் நிகழாது.
  • சிதைந்த கனவின் துணுக்குகளை தழுவிக்கொண்டு சோர்ந்து கிடைப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை. வெறுமே 'கடந்த காலம்' என்ற இரும்பு சங்கிலி கொண்டு மனதை கட்டி வைக்க முடியாது. ' வருங்காலம் ' என்ற கருட சிறகு மனதுக்கு பெருவரமாக கிடைத்திருக்கிறது. கனவு ஒன்று காண்பது; அதை மலர்விப்பது; நடைமுறையில் அதை உண்மைப்படுத்துவது; அப்படி படுகிற பாட்டில் ஆனந்தம் கொள்ளை கொள்வது. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக அந்த கனவு சிதைந்து அழிந்தாலும், சிறிதும் சோர்வுறாமல் அதன் துண்டுகளின்களின் மீது, ரத்தம் தோய்ந்த காலால் நடந்து வேறொரு கனவை நோக்கி ஓடுவது. இது தான் மனித மனப்பண்பு - எனும் காண்டேகரின் சிந்தனை.
பதிப்பு: விஜயா பதிப்பகம் - கோவை


Sunday, November 30, 2008

முதிய மனம் - ஒரு பார்வை



இன்றைய நாட்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் முதியவர்களை பெரும் சுமை என எண்ணும் நிலை அதிகரித்து வருகிறது. நிறைய குடும்பங்களில் மகனாலும், பேரகுழந்தைகளாலும் முதியவர்கள் கேளிக்கைக்கு இலக்காகிறார்கள். முதிய பருவத்தை தொட்டவுடன் வாழ்வு ஒன்றும் அஸ்தமிப்பதில்லை. அவர்கட்கும் பொழுது விடிகின்றதே!

இளமையில் பூரிப்போடு திகழ்ந்த அந்த முகங்களில் இன்று சுருக்கங்கள். காலம் முழுதும் தன்னை சார்ந்த மனிதர்கட்காக சிந்தித்த நல்ல இதயங்கள் பின்பு ரத்தம் சிந்துகின்றன.

உணவு உண்ணும் போது இலையில் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலை இலைகளா முதியவர்கள்? வெளி நாடுகளில் வாழும் பிள்ளைகள் தம் பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புவது ஒருபுறம் என்றால் மற்றொரு சாரார் முதியவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கவும், உணவு அளித்திடவும் மறுக்கிறார்கள். பெருசு என்ற அடைமொழியோடு பரணில் அமர வேண்டிய பொருளாய் உணர்கிறார்கள்.

அந்த முதிய மனம் ஒரு நாளும் தம் பிள்ளைகளை பெரும் சுமையாக கருதியதில்லை. தம் வறுமை நிலையிலும், எல்லா தருணத்திலும் பிள்ளைகட்கு நல்ல உணவையும், கல்வியையும் தம் தகுதிக்கு அதிகமாகவே தந்திருக்கிறார்கள். அதனால் தான் நாம் நன்றி உணர்ச்சியோடு கல் எறிகிறோம்.

அவர்கள் தம் வளர்த்தல் பொருட்டு எந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் முதிய நாட்களில் அவர்களின் சுயமரியாதை கேள்விக்குறியாகிறது. சிறிய நலவிசாரிப்புகள், தம் கருத்தை பகிர்ந்துகொள்ள, உலகை அறிந்துகொள்ள, தம்மோடு இயல்பாய் புன்னகை பூத்திட எல்லா நாட்களிலும் தவமியற்றுகின்றனர்.

மரநிழலில் இளைப்பாறுவது போன்றதே முதுமையும். அதற்கே உண்டான அர்த்தமும் அழகும் அதற்கு உண்டு. கார்டூனிஸ்ட் மதன் (Madhan) ஒருமுறை தந்தையை பற்றி ஹாய் மதன் பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டார். இது பெரும்பாலும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு பொருத்தமானதே.

சிறு வயதுகளில் ஒரு குழந்தை தன் தந்தைக்கு உலகில் அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் இருக்கும். பதின்வயதுகளில் அந்த எண்ணம் மாறி தன் தந்தைக்கு எதுவும் சரிவர தெரியாது என்ற மனம் வாய்க்கும். முப்பதுகளின் துவக்கத்தில் இருவர்க்கும் உள்ள திரை விலகி தன் வாழ்வில் சிக்கல்கள் வரும் எல்லா தருணத்திலும் அவற்றை எதிர்கொள்ள தந்தையின் உதவியை நாடுவான். நாற்பதுகளில் அதன் பின்பும் தன் தந்தை இல்லையே, தனக்கு சரியாக வழிகாட்டிட அந்த அனுபவ இதயம் இல்லையே என்ற நிலை உருவாகும். - எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள் இவை.

கல்லூரி நாளில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. அரசனொருவன் முதியவர்கள் சமூகத்திற்கு பாரமானவர்கள் என கருதி அனைவரையும் கொன்றிட ஆணையிட்டான். ஆனால் தந்தை மீது மதிப்புடைய ஒரு மனிதன் தன் தந்தையை பாதாள அறையில் வைத்து பராமரிப்பான். அதன் பிறகு கால மற்றத்தினில் அந்த நாடு பஞ்சத்தில் அவதியுறும். யாருக்கும் அதை போக்கிட வழி தெரியவில்லை. கையில் விதைக்க தானியமில்லை. ஆனால் மழை பொழிவு இருந்தது. இந்த நிலையில் தந்தையை பராமரித்து வந்த மனிதன் மட்டும் அறுவடை செய்து பயன் பெற்றான். செய்தி மன்னனின் காதுக்கு எட்டுகின்றது. ஆச்சர்யப்பட்ட மன்னன் அந்த மனிதனிடம் விசாரித்தான். அந்த மனிதன் தன் தந்தையின் அறிவுரைப்படி தான் செயல்பட்டதை விவரித்தான்.

அறுவடை காலத்தில் வண்டிகளில் தானியங்கள் எடுத்து செல்லும் பொழுது வழியெங்கும் அது சிதற வாய்ப்புண்டு . அதனால் அவனும் நடைபாதையை உழவு செய்து தானியங்கள் முளைத்து பயன் பெற்றதாய் முதியவர்களின் அருமையை விளக்கி கதை செல்லும்.

Sunday, September 28, 2008

மஹாபாரதமும் கிளை கதைகளும்


மஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி.
S. ராமகிருஷ்ணன்(S.Ramakrishnan) அவர்கள் குறிப்பிடுவது போல் பாரதத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை பாரதங்கள் உலவுகின்றன.

நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த மூன்று கதைகள் இங்கே.

முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துடியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை.

துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகின்றன. அவற்றையும் எடுத்து புகட்டுகிறான். முதிய மனிதர் களைப்பு விடை பெற்றவராய் நீங்கள் கர்ணன் தானே என வினவுகிறான். தற்போது முன் சென்ற பாவி உணவிடும் இடத்தை சுட்டிசென்றதாய் வருந்துகிறார் . கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். முதியவர் தன் களைப்பு நீங்கியதை சொல்லி பயணத்தை தொடர்கிறார். உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதை கொண்டே நாம் உணரலாம்.

இன்னுமொரு புனைவு
அர்ஜுனனுக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். எல்லோரும் கர்ணனை பெரும் வள்ளலாய் கொண்டாடுகிறார்களே என்பதே. உண்மையில் நம்மை விட கர்ணன் ஒரு போதும் பெரும் வள்ளல் அல்ல என்பது அவன் எண்ணம். தன் கருத்தை கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்டான். கிருஷ்ணா, எல்லோரும் ஏன் கர்ணனை மட்டும் இப்படி வள்ளலாய் கொண்டாடுகிறார்கள். நான் எதில் குறைந்து போனேன்? என்னை அப்படி யாரும் சொல்லவில்லையே என வருந்தினான். கண்ணனும் தனக்கே உரித்தான தனி புன்னகையோடு நாளை உங்கள் இருவரில் யார் வள்ளல் என்பதை நிருபிக்கிறேன் என்று புறப்பட்டான்.

அடுத்த நாள் உதயத்தில் கண்ணன் தனது சக்தியால் இரண்டு தங்க மலைகளை உருவாக்குகிறான். கர்ணனையும் அர்ஜுனனையும் அழைத்து இவை உங்கள் சொத்து என சொல்லி புறப்படுகிறான். இருவர்க்கும் ஒரு நிபந்தனை..

அந்த நாளின் முடிவில் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தங்க மலைகளை தானம் செய்ய வேண்டும் .
அர்ஜுனன் தன் காரியத்தில் கண்ணானான். வருகின்ற வறியவர் அனைவர்க்கும் தங்க மலைகளை வெட்டி வெட்டி அளித்தபடியிருந்தான். அந்த நாளும் முடிவுக்கு வருகிறது. அர்ஜுனனுக்கு ஒரே பெருமை. அந்த மலையில் குடைந்து நிறைய தங்கத்தை வெட்டி தந்திருந்தான். கர்ணன் ஒருபோதும் இவ்வளவு மலையை தானமாக தந்திருக்க முடியாது எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அந்த தருணத்தில் கிருஷ்ணனும் அர்ஜுனனை காண வந்துவிட்டார். அர்ஜுனனும் நிறைய பெருமிதத்தோடு தான் அன்று தானம் செய்த மலை பகுதியை சுட்டி காண்பித்தான். ஆனால் கிருஷ்ணன் கர்ணன் வென்று விட்டதை குறிப்பிட்டார். அர்ஜுனனால் நம்பமுடியவில்லை .
காரணத்தை கிருஷ்ணனிடமே கேட்டான். கர்ணன் எவ்விதமாய் தானமளித்தான் என்பது அவனுள் எழுந்த முதல் வினா..

கிருஷ்ணன் அதித புன்னகையோடு பதில் சொன்னான். இன்று காலை உன்னை போல் கர்ணனுக்கு ஒரு மலையை கொடுத்தேன். அவனிடம் ஒரு மனிதன் யாசித்து வந்தான். கர்ணனும் அந்த மலையை சுட்டி காட்டி இந்த மலையை வைத்துக்கொள் என தன் வழியே அடுத்த காரியத்துக்கு புறப்பட்டு விட்டான். கர்ணனின் தான நிகழ்வு காலையிலேயே முடிவுக்கு வந்து விட்டதாய் சொன்னான். அதன் பின் அர்ஜுனனுக்கு தான் பேச்சு எழவில்லை.

மற்றுமொரு புனைவு :
அந்த நாளில் பாண்டவர் அனைவரும் கானகத்தில் உள்ளனர். அது பாண்டவர்களின் தந்தை பாண்டுவின் இறுதி கணங்கள். பாண்டுவுக்கு தான் மறைந்த பின் இந்த உலகில் தன் மைந்தர்கள் எப்படி வாழ போகிறார்கள் என்கிற கவலை. அவரது மனம் தீர யோசித்தது. தன் புதல்வர்களை அருகே அழைத்த அவர், தன் மறைவுக்கு பின் அவரது உடலை உண்டுவிடுமாறு பணித்தார். அப்படி செய்தால் அவர்கட்கு உலகில் எந்த தீங்கும் உருவாகாது என்பது அவர் கணிப்பு.

பாண்டுவும் மறைந்தார். அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணன், பாண்டவர்களை தடுத்து நர மாமிசம் புசிப்பது மனிதர்களின் இயல்பு அல்ல என விளக்கினார். பின்பு பாண்டுவின் உடலை எரித்திட பாண்டவர்களை திசைகொருவராய் அனுப்பி விறகு முதலான பொருட்களை திரட்ட பணித்தார்.

பாண்டவர்களும் கண்ணனும் விறகு எடுத்து வர சென்றனர். ஆனால் சகாதேவனுக்கு ஒரு கேள்வி குழவியாய் குடைந்தது. அவனுக்கு கால காலமாய் மனிதனை தொடரும் முதுமொழி நினைவுக்கு வந்தது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அல்லவா என்பது அவன் எண்ணம். அதை அறிய தந்தையின் உடல் அருகே சென்றான். முதலில் தென்பட்டது தந்தையின் பெருவிரல். ஒரே கடியில் பெருவிரல் வாய்க்குள் அகப்பட்டது. பெருவிரல் உண்டபின், சகாதேவனுக்கு முக்காலமும் அறிகிற அறிய ஞானம் வந்தது.
அவனால் அனைத்து காலமும் அறிய இயலும். ஏறக்குறைய கடவுளால் மட்டுமே முடித்த விஷயம் மனிதனுக்கு வாய்த்த நிமிடம் அது.

அதே தருணத்தில் கண்ணனும் அவ்விடம் நிறைய கோபமாய் தோன்றினார். தோன்றிய கண்ணன் என்ன காரியம் செய்தாய் என திட்டியபடி நீ தெரிந்தவற்றை மற்றவர்க்கு சொன்னால், உன் தலை சிதறிவிடும் என சபித்தான். பதிலுக்கு சகாதேவன் எங்கள் ஐந்து பேரையும் காக்க தவறினால் உன் தலை சிதறி விடும் என சபித்தான்.

இருவரின் எண்ணமும் நிலை கொள்கின்றன. பின் நாட்களில் கண்ணனே ஐவரையும் போரில் காக்கிறான். முதுமையில் முதலில் உலகை விடுபவனும் அவனே. சாஸ்திரத்தில் கெட்டிக்காரன் சகாதேவன் எனும் முதுமொழி முகிழ்த்து வந்தது இதன் தொடர்ச்சி தானோ?




Sunday, August 24, 2008

சிறிய உள்ளம்; பெரிய உலகம்


குழந்தைகள்! இறை தொட்டு ஆசிர்வதித்த மகோன்னதங்கள். ஒவ்வொரு மழலையும் மலரும் போது உலகுக்கு உணர்த்த ஆயிரம் விஷயங்களோடே வருகின்றது. அதற்கு முன்பும் அந்த கலவையோடு எந்த உயிரும் வரவில்லை. அதற்கு பின்பும் அந்த கலவையோடு எந்த உயிரும் பிறப்பதில்லை. அபூர்வமான தனித்துவம் இறைவனால், இயற்கையால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

வளர்கின்ற பருவத்தில், உலகின் அத்தனை விஷயங்களும் பார்ப்பதும் கேட்பதும் அந்த புதிய உயிர்க்கு புதிது. ஒரு புதிய பொருளை தொட்டு உணர்கிற நிமிடங்கள் அலாதியானவை . ஏன் அழகானவையும் கூட. அது தண்ணீராயினும் சரி, தீயாயினும் சரி பெறுகின்ற பாடங்கள் எந்த ஆசானாலும் கற்று தர முடியாதவையே.

குழந்தைகள் "இக்கணத்தில் வாழ்" எனும் புத்தனின் வார்த்தைகளை சரியாக பின்பற்றுவர். குழந்தைகளின் உலகம் பிடிவாதத்தால் நிரம்பியதே. வளாந்த நம்மில் பலரும் அப்படியேதான் இருக்கிறோம். குழந்தை கடையில் ஒரு பொம்மையை பார்த்தால் உடனே அது தன் கையில் இருக்க வேண்டும் என ஆசைப்படும். அதை பெற அத்தனை சாம பேத தான தண்டத்தையும் முன்வைக்கும். பல தருணத்தில் கண்கள் அருவியாகும் . அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பொம்மையை வீசிவிட்டு மற்றொரு உலகில் மகிழ்ச்சியோடு சஞ்சரித்து இருக்கும். பத்து நிமிடம் முன் அழுத குழந்தை இது என்பதற்கு அதன் கன்னத்தில் சுடர்விடும் ஒரு சில கண்ணீர் முத்துகளே சாட்சி. புத்தனின் அரிய தத்துவத்தை தம்மை அறியாமலே நடைமுறை படுத்துவபவர்கள்.

வளர்கின்ற தருணங்களில் மனம் விசாலமடையும். அந்த பக்குவம் பெறாத மனிதர்கள் நிறைய பிடிவாதத்துடன் வாழ்நாள் முழுவதும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள்.


சமீபத்தில் நான் கேட்டுணர்ந்த படம் "தாரே ஜமீன் பர்" . அமீர்கானால் இயக்கி நடிக்கப்பட்ட இந்த படம் கவனிக்காமலே விடப்படும், சிறுவர்களின் தனித்தன்மை பற்றி பேசுகின்றது. எதையும் புரிந்து படிக்க முடியாத நோய்மையும்(dyslexic) இங்கு கோடிட பட்டுள்ளது.



ஒவ்வொரு மனிதனும் அபூர்வமான தனித்தன்மையோடு பிறக்கிறார்கள்; வளர்க்கிறார்கள். நாம் அந்த தனித்தன்மையை கண்டறிந்து ஊக்குவிக்கிறோமா ? என்பதே கேள்வி . இதற்கான பதில் கசப்பனதே! ஒவ்வொரு குழந்தையும் அதன் வெளி தோற்றம் சூட்டிகையை வைத்தே அனைவராலும் அறியப்படுகிறார்கள். அதன் தனித்துவத்தை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை.


நம் முன் இருக்கும் பெரும்பாலான சிந்தனையாளர்கள் , சாதனையாளர்கள் தங்கள் தனித்துவம் மூலமே அறியப்பட்டிருக்கிறார்கள். பாடகர்கள், விளையாட்டு வீரர்கள், உலகம் வியக்கும் இசை மேதைகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என அத்தனை பேரும் கால நதி அலையில் நிற்கும் அபூர்வ சாம்பியன்கள்.


ஒரு குழந்தையை அது பெறும் மதிப்பெண்ணை வைத்து அறிவற்றவன் என ஆசிரியராலும் ,மற்றோராலும் முத்திரை குத்தப்படும் நிமிடங்கள் மிக மிக கடினமானவை. அந்த நிமிடம் வரை நம்மோடு நிறைய கனவுகளோடு வலம் வந்த இளம் குருத்துக்கள் அப்போது தான் கூம்பி போகின்றன. அந்த நிமிடத்தில் இருந்து வளர்கிற எல்லா நாட்களிலும் வார்த்தை அம்புகளாலேயே வதைபடுகிறார்கள். தான் அறிவற்றவன் என்ற தோல்வி மனப்பான்மை அங்கே கிளைவிடுகிறது. உண்மை அதற்கு நேர் மாறாக உள்ளது. சிறு வயதில் தனி தன்மையை வெளிப்படுத்த அமையும் ஓரிரு தருணங்களில் கூட ஆசிரியர்கள் கல்வி மட்டுமே அளவுகோலாக எண்ணுகிறார்கள்.


கல்லுரிகளும் பல்கலைகழகங்களும் மிக அதிகம் வளர்ந்து விட்ட இன்றைய நாளில் எத்தனை பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை போதிக்கிறார்கள்! தொடர்கின்ற சிந்தனையாலும், தளராத முயற்சியாலும் மட்டுமே உலகில் அனைத்தும் சாத்தியப்பட்டு இருக்கின்றன எனும் அறிய பாடமல்லவா நம் அனைவர்க்கும் பாலபாடமாய் அமைய வேண்டியது. சலிக்காத உழைப்போடு, உற்சாகம், ஈடுபாடு இவற்றை நாம் போதிக்கின்றோமா? நல்ல சமுதாயத்திற்கு இவை அல்லவா உரமாய் இடப்பட வேண்டியவை. இதை பற்றி கல்வியாளர்களும் பெற்றோரும் ஒருமித்து சிந்திக்க வேண்டிய தருணமிது.


வருங்காலத்தில் தன் குழந்தை மருத்துவன், பொறியாளன் என வரவேண்டும் என திட்டமிடுகிற பெற்றோர் எவ்வளவு துரம் தம் குழந்தைக்கு முயற்சியை கற்று கொடுக்கிறார்கள்? பெற்றோரால் சரியாக செய்ய முடிந்தது ஒப்பிடு மட்டுமே. பக்கத்து வீட்டு குழந்தையோடு மட்டுமே நம் குழந்தையை ஒப்பீடு செய்கிறோம்.

"சித்திரமும் கைப்பழக்கம் ,
செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா".

லிங்கனை, எடிசனை, ஏஞ்சலோவை , பீத்தோவன் , பாரதி, தாகூர் ஏன் நம் முன் நிற்கும் எத்தனையோ சாதனையாளர்கள் தடை கற்களை படி கற்களாக மாற்றியவர்கள் மட்டுமே! அவர்களின் வெற்றியை கொண்டாடும் நாம் தோல்விகளால் துவண்டு விடாத அவர்களின் எண்ண முகவரிகளை வெளிச்சமிடலாமே!


வலிவான மன உறுதியே நம் குழந்தைகட்கு வேண்டும். எண்ணங்களே மனிதனை ஆக்கவோ அழிக்கவோ செய்கின்றன. நெப்போலியன் ஹில்லின்(Nepolean Hill) அபூர்வ வாசகம் "What your mind consumes and believes that can be achieved" என் நினைவுக்கு வருகிறது.


பாட புத்தகங்கள் மட்டுமின்றி கற்றல் அதற்கு வெளியேயும் உள்ளது. ஒரு கம்பளி பூச்சி சிறகடிக்கும் வண்ணத்து பூச்சியாய் மாறும் என்பது அது புழுவாய் இருக்கின்ற தருணங்களில் தெரிவதில்லை. அது வண்ணத்து பூச்சியாய் மாறும் என்பதற்கு அதன் தோற்றத்தில் எந்த அடையாளமும் இல்லை. அதே போல் எந்த குழந்தையும் வரலாற்றில் இடம்பெறலாம். அது குழந்தையாய் இருக்கிற தருணத்தில் இருந்து அதன் தனி தன்மையை வளர்த்து வார்த்தெடுப்போம். நம் கனவு வண்ணத்து பூச்சி மட்டுமே.


Sunday, June 29, 2008

கோபமெனும் நீருற்று




நம்மில் அனைவரும் பாரபட்சமின்றி கோபமுருகிறோம். பீறிட்டு கிளம்பும் நீருற்று போல யாவரிடமும் புறப்பட்டுக்கொண்டே இருக்கிறது கோபம். பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லை அதற்கு. காய சண்டிகை விட்டு சென்ற அட்சய பாத்திரம் இன்றும் நம்மிடையேதான் உள்ளது. ஒரே வித்தியாசம். அன்னம் புறப்படும் இடத்தினில் கோபம்.

கோபமுறும் தருணத்தில் கண்கள் மாறுதலுருகின்றன. கைகள் நடுக்கமடைகின்றது. பதற்றம் நம்மை அறியாமல் நம்மை ஆட்கொள்கிறது. வார்த்தை பிரயோகம் தடுமாறுகிறது. நம்மை எப்போதும் உந்தி தள்ளும் உற்சாகம் வடிந்து போகின்றது. ஒரே ஒரு நிமிடத்தில் எழுகிற கோபம் நாள் முழுவதும் மனதையும் உடலையும் ஒருசேர பாதிக்கிறது.

பாரதி(Bharathi) உதிர்த்த "ரௌத்திரம் பழகேல்" என்ற அற்புத வாக்கியம் அனர்த்தப்படுத்திக்கொண்டோமோ. கோபத்தை ஏதோ தம் அடையாளமாகவோ , வலிய ஆயுதமாகவோ நாம் கையில் எடுத்துக்கொண்டோம். சாதாரண அரிப்புக்கு கொள்ளி கட்டையால் தலை சொரிந்துகொள்கிறோம். அவ்வளவே! பிறரிடம் பொருத்த முற்படுவது முள் கிரிடம் என்பதே பல நேரம் நாம் அறிவதில்லை. ஒரு நாளில் பயணம் செல்ல நேர்ந்தால் பயணம் நெடுகிலும் கோபத்தின் வீர்யத்தை உணரமுடிகிறது. தனி மனிதன் மேல் எழுகிற கோபம் நாட்களின் நகர்வில் வெறுப்பாய் உறைந்து விடுகிறது. விதை விருட்சமாகும் நிகழ்வு அது. கோபமும் வெறுப்பும் ஒட்டிபிறந்த இரட்டை குழந்தைகள்.

சமீபத்தில் காண நேர்ந்த சம்பவம் என்னுள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம் என்ற கேள்வி எழாமல் இல்லை என்னுள்.. பேருந்தில் அருகருகே இரு சிறுவர்கள் தந்தையுடன் பயணிக்கின்றார்கள். சிறுவர்கள் இருவரும் பதின்வயதின் துவக்கத்தில் இருப்பவர்கள். நீண்ட பயணத்தின் தொடர் பயணியாய் உறக்கம் அவர்களோடு. பயணம் முடிவுறும் தருணத்தில் அண்ணன் தம்பியை எழுப்ப முயல்கிறான். நித்திரை முடிந்தபாடில்லை அவனுக்கு. கனவுகளோடு மேலும் சற்றே நடைபயிலும் யத்தனம் தம்பிக்கு. அண்ணன் தம்பியின் பின்தலையில் தட்ட துவங்குகிறான். தூறல் அடைமழை ஆனதுபோல் அடியும் பலமாகிறது. ஏய் "எரிச்சல் படுத்தாதே! ஓங்கி அறைந்து விடுவேன்!" என்கிற பலமான வசவுகள் புறப்படுகின்றன

இதை கண்ட நான் நிறைய அதிர்ச்சிக்கு உள்ளானேன். இன்றைய குழந்தைகளின் உலகம் எரிச்சலும் கோபமும் சூழ்ந்து உள்ளது போலும். அன்பும், நல்லிணக்கமும் துள்ளல் துறுதுறுப்புமாய் வளைய வரவேண்டிய இளம் தளிர்கள் ஏன் இப்படி மாறிப்போனார்கள். குழந்தைகளின் மனம் இறை உறையும் நந்தவனங்கள். அமைதியும் ஆனந்தமும் பெருகுகிற நிருற்றுக்கள் அவை. களிப்பும் கும்மாளமும் குதுகலமும் வெடித்து புறப்படும் சிரிப்புமாய் பரந்த உலகை சிறைபடுத்த துடிக்கும் தளிர் கரங்கள் அவர்களுடையவை. எந்த குழந்தையும் வீட்டை நான்கு சுவர்களால் தீர்மானிக்க முயல்வதில்லை. பரந்த இந்த பிரபஞ்சம் முழுவதும் அதற்கு சொந்தம்! அமைதி தவள வேண்டிய அந்த காட்டில் பெரு நெருப்பை உருவாக்கியது யார்? நேசம் துளிர்க்கிற நெஞ்சம் நெருஞ்சி முளைத்த காடாய் போய்விட்டது எதனால் ? கேள்விகள்! கேள்விகள்!

பிரிதொரு சம்பவம்! அதே நாளில் தொடரும் பிரிதொரு பேருந்து பயணம் . சக பயணியரிடை நடந்த உரையாடல் . ஒருவர் முதியவர் , மற்றவர் நடு வயதினர்; வயதை மீறிய வசைபாடல். வார்த்தைகள் கடினமாக பேருந்திலிருந்து இறங்கிய முதியவரின் மைந்தன் மீண்டும் படியேறி தாக்கும் நிலைக்கு பிரயத்தனப்பட்டு விட்டான்.

இந்த நிலைக்கு யார் காரணம். ஒரு குழந்தையும் ஒரு இளைஞனும் கோபமுற நிமிடங்களே போதுமானதாய் அமைகின்றன. சாந்தமடையவே நேரமாகிறது . குடிபோதையில் மட்டுமல்ல கோபமுறும்போதும் மூளை செயல் இழக்கிறது. எந்த விஷயத்தையும் நாம் மூளைக்கோ இதயத்திற்கோ எடுத்து செல்ல முற்படுவதில்லை. அந்தந்த நிமிடங்கள். அதே நிமிட தீர்வுகள். இது தான் நமக்கு வேண்டியது. அதையே வாழ்வியல் அறமாய் பற்றியுள்ளோம். எங்கோ இருந்த் குட்டி சாத்தானை விருப்பத்தோடு நம் வரவேற்பறை வரை கொண்டு வந்துள்ளோம். அது வேறு எதுவுமல்ல. ஊடகமே அது. சரியாக பயன்படுத்தியிருந்தால் குற்றமில்லை. ஆனால் ...

ஊடகத்தில் காணும், கேட்கும் அத்தனை விஷயங்களையும் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். நம் வாழ்வாகவே எண்ணுகிறோம்! நாம் அறியாமலே நம்மை அவை நடைமாற்றம் செய்கின்றன. ஊடகம் மிக மிக வலிமையான விஷயமே. அனைத்தும் பயன்பாட்டை ஒட்டியவையே! ஆக்கத்திற்கு பயன்பட வேண்டியது புதை குழியை நோக்கி இழுக்கிறது..

சிறுவர்கள் ஊடகங்களில் தோன்றும் அத்தனை நாயகரோடும் கைகோர்த்து கொள்கிறார்கள். ஊடக நாயகன் கோபம் போன்றே கோபப்பட்டு நிழலுக்கும் நிஜதிற்குமான புரிதலின்றியே நாட்கள் நகர்கின்றன.

இந்த தருணத்தில் வாலியின்(vaali) வைர வரிகள் ஞாபகம் வருகின்றன. இது பரந்தாமன் பார்த்தனுக்கு உரைத்த சொற்கள் நாமனைவரும் புரியவேண்டியவை..

புரையற்ற புத்தியை
பேண்
காஞ்சனம் கல் ஒன்றாகக் காண்
உண்டியை குறை ஓரளவே
உதரத்தை உணவால் நிறை
தியானம் தினம் பயில்
தவிர் சோம்பல் துயில்

வெகுளி
வீக்கம் விடு
வேட்கைக்கு விடைகொடு ....

ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று
உச்சரித்து பழகு
சாந்தம்தான் தெய்வ சித்தத்திற்கு அழகு
(பாண்டவர் பூமி)